'கிரிக்'கெத்து 4: கங்குலி அன்று கழற்றிச் சுழற்றியது சட்டையை அல்ல... அது சாட்டை!

'கிரிக்'கெத்து 4: கங்குலி அன்று கழற்றிச் சுழற்றியது சட்டையை அல்ல... அது சாட்டை!
'கிரிக்'கெத்து 4: கங்குலி அன்று கழற்றிச் சுழற்றியது சட்டையை அல்ல... அது சாட்டை!

கிரிக்கெட் என்பது 'ஜென்டில்மேன் கேம்' என பொதுவாகச் சொல்வார்கள். ஆனால், அதெல்லாம் அந்தக் காலம், இப்போதுள்ள இளம் வீரர்கள் யாவரும் களத்தில் ஆவேசத்துடன் அமர்க்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆக்ரோஷத்தின் உச்சம் என்றே சொல்லலாம். இது ஒருபக்கம் இருக்கட்டும். கிரிக்கெட்டின் பிறப்பிடம் இங்கிலாந்து என்றால், அதன் 'மெக்கா' என்று அழைக்கப்படுவது லார்ட்ஸ் மைதானம். இந்த மைதானத்தில் விளையாடுவது மிகவும் கெளரவமான விஷயமாக உலகின் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் கருதுவார்கள். ஆனால், அந்த லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் சவுரவ் கங்குலி வெற்றியின் மிகுதியில் சட்டையைக் கழற்றிச் சுழற்றிய கெத்தான தருணத்தை எந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களாலும் மறக்க முடியாது.

எப்போதும் 'அம்பி'யாக இருக்கும் இந்திய அணியை 'அந்நியன்' ஆக மாற்றிய பெருமை கங்குலிக்கே சாரும் என்றால் மிகையல்ல. லார்ட்ஸில் சட்டையை கழற்றிச் சுற்றியது குறித்து கங்குலி மீது பெரும் விமர்சனம் வைக்கப்பட்டது. ஆனால், கங்குலியின் குணமே "If you are bad, I am your dad" என்பது போலேவே இருக்கும். லார்ட்ஸில் கங்குலி சட்டையைச் சுழற்றியது ஏன், அப்படி என்னதான் நடந்தது என்பது குறித்து சற்றே பின்னோக்கிப் பார்க்கலாம்.

நாட்வெஸ்ட் கோப்பை - இறுதிப் போட்டி ஜூலை 13, 2002: இந்தியா, இலங்கை, இங்கிலாந்து பங்கேற்ற நாட்வெஸ்ட் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் லார்ட்ஸ் மைதானத்தில் மோதின. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஆட்டம் ஆரம்பித்த ஏழாவது ஓவரில் முதல் விக்கெட்டாக வீழ்ந்தார் நிக் நைட். ஆனால், அதன் பின்பு கேப்டன் நாசர் ஹுசைனும், மார்க்கஸ் ட்ரஸ்கோத்திக்கும் இந்திய பவுலர்களை விளாசித் தள்ளினார்கள். 30 ஓவர்கள் ஆடிய அவர்கள், 180 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பை அமைத்தார்கள். இதில் ட்ரஸ்கோத்திக் - நாசர் ஹுசைன் இருவரும் சதமடித்தனர். இறுதியாக வந்த ஆண்டுரூ ஃபிளின்ட்டாஃப் அதிரடியாக 40 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 325 ரன்களை குவித்தது.

அந்தப் போட்டியில் 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் வீரேந்திர சேவாக்கும், கங்குலியும் இணைந்து 14.3 ஓவரில் 106 ரன்கள் குவித்தனர். ஆனால், முதலாவது விக்கெட்டாக கங்குலி ஆட்டமிழக்க, அடுத்த 40 ரன்களைக் குவிப்பதற்குள் இந்திய அணி சேவாக், டிராவிட், சச்சினை இழந்து தடுமாறியது.

ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் நம்பிக்கை போனது. இனி வெற்றிக்கான வாய்ப்பே இல்லை என நினைத்தபோதுதான் ஆபத்பாந்தவர்களாக களமிறங்கினார்கள் யுவராஜ் சிங்கும் முகமது கைஃப்பும். இவர்கள் இருவரும் இணைந்து 121 ரன்களை விளாசினார்கள். இந்தியா இலக்கை நெருங்கிக்கொண்டு வந்தது. அந்த நேரத்தில் யுவராஜ் அவுட் ஆக, மீண்டும் ஆட்டம் த்ரில்லிங்கானது.

அதன் பின்பு கடைசி ஓவரில் களத்தில் ஜாகிர் கானும், முகமது கைப்பும் இருக்கிறார்கள். 3 பந்துகள் மீதமிருக்கையில் 2 ரன் எடுக்க வேண்டிய கட்டத்தில் ஜாகிர் கான் ஃபீல்டர்களின் பக்கத்திலேயே பந்தை தட்டிவிட்டு ஓட, அது ஓவர் த்ரோ ஆக, இந்திய அணி 2 ரன்களை ஓடியே எடுத்து அபாரமான வெற்றியை சுவைத்தது.

அப்போதுதான் லார்ட்ஸ் பால்கனியில் இந்திய கேப்டன் கங்குலி தன்னுடைய ஜெர்சியை கழட்டி சுற்றியபடி வெற்றியைக் கொண்டாடி கெத்து காட்டினார். இதுவரை லார்ட்ஸ் மைதான பால்கனியின் அழிக்க முடியாத அடையாளமாக இந்த நிகழ்வு இன்னமும் இருக்கிறது. லார்ட்ஸ் மைதானத்தில் கங்குலி ஏன் அப்படி செய்தார்? அந்தச் செயலுக்கு கங்குலி பின்பு கொடுத்த பதில்தான் செமயான கெத்து.

அது: "லார்ட்ஸ் உங்களுக்கு மெக்கா என்றால், வான்கடேதான் எங்களுக்கு மெக்கா" என்றார். 2002-ஆம் ஆண்டு முன்பு இங்கிலாந்து கிரிக்கெட் அணி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தப் போட்டியில் வெற்றிப் பெற்றபோது, ஆண்டுரூ ஃபிளிண்டாஃப் ஜெர்சியை கழட்டி சுற்றினார். இதற்கு பதிலடி தரும் விதமாகதான் கங்குலி தன்னுடைய ஆக்ரோஷ கெத்தை எதற்கும் கவலைப்படாமல் லார்ட்ஸில் செய்தார்.

ஆம்... தாதா தாதாதான்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com