'கிரிக்'கெத்து 3: துயரில் துவண்டிருந்த இந்தியர்கள்... புன்னகையைத் துளிர்க்கவைத்த சச்சின்!

'கிரிக்'கெத்து 3: துயரில் துவண்டிருந்த இந்தியர்கள்... புன்னகையைத் துளிர்க்கவைத்த சச்சின்!
'கிரிக்'கெத்து 3: துயரில் துவண்டிருந்த இந்தியர்கள்... புன்னகையைத் துளிர்க்கவைத்த சச்சின்!

சில கிரிக்கெட் போட்டிகளில் மைதானத்துக்குள் நிகழும் சூழல்கள், அவற்றை மறக்க முடியாத போட்டிகளாக கொண்டு செல்லும். அதேவேளையில் மைதானத்துக்கு வெளியே அரங்கேறும் சில நிகழ்வுகளும் ஒரு வீரரின் ஆழ் நெஞ்சில் பதிந்து, அது கிரிக்'கெத்து' தருணங்களுக்கு வித்திடுவதும் உண்டு. அவ்வாறான போட்டி ஒன்று 2008-ஆம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பின்பு சென்னையில் நடந்தது. ஒட்டுமொத்த தேசமும் தீவிரவாதத் தாக்குல் நிகழ்ந்த பின்பு சோகத்தில் இருந்த தருணத்தில், தன்னுடைய அபாரமான ஆட்டத்தின் மூலம் நாட்டுக்கு வெற்றியை தேடிக் கொடுத்து, கண்ணீர் வடித்த கண்களில் மகிழ்ச்சியை காணிக்கையாக்கினார் சச்சின் டெண்டுல்கர்.

இங்கிலாந்து அணி 2008-ஆம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியது. முதலில் ஒருநாள் தொடர் நடந்தது. அப்போது, மும்பையில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி சொந்த நாட்டுக்குத் அலறியடித்துக்கொண்டு திரும்பியது. இதனையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் பங்கேற்க, பலத்த பாதுகாப்போடு சென்னை - சேப்பாக்கத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. மும்பை தீவிரவாதத் தாக்குதல் நடந்து, அடுத்து சில வாரங்களிலேயே இந்தப் போட்டி நடைபெற்றதால், ஒட்டுமொத்த உலகமும் சென்னை டெஸ்ட் நோக்கி திரும்பியது. அந்த ஆண்டுதான் இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டிருந்தார்.

டிசம்பர் 11-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 316 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 123 ரன்கள் அடித்தார். இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் இந்தியா 241 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்தியாவை எப்படியும் வீழ்த்த வேண்டும் என்று இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து 311 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது. இந்த இன்னிங்ஸிலும் ஸ்ட்ராஸ் மற்றும் காலிங்வுட் தலா 108 ரன்களை குவித்தனர்.

இதனையடுத்து நான்காம் நாள் தேநீர் இடைவேளைக்குப் பின்பு 387 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்ய இந்திய அணி களமிறங்கியது. டெஸ்ட் போட்டிகளில் நான்காவது இன்னிங்ஸில் 387 ரன்களை சேஸ் செய்வது என்பது 90 சதவீதம் எட்டாக் கனிதான். இதனால் இங்கிலாந்துக்கு நிச்சயம் வெற்றி என்று பலரும் நினைத்திருந்தனர். ஆனால், எதுவும் சாத்தியமே என நினைக்கக் கூடிய இந்திய தொடக்க ஆட்டக்காரரான சேவாக் முதல் பந்திலிருந்தே அதிரடியைக் காட்டினார். இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை சிதறவிட்ட சேவாக் 68 பந்துகளில் 83 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானார். இந்தியாவின் அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு சேவாக்கின் கெத்தான ஆட்டம் அடுத்த கட்டத்துக்கு ஒட்டுமொத்த அணியினரையும் நகர்த்தியது. நான்காம் நாள் முடிவில் இந்தியா 131 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்தது. மறுநாள் கடைசி நாள். அதில் கௌதம் கம்பீர் 66, டிராவிட் 4, லட்சுமண் 26 ரன்களில் ஆட்டமிழக்க, சேப்பாக்கத்தில் தன் கிரிக்கெட் வாழ்வில் மீண்டுமொரு பிரஷர் இன்னிங்ஸுக்கு தயாரானார் சச்சின்.

அவரோடு ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்திருந்தார் யுவராஜ் சிங். ஒரு பக்கம் சச்சின் பொறுப்பாக சீரான வேகத்தில் ரன் சேர்த்துக்கொண்டிருக்க, யுவராஜ் சிங்கோ தாறுமாறாக ஷாட்டுகளை அடித்துக்கொண்டு இருந்தார். இதில் கடுப்பான சச்சின், யுவராஜிடம் சென்று "இது சுழல் பந்துக்கு ஏதுவான ஆடுகளம், இப்படி பொறுப்பில்லாமல் ஆடக் கூடாது. நீ அவுட்டாகிவிட்டால், அடுத்த வருபவரால் இந்த பிட்சை புரிந்துகொள்ள முடியாது. அதனால் நாம் இருவரும் சேர்ந்து இந்த ஸ்கோரை சேஸ் செய்ய வேண்டும்" என்றார். "சச்சினின் கட்டளையே சாசனம்" என மனதில் நிலைநிறுத்திக்கொண்ட யுவராஜின் அடுத்தகட்ட பேட்டிங்கை உலகமே ரசித்தது.

சச்சின் - யுவராஜை அவுட் செய்ய இங்கிலாந்து வீரர்கள் திணறினர். மாலை மங்கிவிட்டது, இருந்தும் பந்து தெரியவில்லை என சச்சின் - யுவராஜ் ஆட்டத்திலிருந்து விலகாதது செம்ம கெத்தான தருணமாக அமைந்தது. இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை ஓடச் செய்தது இந்தக் கூட்டணி. ஃபீல்டர்கள் அனைவரும் பவுண்டரியில் நின்றபோதும், பவுண்டரிகளை விளாசினார் சச்சின். இந்த ஜோடி 163 ரன்களை எடுத்து, வெற்றி இலக்கை அடைந்தது.

சச்சின் 99 ரன்களில் இருந்தார். எதிர்முனையிலிருந்த யுவராஜ் சிங், ரன் எடுக்காமல் சச்சினுக்கு ஸ்ட்ரைக் கொடுத்துக் கொண்டே இருந்தார். கடைசியாக, பவுண்டரி அடித்து தன் 41-வது சதத்தை எட்டினார் சச்சின். இந்தியாவும் வெற்றி பெற்றது. சச்சின் 103 ரன்களும், யுவராஜ் சிங் 85 ரன்களும் எடுத்தனர். அப்போதுதான் சோகத்தில் இருந்த ஒட்டுமொத்த இந்தியாவும் அந்த மாலை நேர மங்கலான வெளிச்சத்தில் உயிர்பெற்றது. சேப்பாக்கம் மைதானமே மெரினா கடல் அலைகள் போல ஆர்ப்பரித்தது. அந்தப் போட்டிக்கு பின்பாக சச்சின் பேசிய வார்த்தைகளில் இருந்ததுதான் அத்தனை கெத்து.

"இது மும்பை மீதான தாக்குதல் என்று கருதவில்லை. இந்தியாவின் மீதான தாக்குதல். இதனால் மும்பை மட்டுமல்லாது ஒவ்வொரு இந்தியரும் பாதிக்கப்பட்டுள்ளார். என் மகளுடன் படிப்பவர்கள் சிலர் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். இந்த தாக்குதலின் வலியை நான் அறிவேன். இந்த கோரத் தாக்குதலிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன். இந்த வெற்றியால் மும்பை தாக்குதலை மறந்து விட முடியும் என்று சொல்லவில்லை. மாறாக, மக்கள் முகத்தில் புன்னகை துளிர்விட இந்த வெற்றி காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்" என்றார் சச்சின் கெத்தாக.

முந்தைய அத்தியாயம்: 'கிரிக்'கெத்து 2: 'தூண்டிவிட்ட' பிளின்டாஃப்... ஒரே ஓவரில் யுவராஜ் பறக்கவிட்ட 6,6,6,6,6,6 https://www.puthiyathalaimurai.com/newsview/116815/Historic-exchange---Flintoff-provoked-Yuvraj-Singh-to-blast-6-sixes-in-6-balls

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com