அசத்தும் மலைக்கிராம அரசுப்பள்ளி: ஜப்பான் செல்லும் பழங்குடியின மாணவி

அசத்தும் மலைக்கிராம அரசுப்பள்ளி: ஜப்பான் செல்லும் பழங்குடியின மாணவி
அசத்தும் மலைக்கிராம அரசுப்பள்ளி: ஜப்பான் செல்லும் பழங்குடியின மாணவி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது வெள்ளியங்காடு கிராமம். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பழங்குடியின மலைக்கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். சிறந்த கல்வி, விளையாட்டு, அறிவியல் என அனைத்து துறைகளிலும் மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்கின்றனர். கடந்த பத்தாண்டுகளாக பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் நூறு சதவிதம் தேர்ச்சி பெற்று இந்தப் பள்ளி சாதனை படைத்து வருகிறது. வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள மலைக்கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மாணவர்கள் சிரமத்தை பொருட்படுத்தாமல் பில்லூர் அணையின் நீர்த்தேக்கத்தை பரிசல்கள் மூலம் கடந்து வந்து கல்வி கற்கின்றனர். 

இந்நிலையில், மாணவர்கள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் ஜப்பான் செல்வதற்கு இப்பள்ளியில் படிக்கும் ஒரு பழங்குடியின மாணவியும், ஆசிரியையும் தேர்வாகியுள்ளது இந்த அரசுப்பள்ளிக்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது. இந்த ஆண்டு மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஜப்பான் - ஆசிய மாணவர்கள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் இருந்து அறிவியல் பாடத்தில் சிறந்து விளங்கும் மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களை ஜப்பான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் மூலம் ஜப்பானுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலிருந்தும் 96 மாணவர்கள் மற்றும் 16 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
   
இதன்படி தமிழகத்தில் இருந்து ஐந்து மாணவர்களும் ஒரு ஆசிரியையும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் காளியப்பனூர் என்ற மலைக்கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மாணவி எம்.சவிதாவும், இயற்பியல் ஆசிரியை ஆர்.மகேஸ்வரியும் தேர்வாகி கோவை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இருந்து தேர்வான ஒரே ஆசிரியை என்ற பெருமையையும் இதன் மூலம் மகேஸ்வரி பெற்றுள்ளார். 

அடர்ந்த வனத்தின் நடுவே போதிய அடிப்படை வசதிகள் கூட இல்லாத இப்பகுதி மலைக்கிராம பழங்குடியின மக்கள் சுமார் 10 கிலோ மீட்டர் நடந்தும் 40 கிலோமீட்டர் பேருந்துகளில் பயணித்தும் கோவை போன்ற நகரப்பகுதிக்கு செல்வதே மிக மிக அரிதானது. இந்நிலையில், தங்களது கிராமத்தில் இருந்து ஒரு சிறுமி மத்திய அரசின் செலவில் விமானத்தில் பறந்து ஜப்பான் செல்லவுள்ளது இப்பகுதி மலைவாழ் மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


   
இது குறித்து மாணவி சவிதாவிடம் பேசியபோது, “நான் தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள காளியப்பனூர் என்னும் மலைக்கிராமத்தில் இருந்து தினமும் 20 கிலோமீட்டர் பயணித்து வெள்ளியங்காடு அரசு பள்ளியில் கல்வி கற்க செல்கிறேன். கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 482 மதிப்பெண்கள் பெற்றேன். குறிப்பாக அறிவியல் பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெற்றதன் காரணமாக தற்போது அறிவியல் சார்ந்த கல்வி சுற்றுலாவிற்காக ஜப்பான் செல்ல தேர்வாகியுள்ளது அளவு கடந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்னை விட எனது பள்ளி ஆசிரியர்களே மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். நான் ஜப்பான் நாட்டிற்கு செல்லவுள்ளது எங்களது மலைக்கிராமத்தில் மட்டுமல்லாது இப்பகுதியில் உள்ள அனைத்து மலைக்கிராம மக்களுக்கும் ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு பிற பழங்குடியின மாணவ மாணவிகளுக்கு பெரும் ஊக்கமாக அமையும்” என்றார்.
  


இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இருந்து ஜப்பான் செல்ல தேர்வாகியுள்ள ஒரே ஆசிரியையான மகேஸ்வரியிடம் பேசிய போது, “பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே ஆர்வமுடன் கல்வி கற்க வரும் மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பெள்ளி உள்ளிட்ட அனைத்து ஆசிரிய ஆசிரியைகளும் சரியாக திட்டமிட்டும் ஒருங்கிணைந்தும் பாடங்களை கற்றுத்தருகிறோம். பிறர் கவனத்திற்கு வராத மலைக்கிராமத்தில் இயங்கும் இந்த அரசுப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியையான என்னை மத்திய மாநில கல்வித்துறையினர் ஜப்பான் செல்ல தேர்வு செய்துள்ளது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஒரு தூண்டுகோலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை” என்றார்.    

தரமான கல்வியை கற்க சகல வசதிகள் இருந்தும் வழிதவறும் மாணவர்கள் மத்தியில் சோதனைகளை கடந்து சாதித்து வருகிறார்கள் வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்.
  
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com