தமிழ்நாடு அரசியலின் ஊழல் புகார் ஆடுபுலி ஆட்டங்கள்... எம்ஜிஆர் முதல் ஸ்டாலின் வரை

தமிழ்நாடு அரசியலின் ஊழல் புகார் ஆடுபுலி ஆட்டங்கள்... எம்ஜிஆர் முதல் ஸ்டாலின் வரை
தமிழ்நாடு அரசியலின் ஊழல் புகார் ஆடுபுலி ஆட்டங்கள்... எம்ஜிஆர் முதல் ஸ்டாலின் வரை

தமிழக அரசியலில் ஊழல் குற்றச்சாட்டுகளும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளும் புதிதில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே இது அரும்பியிருந்தாலும், எம்ஜிஆர்தான் இதனை அழுத்தமாக தொடங்கிவைத்தார்.

தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய சுமார் 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வரும் சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இன்னும் பல முன்னாள் அதிமுக அமைச்சர்களின் வீடுகளிலும் சோதனைகள் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.

இச்சூழலில், இத்தகைய லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் அரசியல் பழிவாங்கும் படலம் என்று அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை, புகார்களின் அடிப்படையிலேயே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துகிறது என்று திமுக விளக்கமளித்துள்ளது.

தமிழக அரசியலில் ஊழல் புகார்களும், அது ஏற்படுத்திய தாக்கங்களும் மிக முக்கியமானது. முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது ஊழல் பட்டியலை வெளியிட்டுத்தான் 1977இல் எம்ஜிஆர் ஆட்சியை பிடித்தார். ஜெயலலிதா மீது ஊழல் புகார்களை அடுக்கித்தான் 1996இல் கருணாநிதி ஆட்சியமைத்தார். கருணாநிதி ஆட்சியின் ஊழல்களுக்கு நடவடிக்கை எடுப்பேன் என்றுதான் 2011இல் ஜெயலலிதா முதல்வரானார். இப்படி தமிழக அரசியலில் ஊழல் புகார் ஆடுபுலி ஆட்டங்கள் பற்றிய தொகுப்பு இங்கே…

கருணாநிதிக்கு எதிராக எம்ஜிஆரின் ஊழல் பட்டியல்: சர்க்காரியா கமிஷன்

திமுக ஆட்சி முதன்முதலில் அண்ணா தலைமையில் 1967இல் அமைந்தது, 1969இல் அண்ணாவின் மறைவிற்கு பின்னர் எம்ஜிஆர் ஆதரவுடன் கருணாநிதி முதல்வரானார், 1971 தேர்தலிலும் திமுக வென்று கருணாநிதி மீண்டும் முதல்வரானார். பின்னர் 1972 இல் கருணாநிதியுடனான கருத்து வேறுபாடு காரணமாக எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கினார். 1975-ம் ஆண்டு இந்தியா முழுமைக்கும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது, அதன் தொடர்ச்சியாக 1976-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியும் கலைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து 1969 முதல் 1976 வரையிலான கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாக 28 ஊழல் குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டு மத்திய அரசிடம் வழங்கினார் எம்.ஜி.ஆர். அந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரியா தலைமையில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசு செய்த ஊழல்களை விசாரிக்க ஓர் ஆணையத்தை அமைத்தார் இந்திரா காந்தி. அந்த ஆணையம் வீராணம் ஏரி ஊழல், பூச்சி மருந்து ஊழல், சர்க்கரை ஆலை ஊழல், மேகலா பிக்சர்ஸ் ஊழல், அஞ்சுகம் பிக்சர்ஸ் ஊழல், டிராக்டர் ஊழல், கோபாலபுர இல்ல விரிவாக்க ஊழல், முரசொலி ஊழல், திருவாரூர் வீட்டு ஊழல், ராஜா அண்ணாமலைபுரம் வீடு ஊழல், கோபாலபுரம் வீட்டு மதிப்பு ஊழல், ஊழல் அதிகாரியை காப்பாறிய முறைகேடு, நாதன் பப்ளிகேசன் ஊழல், மணி அரிசி ஆலை கடன் ஊழல், ஜேகேகே குழும விற்பனை வரி ஏய்ப்பு, சமயநல்லூர் மின் திட்ட ஊழல், குளோப் தியேட்டர் வாடகை திருத்த ஊழல், பிராட்வே டைம்ஸ் ஊழல், கூட்டுறவு சங்க ஊழல், மது ஆலை ஊழல், கொடைக்கானல் பழனி சாலை ஊழல், திமுக அறக்கட்டளைகள் ஊழல், நில ஆக்கிரமிப்பு, குற்றவாளிகளுக்கு ஆதரவு, தொழிற்சங்க ஊழல், ஊடகங்களுக்கு மிரட்டல், மின் திருட்டு, எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல், இழப்பீட்டு தொகை ஊழல் உள்ளிட்ட  28 ஊழல் குற்றச்சாட்டுகளையும் விசாரித்து அறிக்கையைத் தாக்கல் செய்தது.

அதன்பின்னர் 1977இல் ஆட்சியமைத்த எம்ஜிஆர், 1987இல் இறக்கும் வரை தமிழக முதல்வராகவே இருந்தார். அதனால் அந்தகாலங்களில் திமுகவினர் யார் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தண்டனை பெறவேயில்லை. எம்ஜிஆரின் மறைவுக்கு பின்னர் 1989இல் திமுக ஆட்சியமைந்தது, அந்த ஆட்சி 1991 கலைக்கப்பட்டது. அதன்பின்னர் 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி செய்தது.

ஜெயலலிதாவை கைது செய்த கருணாநிதி ஆட்சி:

1991 முதல் 1996ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக ஆட்சி மக்களிடம் பெரும் அதிருப்தியை உருவாக்கியிருந்தது, இதனால் திமுக-தமாகா கூட்டணி 1996 சட்டமன்ற தேர்தலில் இமாலய வெற்றி பெற்றது. இந்த  தேர்தலில்  ஜெயலலிதாவே பர்கூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அதன்பின்னர் ஜெயலலிதா மீதும் அவரது அமைச்சரவையிலிருந்த அமைச்சர்கள் பலர் மீதும் 33 ஊழல் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

இதில் ஜெயலலிதா மீது மட்டும் டான்சி ஊழல், வண்ணதொலைக்காட்சிபெட்டி ஊழல், வெளிநாட்டு பரிசு ஊழல், வரிமான வரி வழக்கு, கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே வழக்கு, நிலக்கரி இறக்குமதி, கிரானைட் குவாரி ஊழல், ஸ்பிக் பங்கு விற்பனை, சொத்துக்குவிப்பு வழக்கு, தெற்காசிய விளையாட்டுப்போட்டி விளம்பர ஊழல் வழக்கு, ஹைதராபாத் திராட்சை தோட்ட ஊழல் வழக்கு உள்ளிட்ட 12 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இதன் காரணமாக 1996 டிசம்பர் 7ஆம் தேதி ஜெயலலிதா விசாரணைக்காக கைதுசெய்யப்பட்டு சென்னை மத்தியச் சிறையில்  அடைக்கப்பட்டார். அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 300 கிலோ தங்கம், 500 கிலோ வெள்ளி, 150 விலைமதிப்புமிக்க கைக்கடிகாரங்கள், 10,000 புடவைகள், 250 ஜோடி செருப்புகள் கைப்பற்றப்பட்டன. 28 நாள்களுக்குப் பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்தார். 1996இல் தொடங்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில்தான் 2017 இல் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜெயலலிதா உயிரிழந்த நிலையில் இந்த வழக்கில்தான் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நான்கு ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதியை கைது செய்த ஜெயலலிதா:

1996-2001 வரையிலான திமுக ஆட்சியில் பெரும் குற்றச்சாட்டுகள் இல்லையென்றாலும், அதிமுக-தமாகா-பாமக என்ற பலமான கூட்டணி காரணமாக 2001 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா. அவர் ஆட்சியமைத்த உடனேயே திமுக ஆட்சியில் மேம்பாலங்கள் அமைத்ததில் அரசுக்கு ரூபாய் 12 கோடி இழப்பு ஏற்பட்டது என்ற வழக்கில், 2001 ஆம் ஆண்டு ஜூன் 29 அன்று நள்ளிரவில், ஜூன் 30 அதிகாலை 1 மணியளவில் கருணாநிதி கைது செய்யப்பட்டார்.

1991-96 காலகட்டத்தின் அனுபவம் காரணமாக, 2001-06 வரையிலான ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா கவனமாகவே இருந்தார். இருப்பினும் 2006 தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்றது, கருணாநிதி ஆட்சியமைத்தார்.

திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான வழக்குகள் – 2011:

2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது, இதன் காரணமாக 2011இல் ஆட்சியமைத்தார் ஜெயலலிதா. அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் தவிர 2006 முதல் 2011 வரை அமைச்சர்களாக இருந்த 18 பேர் மீது சொத்துக்குவிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, வீரபாண்டி ஆறுமுகம், ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, கே.பி.பி.சாமி, பரிதி இளம்வழுதி, எஸ்.ரகுபதி த.மோ.அன்பரசன், சுரேஷ்ராஜன், கீதா ஜீவன், பொங்கலூர் பழனிச்சாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், என்,கே.கே.பி.ராஜா, தமிழரசி, பெரிய கருப்பன் உள்ளிட்ட திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குகள் பதிவு செய்தனர். பல திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது,

திமுகவினரின் நில அபகரிப்புகளுக்காக தனிப்பிரிவு தொடங்கிய ஜெயலலிதா:

2001 இல் அதிமுக ஆட்சியமைத்த பிறகு, தமிழ்நாட்டிலுள்ள நில உரிமையாளர்களிடமிருந்து நிலத்திற்கான முழுத்தொகையைக் கொடுக்காமல் மிரட்டியோ அல்லது போலி ஆவணங்கள் தயாரித்தோ சட்டத்திற்குப் புறம்பாக நிலங்களை அபகரித்த நடவடிக்கைகள் 2006-2011 திமுக ஆட்சிகாலத்தில் அதிகமாக நடைபெற்றதாக அதிமுக  அரசு குற்றம் சாட்டியது. மிரட்டல் மற்றும் மோசடி மூலம் நிலங்களை இழந்த உரிமையாளர்களின் புகார்களை விசாரிப்பதற்காக ஜூலை 10, 2011 அன்று தமிழக அரசு தனிப்பிரிவு ஒன்றை உருவாக்கியது.

நில அபகரிப்பு புகார்கள் தொடர்பான வழக்குகளில் திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, என்.கே.கே.பி.ராஜா, மறைந்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன், எம்.எல்.ஏ செளந்தரபாண்டியன் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். மேலும் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், தற்போதைய திமுக எம்.எல்.ஏக்கள் தளபதி உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவ்வாறு ஆட்சி மாறும்போது அரங்கேறும் குற்றச்சாட்டுகள், வழக்குகள், கைதுகள் போன்றவை வழக்கமானதாக இருந்தாலும், இதில் பல வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன, சில வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com