உலகை அச்சுறுத்தும் கொரோனா.. உயிர்பலி வாங்கும் வதந்திகள்..!
சீனாவின் வுகான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால், சீனாவில் மட்டும் 80, 754 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,136 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும், கொரோனா தொற்று பரவுவது சீனாவில் கட்டுக்குள் வந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை கூறியுள்ளது. திங்கள்கிழமை 19 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 31 மாகாணங்களிலும் 17,721 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4, 794 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதுவரை 59 , 897 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சீனாவில் தொடங்கிய கொரோனா இன்று தமிழகம் வரை வந்துவிட்டது. ஒவ்வொரு நாடுகளும் கொரோனாவைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் கொரோனாவுக்கு மருத்து கண்டுபிடிக்க இரவு பகலாக உழைத்து வருகிறார்கள். இப்படி உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனா குறித்து பரவும் வதந்திகளுக்கும் பஞ்சமே இல்லை. எந்த பரபரப்பு என்றாலும் அது தொடர்பான உண்மை செய்தி நம்மை வந்தடையும் முன்பே வதந்தி வந்து சேர்ந்துவிடுகிறது.
குறிப்பாக இணைய உலகில் சமூக வலைதள பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து வதந்திகளுக்கு எல்லையில்லாமல் போய்விட்டது. கடைக்கோடி கிராமம் வரை செல்போன் வழியாக வதந்தி முந்தி சென்றுவிடுகிறது. வதந்தியைக் கட்டுப்படுத்த முடியாமல் தான் அரசே திணறி வருகிறது. அதன்படியே கொரோனா விவகாரத்திலும் வதந்தி உலகத்தையே சுற்றி வருகிறது. குறிப்பாக கொரோனாவுக்கு இது தான் மருந்து, அது தான் மருந்து என நிறைய செய்திகள் உலா வருகின்றன. இந்த மாதிரியான வதந்தி வெறும் பார்வேர்ட் செய்திகளாக மட்டுமே கடந்துபோவதில்லை. இப்படிப்பட்ட ஒரு வதந்திதான் ஈரானில் 27 பேரை பலிவாங்கியுள்ளது.
மது அருந்தினால் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பலாம் என ஈரானில் வதந்தி பரவியுள்ளது. இதைத்தொடர்ந்து, தடையை மீறி ஈரானில் ஏராளமானோர் கள்ளச் சாராயம் அருந்தியுள்ளனர். இதில் குசெஸ்தான் மற்றும் அல்பார்ஸ் பகுதிகளில் மது அருந்திய 27 பேர் உயிரிழந்தனர். 218 பேர் மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மெத்தனால் என்ற வேதிப்பொருள் கலந்த சாராயம் குடித்ததே இந்த உயிரிழப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி கொரோனா விவகாரத்தில் நாட்டுக்குநாடு விதவிதமான வதந்திகள் பரவுகின்றன.
வெப்பநிலை அதிகம் இருந்தால் கொரோனா வராது என்று மீம்களும், வாட்ஸ் அப் மெசேஜ்களும் பரவின. ஆனால் அப்படி எதுவும் நிரூபிக்கப்படவில்லை என சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோல் இஞ்சி, பூண்டு ஆகியவற்றில் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. அதனை சாப்பிட்டால் கொரோனா நம்மை அண்டாது என ஒரு செய்தி. ஆனால் அதுவும் உண்மை என நிரூபிக்கப்படவில்லை. இஞ்சி, பூண்டு ஆகியவற்றில் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பது உண்மைதான் என்றும் ஆனால் அதற்கும் கொரோனாவுக்கு தொடர்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் சிக்கன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக வெளியான தகவலை அடுத்து இன்று சிக்கன் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஆனால் சிக்கனுக்கும் கொரோனாவுக்கும் தொடர்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை மட்டுமே கொரோனா தாக்கும் என்றும் அதனால் வயதானவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள் என்றும் ஒரு செய்தி இணையத்தில் பரவுகிறது. ஆனால் வயது வித்தியாசமின்றி கொரோனா தொற்று பாதிக்கும் என்பதே மருத்துவர்களின் அறிவுரை. இப்படி நிறைய வதந்திகள் கொரோனாவை சுற்றி பரவுவதால், மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டுமென்றும், இணையத்தில் பரவும் செய்திகளை கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா தொடர்பாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் அதனை அரசே உடனடியாக அறிவிக்கும் என்பதால் சுய மருந்தினை மக்கள் யாரும் பயன்படுத்துக்கூடாது என்பதும் அரசின் வேண்டுகொளாக உள்ளது.