சிறப்புக் களம்
கொரோனா கால மாணவர் நலன் 3 - குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் கவனத்துக்கு..!
கொரோனா கால மாணவர் நலன் 3 - குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் கவனத்துக்கு..!
ஒருபக்கம் கொரோனா பரவல் இந்தியாவில் குறைந்துகொண்டே வருகிறது. இன்னொருபக்கம் பள்ளிகள் யாவும் கொஞ்சம் கொஞ்சமாக திறக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 9-ம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு இம்மாத தொடக்கத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன. கடந்த ஒரு மாதமாக பள்ளிகள் யாவும் இந்த வகுப்புகளுக்கு இயல்பாக இயங்கி வருவதை தொடர்ந்து, தற்போது 1 - 8 உள்ளிட்ட இதர வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. எனினும், குழந்தைகள் மத்தியிலான கொரோனா அச்சம் முழுமையாக குறைந்துவிடவில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகள் மத்தியிலான கொரோனா தாக்கம் நீடிப்பதை நாம் கவனிக்கலாம். இதனாலேயே தமிழக அரசு சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பலவும் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், "பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். காற்றோட்டமான சூழலை பள்ளியில் உறுதி செய்ய வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் கைகழுவுவதற்கான உரிய ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். தொடுதல் இல்லாத தெர்மாமீட்டர், கிருமி நாசினி, சோப்புகள் உள்ளிட்டவை பள்ளிகளில் கட்டாயம் போதிய இருப்பு வைத்திருக்க வேண்டும்.
பள்ளிப் பேருந்துகள் உரிய முறையில் தூய்மைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். வகுப்பறைகளில் 6 அடி இடைவெளி விட்டு அமரும் வகையில் மாணவர்களுக்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட இடங்களில் குறியீடு போட்டிருக்க வேண்டும். ஆசிரியர்கள், அலுவலக அறை மற்றும் பள்ளியின் அனைத்து இடங்களிலும் போதிய தனிமனித இடைவெளியை அனைவரும் பின்பற்ற வேண்டும். வாய்ப்புகள் இருந்தால் திறந்தவெளி வகுப்பறைகளை கையாளலாம். வகுப்பறைக்குள் செல்ல, வெளியே வர தனித்தனி குறியீடுகள் போட வேண்டும். பள்ளிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட கேட்கள் இருந்தால் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பள்ளிகளில் உரிய இடங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். எச்சில் துப்புவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பள்ளிகளில் ஒரேநேரத்தில் ஒரு வகுப்பில் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் சானிடைசர் வைக்கப்பட வேண்டும். உரிய சுகாதார வசதி உறுதிப்படுத்தப்பட வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் சுகாதார அதிகாரிகள் அனைத்து பள்ளிகளிலும் நேரடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் அனைவரும் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வைட்டமின் சி மாத்திரைகள், நோய் எதிர்ப்பு மாத்திரைகள் வழங்க வேண்டும். வாரம் ஒருமுறை பள்ளி மாணவர்களின் உடல்நிலையை பரிசோதிக்க வேண்டும்.
இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க பள்ளி நிர்வாகத்தினருடன் இணைந்து செயல்படுமாறு மருத்துவப் பணிகளின் துணை இயக்குநர்கள் அனைவரும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” எனக்கூறப்பட்டுள்ளது.
இவையாவும் செப்.1 பள்ளி திறப்புக்கு முன்னரே அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவிக்கப்பட்டுவிட்டாலும்கூட இன்றுவரை ஆங்காங்கே பல இடங்களில் மாணவர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், இவையாவும் பள்ளிக்குள்ளே அதுவும் வகுப்புக்குள்ளே மேற்கொள்ளப்பட வேண்டியவையாக மட்டுமே உள்ளன. இவை மட்டுமே கொரோனாவை முழுமையாக குழந்தைகள் மத்தியில் தடுத்துவிடாது. இவற்றுடன் சேர்த்து வீடுகளிலும், பயண வழிகளிலும், உணவு உண்ணும் வேளையிலும் குழந்தைகள் மற்றும் அவர்களை சுற்றி இயங்குவோருக்கு கூடுதல் நெறிமுறைகள் தேவைப்படுகிறது. அப்படியான சில முக்கிய விஷயங்களை பட்டியலிடுகிறார் பொதுநல மருத்துவர் அர்ஷத் அகில்.
குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், கீழ்க்காணும் மருத்துவ வழிக்காட்டுதலை பள்ளியில் ஆசிரியர்கள் தரப்பிலும், குழந்தைகள் தரப்பிலும், உடன் பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோர் தரப்பிலும் மேற்கொள்ள வேண்டியதும் காலத்தின் கட்டாயம்.
“* குழந்தைகளை தினமும் டபுள் மாஸ்க் அணிவித்து பள்ளிக்கு அனுப்பவும்.
* பள்ளியிலும் பொதுப் போக்குவரத்திலும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது மிகவும் அவசியம் என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து அனுப்பவும். முடிந்தவரை இந்த நேரத்தில் பொதுப் போக்குவரத்தை தவிர்த்துவிட்டு, பெற்றோர் தாங்களே குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்று, அழைத்துவரவும். பாதுகாப்பாக சைக்கிள் ஓட்டும் குழந்தையெனில், அதிலும் அவர்களை அனுப்பலாம். பொதுப் போக்குவரத்தில் தனிமனித இடைவெளி கடைப்பிடிப்பது கடினமாக இருப்பதாக வரும் செய்திகளை மனதில் வைத்து, குழந்தையின் பயணத்தை பாதுகாப்பாக அமையுமாறு பெற்றோர் பார்த்துக்கொள்ளுமாறு மருத்துவர்களாகிய நாங்கள் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்ள நினைக்கிறோம்.
* குழந்தை வீட்டுக்கு வந்தவுடன், முறையாக மாஸ்க்கை கழட்ட பழக்கப்படுத்தவும். தொடர்ந்து, உள்நுழைந்தவுடன் குழந்தையை குளிக்கச் சொல்லவும்.
* குழந்தை அணிந்திருந்த சீருடையை துவைக்கவோ அல்லது நனைத்துப்போடவோ செய்வது இன்னும் நல்லது. மாஸ்க்கை மட்டும் உடனடியாக துவைத்து பாதுகாப்பாக காயவைக்கவும். டிஸ்போசபிள் மாஸ்க் என்றால், அதை முறையாக குப்பைத்தொட்டியில் போடுவதும் முக்கியம். நிறைய குழந்தைகள் வீட்டு சோஃபா, டீப்பா, படிக்கும் மேஜையில் வீசுகிறார்கள். இவையாவும் தவறு.
* சளி, இருமல் என குழந்தைக்கு எந்த அறிகுறி இருந்தாலும் பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். வீட்டில் யாருக்கேனும் கொரோனா அறிகுறி இருந்தாலும்கூட, குழந்தையை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். உடனடியாக நீங்களும் பரிசோதனை செய்யுங்கள். உங்களுக்கு உறுதிசெய்யப்பட்டால், குழந்தைக்கும் பரிசோதனை செய்து, அவர்கள் பாதுகாப்பையும் உறுதிசெய்யுங்கள்.
* புரதம், நார்ச்சத்து அதிகமுள்ள உணவை குழந்தைக்கு கொடுக்கவும். பால், முட்டை, பழங்கள் ஆகியவை அதிகளவில் தரவும்.
* பகிர்வு நற்பண்புதான். ஆனால், தற்போதைய கொரோனா பேரிடர் சூழலில், மாணவர்கள் பள்ளியில் உணவைப் பகிராமல் இருக்க பெற்றோர் அறிவுறுத்துங்கள். 9-ம் வகுப்புக்கு மேற்பட்டோருக்குத்தான் இப்போது பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இவர்களெல்லாம் கொரோனா பற்றி புரிந்துக்கொள்ளும் தன்மையுடனே இருப்பர் என்பதால், சற்று எடுத்துக்கூறினால் இவர்கள் இவ்விஷயத்தை கேட்பார்கள். ஆகவே, இதில் அடம்பிடிக்கும் சூழல் உருவாகாமல் இருப்பதற்கு, பெற்றோரின் பங்கு மிக முக்கியம்.
குழந்தைகள் கொரோனாவால் தாக்கப்பட்டாலும்கூட, எளிதில் மீண்டுவிடுவதால் பெற்றோர் பயப்பட வேண்டாம். அதற்காக அலட்சியமும் வேண்டாம். வழிமுறைகளை சரியாக கடைபிடித்து, முடிந்தவரை குழந்தையை தற்காத்துக்கொள்ளுங்கள். விரைவில் தடுப்பூசி வருமென நம்புவோம். அதுவரும்பட்சத்தில், நம் குழந்தையை இன்னும் துரிதமாக நம்மால் பாதுகாக்க இயலும்!
சில பெற்றோர், 'நாங்கள் என்னதான் வழிகாட்டு நெறிமுறைகளை சொன்னாலும்கூட தங்கள் பிள்ளை சொல்பேச்சு கேட்பதில்லை' என சொல்வதுண்டு. 'வீட்டுக்கு வந்தவுடன் சுயபாதுகாப்பை மறந்துவிடுகின்றனர்' என வேதனை தெரிவிக்கின்றனர். குழந்தைகள் உங்களுக்கு ஒத்துழைக்க வேண்டுமென்றால், மேற்சொன்ன பழக்கங்களுக்கு, வீட்டில் உள்ள அனைவரும் பழக்கப்படவேண்டும். அப்படி செய்தால்மட்டுமே, அதையொரு பழக்கமாக குழந்தைகளும் பின்பற்றுவர். அப்படியில்லாமல் குழந்தையை மட்டும் செய்ய சொன்னால், அவர்களை சொல்பேச்சு கேட்காமல் சிக்கல் உருவாவது இயல்பே" என்றார்.
மருத்துவரின் இந்த வழிகாட்டுதலை பயன்படுத்தும்போது, கொரோனாவிலிருந்து நம் குழந்தைகளை நம்மால் நிச்சயம் காக்க முடியும்.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியான மருத்துவர் செளமியா சுவாமிநாதன் தனது ஒரு பேட்டியில், "பெரியவா்களுக்கு இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியின் அதே அளவு குழந்தைகளுக்கும் இருக்கிறது. பள்ளிக்கு வருவதால் நோய் பரவும் அபாயம் குழந்தைகளுக்கு அதிகளவில் இல்லை. ஊரகப் பகுதிகளில் உள்ள மாணவா்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களின் நலன் கருதி, நாம் வருங்காலத்தில் இதர வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க வேண்டும்.
அவ்வாறு திறந்தால் மட்டுமே அவா்களுக்கும் முழுமையான கல்வி சென்றடையும். தற்போது ஃபைசா், மடா்னா ஆகிய தடுப்பூசிகள் மட்டுமே 12 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே குழந்தைகள் மத்தியிலான கொரோனா தடுப்பில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது" என்றார்.
ஆக, குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில் இப்போதைக்கு எந்த இடையூறும் இல்லை. வருங்காலத்திலும் அவை உருவாகாமல் இருக்க, அன்றாடம் உரிய விழிப்புணர்வை அவர்கள் பின்பற்றுவது அவசியம்.
இந்த அத்தியாயத்தில், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான உடல்நல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளையும், அவர்களுக்கான கொரோனா தடுப்பு நெறிமுறைகளையும் பார்த்தோம். தொடர்ந்து, அவர்களின் பிற நலன்கள், பிற பிரச்னைகளுக்கான தீர்வுகள், கையாளும் வழி உள்ளிட்டவற்றை காண்போம்.
முந்தைய அத்தியாயங்கள்: