கிராமப்புறங்களில் அதிகரிக்கும் கொரோனா - அதிகாரிகள் சொல்லும் காரணம் என்ன?

கிராமப்புறங்களில் அதிகரிக்கும் கொரோனா - அதிகாரிகள் சொல்லும் காரணம் என்ன?

கிராமப்புறங்களில் அதிகரிக்கும் கொரோனா - அதிகாரிகள் சொல்லும் காரணம் என்ன?
Published on

கிராமப்புறங்களில் கொரோனாத் தொற்று அதிகரிப்பதற்கான காரணத்தை அலசுகிறது இந்தக் கட்டுரைத் தொகுப்பு

சென்னையில் கோரத்தாண்டவம் ஆடிய கொரோனா தற்போது தனது அடுத்தக்கட்ட பாய்ச்சலை தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பாய்ச்ச ஆரம்பித்திருக்கிறது. நேற்றைய நிலவரப்படி தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாக்குமரி ஆகிய மாவட்டங்களில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100 யைத் தாண்டியிருக்கிறது. சென்னையில் கொரோனா பரவலுக்கு மக்கள் தொகை முக்கிய காரணமாக காட்டப்பட்டது. சென்னையை ஒப்பிடும் போது கிராமப்புறங்களில் அதனை ஒத்த நெருக்கடி என்பது நிச்சயமாக இல்லை. அப்படியிருக்க ஏன் கிராமப்புறங்களில்  கொரோனாத் தொற்று அதிகரிக்கிறது. அதற்கான காரணத்தை கள ஆய்வின் மூலமாக சில அதிகாரிகள் கொடுத்த தகவல் மூலமாகவும் தெரிந்து கொண்டோம்.

தென்காசி மாவட்டத்தைப் பொறுத்தவரை மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. அதிகாரிகளின் பார்வை படும் போது மட்டும்தான் முக கவசம், தனி மனித இடைவெளியெல்லாம். அதன் பின்னர் அவையெல்லாம் கொரோனாவை வரவேற்பதற்கான பரிசுகளாக முன்வைக்கப்படுகின்றன. அதே போல கொரோனாத் தொற்றுக்கு பாதிப்புக்குள்ளான நபரானவர், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை பற்றிய விவரங்களை விழிப்புணர்வுயின்மையால் கொடுக்க மறுப்பது ஒரு பிரச்னையாக இருப்பதாக கூறப்படுகிறது.

கன்னியாக்குமரி மாவட்டத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறும் போது “ கன்னியாக்குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை அரசிடன் இருந்து நமக்கு முழுமையான ஒத்துழைப்பு இருக்கிறது. இதுவரை 1 லட்சத்துக்கு மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 60 வயதிற்கு மேற்பட்ட சிறுநீரக பாதிப்புடையவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மாவட்ட நிர்வாகம் தானாக முன் வந்து பரிசோதனைகளை செய்துள்ளது.

இங்கு கொரோனா பரவலுக்கான பிரச்னையாக இருப்பது, A - அளவிலான கொரோனா பாதிப்பு இருக்கும் நபர் அலட்சியமாக இருப்பது. அவர்களால் வயதானவர்களுக்கு அந்த நோய் பரவும் போது அது அவர்களுக்கு மிகப் பெரிய பாதிப்பாக மாறிவிடும் என்பதை மறந்து விடுகின்றனர். இன்னொன்று, என்ன சொன்னாலும் நாங்கள் கேட்கமாட்டோம் எனற ஒரு சதவீத மக்கள். அந்த ஒரு சதவீத மக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக அவர்களுக்கு அபராதத் தொகை விதிக்கப்படுகிறது. அப்போது அவர்களுக்கு கொரோனாத் தொற்றுக் குறித்தான விழிப்புணர்வு கொடுக்கப்பட்டு, ஒரு முக கவசமும் வழங்கப்படுகிறது. வெளியூரில் இருந்து வரும் மக்கள் மூலமாக அதிக பரவல் இருப்பதால் அதிலும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவைத் தவிர ஊர் பஞ்சாயத்து தலைவர்கள், தன்னார்வலர்கள் மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் திரு ராதாக்கிருஷ்ணனை தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறும் போது “ கொரோனா பரவலை நகர்புறம் கிராமப்புறம் என்று பிரிக்காதீர்கள். கூட்டம் கூடும் இடத்தில் போதிய விழிப்புணர்வின்றி செயல்பட்டால் தொற்று நிச்சயம் பரவும். ஆகையால் கிராமப்புரங்களில் இருக்கிறவர்கள் முறையாக முக கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்டவற்றை கடைபிடிக்க வேண்டும். தனது வீட்டருகில் உள்ள நபருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டால் தாங்களாக முன் வந்து கொரோனா பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்” என்றார்.

- கல்யாணி பாண்டியன் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com