தொடரும் துப்பாக்கி சுடும் வீரர்களின் தற்கொலைகள் – 4வது நபராக கோனிகா லாயக் தற்கொலை

தொடரும் துப்பாக்கி சுடும் வீரர்களின் தற்கொலைகள் – 4வது நபராக கோனிகா லாயக் தற்கொலை
தொடரும் துப்பாக்கி சுடும் வீரர்களின் தற்கொலைகள் – 4வது நபராக கோனிகா லாயக் தற்கொலை

கொல்கத்தாவில் முன்னாள் ஒலிம்பிக் வீரர் ஜாய்தீப் கர்மாகரிடம் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த 26 வயதான துப்பாக்கி சுடும் வீராங்கனை கோனிகா லாயக், தனது விடுதி அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  கடந்த சில மாதங்களில் தற்கொலை செய்துகொள்ளும் நான்காவது வீரர் இவராகும்.

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள தன்சரை சேர்ந்த கோனிகா, சொந்தமாக துப்பாக்கி வாங்க வசதி இல்லாததால் இரண்டு முறை தகுதி பெற்றபோதிலும் தேசிய அளவிலான போட்டிகளில் விளையாட இயலாத சூழலில் இருந்தார். அவர் தனது பயிற்சியாளரிடமிருந்தோ அல்லது நண்பர்களிடமிருந்தோ பழைய துப்பாக்கியை கடனாக வாங்கி பயன்படுத்திக்கொண்டிருந்தார். இந்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலான பிறகு , நடிகர் சோனு சூட்  ரூ.2.70 லட்சம் மதிப்புள்ள ஜெர்மன் ரைஃபிளை அவருக்கு பரிசாக அளித்தார்.

அதன்பின்னர், கொல்கத்தாவில் முன்னாள் ஒலிம்பியனும், அர்ஜுனா விருது பெற்றவருமான ஜாய்தீப் கர்மாகரிடம் பயிற்சி பெற்று வந்த கோனிகா, தனது விடுதி அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இது குறித்து பேசிய பயிற்சியாளர் ஜாய்தீப், “இது நம் அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தி. அவர் நன்றாகவே இருந்தார், கடந்த 10 நாட்களாக கோனிகா தனது பயிற்சியில் சரியாக கலந்துகொள்ளவில்லை, என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை, நாங்கள் மனம் உடைந்துள்ளோம்” என்று கூறினார்.

நடந்து முடிந்த ஜிவி மால்வங்கர் சாம்பியன்ஷிப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் கோனிகா இந்த முறை தேசியப் போட்டிக்குத் தகுதி பெறவில்லை என்பதையும் ஜாய்தீப் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களில் தற்கொலை செய்துகொள்ளும் நான்காவது துப்பாக்கி சுடுதல் வீரர் இவராகும். கடந்த வாரம், தேசிய போட்டிகளில் குறைவான புள்ளிகளை பெற்றபிறகு இளம் துப்பாக்கி சுடும் வீராங்கனை குஷ்சீரத் கவுர் சந்து தற்கொலை செய்துகொண்டார்.

அக்டோபர் மாதம் துப்பாக்கி சுடும் வீரரான ஹுனார்தீப் சிங் சோஹல் மற்றும் செப்டம்பரில் நமன்வீர் சிங் பிரார் ஆகியோர் தற்கொலை செய்துகொண்டனர். இவர்கள் அனைவரும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் துப்பாக்கி சுடுதல் வீரர்கள் தொடர்ச்சியாக தற்கொலை செய்துகொள்வது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலைகள் குறித்து உரிய விசாரணை நடத்தி உண்மையான காரணங்களை அறிய வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும் மனஅழுத்ததில் சிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு உளவியல் ரீதியான பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்க உரிய நிபுணர்களை அரசு நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com