தொடரும் தோல்வி.. சரியும் செல்வாக்கு.. காங்கிரஸ் இனி என்ன ஆகும்? - முழுமையான பார்வை

தொடரும் தோல்வி.. சரியும் செல்வாக்கு.. காங்கிரஸ் இனி என்ன ஆகும்? - முழுமையான பார்வை

தொடரும் தோல்வி.. சரியும் செல்வாக்கு.. காங்கிரஸ் இனி என்ன ஆகும்? - முழுமையான பார்வை
Published on

5 மாநில தேர்தலில் ஏற்பட்ட தோல்விகள் மற்றும் சரியும் செல்வாக்கு காரணமாக காங்கிரஸின் எதிர்காலம் என்ன என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. இது பற்றியமுழுமையான பார்வை...

5 மாநில தேர்தல் தோல்விக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியில் சலசலப்புகள் அதிகரித்துள்ளது. முக்கியமாக காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் குழுவை சேர்ந்த மூத்த தலைவர் கபில் சிபல், "காங்கிரஸ் கட்சியை நேரு-காந்தி குடும்பத்தை சேராதவர்கள் வழிநடத்தவேண்டும்' என தெரிவித்தது சர்ச்சையை உருவாக்கியது.



இத்தகைய சூழலில் 5 மாநில தேர்தல் தோல்விகள் காரணமாக அந்த மாநிலங்களின் காங்கிரஸ் கட்சி தலைவரை பதவியிலிருந்து நீக்கினார் சோனியா காந்தி. இந்த நிலையில் ஜி - 23 குழுவை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது, இதில் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டுத் தலைமையே தேவை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விகள் மற்றும் சரியும் செல்வாக்கு குறித்து நடந்த 'நேர்ப்பட பேசு' நிகழ்ச்சியில் மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவித்த கருத்துகளை பார்ப்போம்...

நேரு -காந்தி குடும்பத்திற்கே செல்வாக்கு உள்ளது:

இது தொடர்பாக பேசும் மூத்த பத்திரிகையாளர் கிருஷ்ணானந்த், "5 மாநில தேர்தல்களில் பஞ்சாப் மாநில தோல்வியை காங்கிரஸ் கட்சியே எதிர்பார்க்கவில்லை. கோவாவில் காங்கிரஸ் கட்சிக்கான தேர்தல் பணியை தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரத்திற்கு வழங்கினார்கள், இது பெரிய பின்னடைவுதான். இந்த பொறுப்பை மகாராஷ்ட்டிராவை சேர்ந்தவரிடம் இந்த பொறுப்பை வழங்கியிருக்கலாம். உத்தரகாண்டில் உட்கட்சி பூசல் காரணமாகவே காங்கிரஸ் தோற்றது. உட்கட்சி பூசல் என்பது காங்கிரஸின் கலாச்சாரமாகவே மாறிவிட்டது. இந்திராகாந்தியின் காலத்துக்கு பிறகு எந்த மாநிலத்திலும் ஒரு வலுவான காங்கிரஸ் தலைவர் இருந்தால், அங்கே இன்னொரு போட்டி தலைவரை உருவாக்கும் வேலையை அவர் செய்தார், இதுவே அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசலுக்கு வித்திட்டது.



உத்தரப்பிரதேசத்தில் காணாமல் போன  நிலையில் இருந்த காங்கிரஸ் கட்சியை கொஞ்சமாவது வெளிக்கொணர்ந்தவர் பிரியங்கா காந்திதான், அந்த மாநிலத்தில் அவருக்காக எல்லா இடங்களிலும் கூட்டம் கூடியது. அப்படி பார்க்கையில் மக்களை ஈர்க்கும் சக்தி சோனியா, ராகுல், பிரியங்கா காந்திகளைத் தவிர ஜி-23 குழுவை சேர்ந்த கபில் சிபல் உட்பட யாருக்கும் கிடையாது என்பதே உண்மை. கபில் சிபல் தான் போட்டியிட்ட டெல்லி மாநிலம் சாந்த்ரி சவுத் தொகுதியிலேயே தோல்வியை தழுவினார்.

தற்போது விமர்சனத்தை வைக்கக்கூடிய சசி தரூர் உட்பட யாருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தாங்கக்கூடிய தகுதி இல்லை. தற்போது காங்கிரஸ் கட்சி அதன் தலைமை சரியில்லை என்பதால் தோற்கவில்லை. கட்சியின் கட்டமைப்பில் உள்ள சிக்கல்களே தோல்விக்கு காரணம். இனி தேர்தல் நடக்கவுள்ள ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத், கர்நாடகா, மத்தியபிரதேசம் என பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியே நேரடி எதிர்க்கட்சியாக உள்ளது. அந்த மாநிலங்களில் நடக்கவுள்ள தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தவே காங்கிரஸ் கட்சியில் தற்போது எழுந்துள்ள இந்த பிரச்னைகள் உதவும். இனிவரும் 2024 தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க காங்கிரஸ் முயற்சி எடுக்கவேண்டும் " என தெரிவித்தார்

இது நேற்று ஆரம்பித்து இன்று ஏற்பட்ட தோல்வி அல்ல:

இது குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் மாலன், " 2014 ஆம் ஆண்டு முதலே காங்கிரஸ் கட்சி படுமோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது. ஆட்சியில் இருந்த டெல்லி, ஆந்திர பிரதேச மாநிலங்களில்கூட அக்கட்சியால் ஒரு இடம் கூட வெல்ல முடியாத சூழலுக்கு சென்றது, மேற்குவங்கத்தில் படுதோல்வியை சந்தித்தது. அதுபோல பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியை தொடர்ந்து சந்தித்து வருகிறது. இது நேற்று ஆரம்பித்து இன்று ஏற்பட்ட தோல்வி அல்ல, பல காலமாக தொடர்ந்து ஏற்பட்டுவரும் சரிவுதான். ஆனால் இதனைப்பற்றி அந்த கட்சியின் தலைமை கவலைப்பட்டது போலவோ, இதனை மீட்டெடுக்க முயற்சித்ததாகவோ  தெரியவில்லை. இது வெறும் தலைமையின் பிரச்னை மட்டுமே இல்லை, இது கட்சியின் கட்டமைப்பின் பிரச்னை. இதனை காந்தி குடும்பமோ அல்லது ஜி-23 குழுவின் தலைவர்களோ என யார் வந்தாலும் மீட்டெடுக்கும் நிலையில் இல்லை.

இவ்வளவு மோசமான நிலையை சந்தித்த பிறகும், தலைமைப் பதவியை விட்டுக்கொடுக்க நேரு குடும்பத்தினர் மறுக்கிறார்கள். ஜி-23 குழுவை சேர்ந்த ஒருவரை தலைவராக நியமித்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என முயற்சிசெய்து பார்க்கலாம்.

ஒரு தேர்தலை எப்படி அணுகுவது என்பதற்கான முன்கூட்டிய திட்டம் எதுவும் காங்கிரஸ் கட்சியிடம் கிடையாது, இதையே பிரசாந்த் கிஷோரும் கூறியுள்ளார். தேர்தலில் வெற்றி பெற தேர்தலுக்கான திட்டம், அதற்கான வியூகம், அந்த வியூகத்தை செயல்படுத்தும் கட்சி அமைப்பு ஆகியவை தேவை, இவை அனைத்திலும் காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது" என தெரிவித்தார்

காங்கிரஸ் கட்சி இனியாவது புதிய யுக்திகளை வகுக்கவேண்டும்:

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் யுக்திகள் குறித்து பேசிய ஜென்ராம், " 2014 முதல் காங்கிரஸுக்கு சரிவு என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் 2017இல் ராகுல் காந்தி தலைவரான பிறகுதான் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியபிரதேச மாநிலங்களில் காங்கிரஸ் வென்றது. அதன்பின்னர் 2019 நாடாளுமன்ற தோல்விக்கு பின்னரே அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் எங்கள் குடும்பத்தை சேராத யாரையாவது தலைவராக தேர்ந்தெடுத்துக்கொள்ளவே அவர்  சொன்னார், அதனை யாரும் செய்யவில்லை.



தற்போது கட்சி தலைமைக்கு தேர்தல் நடத்த சொல்வது நியாயமானது. ஆனால் அதில் நேரு குடும்பத்தினர் மூவரும் போட்டியிடக்கூடாது என கபில்சிபல் கூறுகிறார், இதனை எந்த விதத்தில் எடுத்துக்கொள்வது. 1989இல் 196 இடங்களை கொண்டு ஆட்சியமைக்க மாட்டேன் எனக்கூறி ராஜிவ் காந்தி விலகிவந்த பிறகு, இந்தியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அதன்பின்னர் வகுப்புவாதத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் வலுப்பெற்ற சூழலில் அதனுடன் காங்கிரஸ் கட்சியால் பொருந்த முடியவில்லை என்பதே உண்மை. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு அதற்கான உத்திகளை முன்வைப்பவர்கள் பல்வேறு தரப்பை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அதன்பின்னர் 1997இல் நேரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் தலைமையேற்ற பிறகுதான் 2004 காங்கிரஸால் ஆட்சியை பிடிக்க முடிந்தது.

மக்களை பழைமையை நோக்கி இழுத்து செல்வது என்பது மிகவும் எளிமையானது, அதனையே பாஜக 'கவர்ச்சிகரமான நேரேட்டிவ்'வாக செய்கிறார்கள், அதுதான் பாஜகவின் வெற்றிக்கும், காங்கிரசின் தோல்விக்கும் காரணம். காங்கிரஸ் கட்சி இனியாவது புதிய யுக்திகளை வகுக்கவேண்டும்" என தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி தலைவர்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் காரணமாக அடுத்து வரும் நாட்களில் சில விவாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற வாய்ப்புள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு உட்கட்சி சிக்கல்களை விரைவில் காங்கிரஸ் கட்சி முடிவுக்கு கொண்டு வருவதே அக்கட்சிக்கு சிறந்ததாக இருக்கும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com