TNPSC குரூப்2 தேர்வில் குழப்பம்! ஈரோடு இடைத்தேர்தல் காரணமா? அதிருப்தியில் தேர்வர்கள்!

TNPSC குரூப்2 தேர்வில் குழப்பம்! ஈரோடு இடைத்தேர்தல் காரணமா? அதிருப்தியில் தேர்வர்கள்!
TNPSC குரூப்2 தேர்வில் குழப்பம்! ஈரோடு இடைத்தேர்தல் காரணமா? அதிருப்தியில் தேர்வர்கள்!

டிஎன்பிஎஸ்சி குரூர் 2 தேர்வில் குழப்பம் ஏற்பட்டதால் விரக்தியடைந்த தேர்வர்கள் இந்த குழப்பத்திற்கு ஈரோடு இடைத்தேர்தல் காரணமா? விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாடு அரசு துறைகளில், குரூப் 2 மற்றும் 2 ஏ பணிகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி மூலமாக கடந்த மே 21 ஆம் தேதி முதல்நிலை தகுதி தேர்வு நடைபெற்றது. இதில், சுமார் 9 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் கடந்த நவ 8 ஆம் தேதி வெளியானது.

இதையடுத்து இதில் தேர்ச்சி பெற்ற 55 ஆயிரம் பேருக்கு, குரூப் 2 பிரதான தேர்வு கடந்த சனிக்கிழமை (25.02.2023) அன்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அன்று காலை தமிழ் தகுதித்தாள் தேர்வு நடைபெற்ற தேர்வு மையங்களுக்கு, கண்காணிப்பாளர்கள் மற்றும் விடைத்தாள்கள் வர தாமதமானதாக புகார் எழுந்தது. இதையடுத்து திட்டமிட்டபடி காலை 9:30 மணிக்கு தேர்வை துவக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து தேர்வை தாமதமாக துவங்கினாலும், பல இடங்களில் தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட ஓ.எம்.ஆர்., விடைத்தாள்களும் மாற்றி வழங்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. இதனால், குழப்பமடைந்த பல தேர்வர்கள் தங்கள் பதிவெண்களை பார்க்காமல், மாறியிருந்த விடைத்தாளில் வேகமாக விடைகளை பதிவு செய்தனர். இதையடுத்து தேர்வு மையங்களில் இருந்து, டிஎன்பிஎஸ்சி-க்கு தகவல் அளித்ததை அடுத்து விடைத்தாள்களை சரியாக வழங்கவும், விடைத்தாள் மாறியோருக்கு, வெற்று விடைத்தாள்கள் வழங்கியும், தேர்வு நடைபெற்றது.

இதனால், பிற்பகலில், 2:00 மணிக்கு துவங்க வேண்டிய தேர்வும் தாமதமாக துவங்கியது. மாலை, 5:00 மணிக்கு முடிய வேண்டிய தேர்வு, பல இடங்களில், 6:30 மணி வரை நடந்ததால் தேர்வர்கள் குழப்பமடைந்தனர். இந்த குளறுபடிகள் காரணமாக பல மையங்களில் துவங்கப்பட்ட தேர்வு இடையில் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டன. அப்போது தேர்வர்கள், தங்களுக்கு கிடைத்த வினாத்தாளில் இருந்த வினாகளுக்கான விடைகளை மொபைல் போனில் தேடி பார்த்ததாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதன் காரணமாக, முதன்மை தேர்வை ரத்து செய்து விட்டு, மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் என்ன நிலவரம்! எடுத்துக்காட்டாக மதுரையில் என்ன நடந்தது..?

குரூப்-2 மற்றும் குரூப் 2 ஏ ஆகிய பிரிவுகளில், முதன்மைத் தேர்வை மதுரை மாவட்டத்தில் அமைத்திருந்த 35 தேர்வு மையங்களில் 6750 தேர்வர்கள் தேர்வு எழுதினர். வினாத்தாள் மற்றும் பதிவெண்கள் குளறுபடி காரணமாக காலை 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வானது காலை 10.45 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

மதுரை அவுட் போஸ்ட் காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி தேர்வு மையத்தின் தேர்வு எழுத வந்தவர்களுக்கு காலை 9.30 மணிக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. அப்போது ஏராளமான தேர்வர்கள் வினாத்தாள்களை பதிலை எழுத ஆரம்பித்து விட்டனர். இதையடுத்து வினாத்தாள்கள் மற்றும் பதிவெண் மாறி இருப்பதாகக் கூறி குழப்பம் ஏற்பட்ட நிலையில், தேர்வு நிறுத்தப்பட்டது

அப்போது வெளியே வந்த தேர்வர்கள் சிலர், புத்தகம் மற்றும் செல்போன்களை பார்த்து விடைகளை நிரப்பியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அதிகாரிகள் நேரில் வந்து கொடுக்கப்பட்ட விடைத்தாள்களில் அவர்களது பதிவு எண்களை எழுதிவிட்டு தேர்வை எழுதுமாறு அறிவுறுத்தினர்

இதனையடுத்து காலை 10:45 மணிக்கு தேர்வு துவங்கிய நிலையில், ஒருசில தேர்வர்களுக்கு வந்திருந்த விடைத்தாள்களில் ஏற்கனவே தேர்வர்களின் பதிவு எண் மற்றும் கையெழுத்துடன் வினாவிற்கான பதில்களும் நிரப்பப்பட்டு இருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த தேர்வர்கள் தேர்வை புறக்கணித்து வெளியில் வந்து அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

அப்போது தங்களுக்கான வினாத்தாளில் ஏற்கனவே பதில் எழுதப்பட்டுள்ளதாகவும் அதே போன்று பதில் தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதை அடித்து விட்டு மீண்டும் பதில் எழுதுமாறு அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால், அப்படி எழுதினால் மைனஸ் மார்க் வந்துவிடும், இதேபோன்று 45 நிமிட தாமதத்தால் தேர்வர்கள் புத்தகத்தைப் பார்த்து விடைத்தாள்களை நிரப்பிவிட்டதாகவும் இதனால் இந்த தகுதி தேர்வு தங்களுடைய மதிப்பெண் குறைந்து வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என வேதனை தெரிவித்தனர்.

குளறுபடியால் தவிக்கும் தேர்வர்கள்

பல ஆண்டுகளாக படித்து காத்திருந்து எழுதிய தேர்வில் இதுபோன்ற குளறுபடிகளால் நாங்கள் தவித்து நிற்பதாகவும் இதற்கு யார் பதில் சொல்வார்கள் எனவும் தங்களது வேதனையை வெளிப்படுத்தினர். தாமதமாக தேர்வெழுதிய 10 தேர்வர்களுக்கு மட்டும் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றால் தங்களுக்கு அரசு பணி கிடைக்கும் என எதிர்பார்ப்போடு பல ஆண்டுகளாக படித்து தேர்வெழுத வந்த பட்டதாரிகள் இதுபோன்ற அரசின் தவறுகளால் தங்களுடைய எதிர்காலமே கேள்விக்குறியாகும் எனவும் இனிமேல் இதுபோன்ற காலி பணியிடங்களும், அறிவிப்புகளும் குரூப் 2-வில் வருவதற்கு நீண்ட ஆண்டுகள் ஆகும் எனவும் வேதனை தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த குழப்பங்களுக்கு முக்கிய காரணம் ஈரோடு இடைத்தேர்தல் தான் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் அமைச்சர்கள் அனைவரும் வாக்கு சேகரிக்கச் சென்றால் இது போன்ற குழப்பங்கள் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில். இது போன்ற அரசு தேர்வுகளை முன்கூட்டியே திட்டமிட்டு சிறப்பாக நடத்த அரசு முனைப்பு காட்ட வேண்டுமென்று தேர்வர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com