20 வருடங்களுக்கு முன் இயங்கிய மீனவர் பயிற்சிப் பள்ளி எங்கே? - இது குளச்சல் பிரச்னை.!

20 வருடங்களுக்கு முன் இயங்கிய மீனவர் பயிற்சிப் பள்ளி எங்கே? - இது குளச்சல் பிரச்னை.!
20 வருடங்களுக்கு முன் இயங்கிய மீனவர் பயிற்சிப் பள்ளி எங்கே? - இது குளச்சல் பிரச்னை.!

கடலுக்கும் நிலத்திற்கும் இடையே உயிர்ப்பாலமாக மிதக்கிறவர்கள் மீனவர்கள். கடலுக்குள் மூழ்கியது குமரிக் கண்டம் இது நாம் அறிந்ததே. அக்குமரிக் கடலின் மேல் படகு செலுத்துகிறவர்கள் ஒரு வரலாற்றின் மீது படகை செலுத்துகிறார்கள். வரலாற்றின் மீது படகு செலுத்துவது நாம் சாலையில் மோட்டார் வாகனம் ஓட்டுவது போன்றது அல்ல. நில்லாமல் அலையும் கடலின் மீது படகு செலுத்துவதற்கு பிரத்யேக பயிற்சி தேவை. அப்படியொரு பயிற்சிப் பள்ளி கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் இயங்கிவந்தது. இயற்கைத் துறைமுகமான குளச்சலில் 20 ஆண்டுகளுக்கு முன் இயங்கிவந்த மீனவர் பயிற்சிப் பள்ளியை 'மீண்டும் திறக்க வேண்டும்' என தற்போது கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்தியாவின் பல்வேறு கடல் பகுதிகள் வாயிலாக டச்சுக்காரர்கள் வணிகம் செய்யவும், நம் நிலத்தை ஆக்கிரமிக்கவும் இங்கு வந்திறங்கினர். அதில் குளச்சலும் ஒன்று. குளச்சல் பகுதிக்கு வந்திறங்கிய டச்சுப் படையினர், திருவிதாங்கூர் வேனாடு மன்னரை வீழ்த்த நினைத்து தோற்றுப்போன வரலாறும் உண்டு.

இப்படியாக வரலாறும் அழகியலும் கூடிய பகுதியாக இருக்கிறது இந்த குளச்சல் பகுதி. இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கடற்கரையை வாழ்விடமாகவும் கடலையே வாழ்வாதாரமாகவும் கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். துவக்க காலத்தில் கட்டுமரத்தில் சென்று மீன்பிடித் தொழில் செய்துவந்தனர் இப்பகுதி மீனவர்கள்.

1957-ல் குளச்சல் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் லூர்தம்மாள் சைமன். இவர் காமராஜரின் அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர். அப்போது அவர் மீனவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இயந்திரங்கள் பொருத்திய நவீன ஃபைபர் படகுகள் மற்றும் போலந்து - இந்தியா கூட்டு முயற்சியில் நவீன விசைப்படகுகளையும் வாங்கி மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கினார்.

பிறகு குளச்சல் சைமன்காலனி பகுதியில் மீனவர் பயிற்சிப் பள்ளி ஒன்று துவங்கப்பட்டது. அப்பயிற்சிப் பள்ளியில் நவீன மீன்பிடி பயிற்சி மற்றும் இயந்திரங்களை பழுது பார்க்க இளநிலை கம்பியர் பயிற்சி மற்றும் மாலுமியல் பயிற்சி ஆகியவை வழங்கப்பட்டன. மேலும் சுறா வேட்டைக்கான ஆழ்கடல் மீன்பிடிப்பும் ஊக்குவிக்கப்பட்டது. பயிற்சி மையத்திற்கு சொந்தமான முத்து, பவளம், சங்கு என்ற மூன்று விசைப்படகுகளை வைத்து கடல் ஆராய்சி பணிகளும் நடைபெற்று வந்ததாக கூறுகின்றனர் மீனவர்கள்.

இப்படியாக சிறப்பு வாய்ந்த குளச்சல் மீனவர் பயிற்சி மையம், கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக மீனவர்களுக்கு பயிற்சி வழங்காமல் மூடப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் விசைப்படகு ஓட்டுனருக்கான பயிற்சியினைப் பெறவும் ஓட்டுனர் உரிமம் பெறவும் 60-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் தூத்துக்குடி சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் கேரளா போன்ற பிற மாநிலங்களுக்கு செல்லும் நிலையே உள்ளது.

எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த பயிற்சிப் பள்ளியை திறந்து மீனவர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும் எனவும், கடல் ஆராய்சி மற்றும் மீனவ பெண்களின் பொருளாதாரம் மேம்பட கடல் பாசி வளர்ப்பு, கடல் உணவுகளை பதப்படுத்தி மதிப்பு கூட்டுவது போன்ற பயிற்சிகளையும் வழங்க முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் அப்பகுதி மீனவர்கள்.

பொதுநிலவாசிகளுக்கு கடல் ஒரு சுற்றுலாத் தலம். மீனவர்களுக்கோ கடலே வாழ்வாதாரம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com