இது புதிய அரட்டை அரங்கம்! ‘கிளப் ஹவுஸ்’ சோஷியல் மீடியா அப்ளிகேஷன் - ஒரு பார்வை

இது புதிய அரட்டை அரங்கம்! ‘கிளப் ஹவுஸ்’ சோஷியல் மீடியா அப்ளிகேஷன் - ஒரு பார்வை
இது புதிய அரட்டை அரங்கம்! ‘கிளப் ஹவுஸ்’ சோஷியல் மீடியா அப்ளிகேஷன் - ஒரு பார்வை

இணையவெளியில் புது வரவாக அமைந்துள்ளது ‘கிளப் ஹவுஸ்’ என்ற புதிய சமூக வலைத்தளம். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் பயனார்கள் பயன்படுத்தும் வகையில் அறிமுகமானது இந்த அப்ளிகேஷன். நெட்டிசன்கள் மத்தியில் இப்போது இது குறித்துதான் வைரல் டாக் நடந்து வருகிறது. கடந்த ஆண்டே இது அறிமுகமாகி இருந்தாலும் இந்தியாவுக்கு இப்போதுதான் வந்துள்ளது. 

வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என வரிசையாக பல சமூக வலைதளங்கள் நம்மை சூழ்ந்திருக்கும் நிலையில் அவற்றுக்கும், கிளப் ஹவுஸுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

வழக்கமாக சமூக வலைத்தளங்கள் என்றால் வீடியோ, போட்டோ என ஒரே தீமின் கீழ் கலர்புல்லாக இருக்கும். ஆனால் அவற்றிலிருந்தும் முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது கிளப் ஹவுஸ். இதில் ஆடியோவை மட்டுமே பகிர முடியும். சுருக்கமாக சொன்னால் இதனை ‘அரட்டை அரங்கம்’ என சொல்லலாம். ஒரே நேரத்தில் ஐயாயிரம் பேர் பேச வழிவகை செய்கிறது இந்த கிளப் ஹவுஸ். பல்வேறு தலைப்புகளின் கீழ் இந்த அப்ளிகேஷனில் அரட்டை அடிக்கலாம். அது முன்கூட்டியே திட்டமிட்ட ஒன்றாகவும், திட்டம் ஏதும் இல்லாம திடீரென கூடியதாகவும் இருக்கலாம்.

எப்படி செயல்படுகிறது?

நம் ஊர் பக்கங்களில் திருவிழா காலங்களில் நடைபெறுகின்ற கட்டைக்கூத்து, கிராமிய கலைகள், ஆடல் பாடல் கச்சேரிகளை எப்படி பார்வையாளராக நாம் கவனிப்போமோ அதே போலதான் இந்த கிளப் ஹவுஸ் செயலியில் உள்ள அரட்டை அரங்கங்கள் செயல்படுகின்றன. இதனை Room என்கிறது கிளப் ஹவுஸ். முன்பு கூறியதை போல ஒவ்வொரு கிளப் ஹவுஸ் பயனரும் அவரவருக்கு விருப்பமான தலைப்புகளின் கீழ் நடைபெறும் அரட்டை அரங்குகளில் பங்கேற்கலாம். மேடை கச்சேரியை பார்த்துக் கொண்டிருக்கும் போது நமக்கு பிடித்த பாடலை பாட சொல்ல குரல் கொடுப்போம் அல்லவா? அதே போல இந்த ரூமிலும் ✋ Hand Raising ஐகான் மூலம் உரையாடல்களில் நமது கருத்தை சொல்லலாம். அதற்கு அந்த அரங்கத்தை உருவாக்கி இருக்கும் மாடிரேட்டர்களின் அனுமதி தேவைப்படுகிறது. ஒவ்வொரு அரங்கிலும் ஐயாயிரம் பேர் வரை பங்கேற்கலாம். அரங்கில் பங்கேற்றுள்ள பயனர்கள் தங்களது நண்பர்களுக்கு அது குறித்த விவரங்களை பகிர்ந்து, அவர்களையும் அமர்வில் பங்கேற்க சொல்லி அழைப்பு விடலாம். இடையில் ஏதேனும் வேலை நிமித்தமாக அரங்கை விட்டு எந்தவிட இடையூறும் இல்லாமல் வெளியேறவும் ஆப்ஷன்கள் உள்ளது. 

உலகின் எந்த பகுதியிலிருந்தும் யார் வேண்டுமானாலும் தங்களுக்கு பிடித்த தலைப்புகளின் கீழ் நடைபெறும் திறந்தவெளி அரங்கங்களில் பங்கேற்கலாம். அதே நேரத்தில் அரங்குகளை ஒருங்கிணைக்கும் அல்லது உருவாக்கிய மாடிரேட்டார்கள் அந்த அரங்கம் அனைவருக்குமான திறந்தவெளி அமர்வா, ஒரு கம்யூனிட்டிக்கு மட்டுமானதா அல்லது பூட்டிய அமர்வா என்பதை தீர்மானிப்பாளர்கள். இதில் திறந்தவெளி அமர்வுகளில் அனைவரும் பங்கேற்கலாம். மற்றவற்றுக்கு அழைப்புக்கான லிங்க் தேவை இருக்கலாம். 

எப்படி பயன்படுத்துவது?

எப்போதுமே சமூக வலைத்தளங்கள் என்றால் மின்னஞ்சல் முகவரி அல்லது மொபைல் எண் மூலமாக Sign Up செய்து கொண்டு பயன்படுத்த தொடங்கலாம். ஆனால் இந்த கிளப் ஹவுஸில் பயனராக இணைய அதுமட்டும் போதாது. கிளப் ஹவுஸ் பயனராக உள்ள ஒருவரது அழைப்பு இருந்தால் மட்டுமே உள்நுழைந்து பயன்படுத்த முடியும். ஏற்கனவே பயனராக கிளப் ஹவுஸ் தளத்தில் இயங்கி வருபவருக்கு இரண்டு அழைப்புகள் ஆபராக கொடுக்கிறது இந்த தளம். 

ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் iOS என இரண்டு இயங்குதளம் கொண்ட பொங்கலில் பயன்படுத்தலாம். மற்ற சமூக வலைத்தளங்களை போல இதனை வெப்சைட்களில் பயன்படுத்த முடியாது. இதற்கு ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்கள் அவசியம் தேவைப்படுகின்றன. இது மொபைல் Only அப்ளிகேஷன். 

என்னென்ன தலைப்புகளில் பேசலாம்?

வரலாறு, விளையாட்டு, சமையல், உடல் ஆரோக்கியம், தொழில்நுட்பம், இடங்கள் என சகலம் குறித்தும் இதில் பேசலாம். பயனராக நான் ‘பொன்னியின் செல்வன்’ என்ற தலைப்பில் ஒரு அமர்வையும் பார்த்திருந்தேன். 

எப்போது உருவானது? 

கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையின் போது கிளப் ஹவுஸ் அப்ளிகேஷன் அதிகார பூர்வமாக ஆப்பிள் iOS பயனார்களுக்காக அறிமுகாமனது. 2019இல் டாக்ஷோ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்கியவர்கள் பால் டேவிசன் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர் ரோஹன் சேத். தொடக்கத்தில் பிரபலங்களை பயன்படுத்தி இந்த அப்ளிகேஷன் தன்னை பிரபலபடுத்திக் கொண்டுள்ளது. 

இதனை போட்காஸ்டின் ஒரு வடிவம் எனவும் சொல்லலாம். பிரபலங்களும் இதில் இருப்பதால் அவர்களது அரட்டை அரங்கிலும் பங்கேற்கலாம். கருத்தரங்கு போல பலரும் பங்கேற்கலாம். இப்போதைக்கு அமெரிக்காவில் இதன் மூலம் அரங்குகளை ஒருங்கிணைக்கும் பயனர்கள் வருமானம் ஈட்டலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக அடுத்தடுத்த நாடுகளிலும் உருவாகலாம். இந்த உரையாடல்களை யூடியூப் தளத்தில் லைவ் ஸ்ட்ரீம் செய்யும் வசதியும் உள்ளது. 

ஐகானில் புதுமை!

இந்த அப்ளிகேஷனுக்கு என நிலையான ஐகான் இதுவரை உருவாக்கப்படவில்லை. விரைவில் அது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு சுழற்சி முறையில் கருப்பு வெள்ளை நிறத்தில் பிரபலங்களின் படத்தை ஐகானாக பயன்படுத்தி வருகிறது. தற்போது ஆசிய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க சமூக செயற்பாட்டாளர் ட்ரூ கட்டோகா படம்தான் கிளப் கவுஸின் ஐகானாக உள்ளது.  

இனி எல்லோரும் கிளப் ஹவுஸில் அரட்டை அடிப்பது உறுதி!

- எல்லுச்சாமி கார்த்திக் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com