ஓடிடி திரைப்பார்வை 16: மனசாட்சிக்கும் வாழ்வியல் தேவைகளுக்குமான போராட்டம் - சும்பக் எப்படி?

ஓடிடி திரைப்பார்வை 16: மனசாட்சிக்கும் வாழ்வியல் தேவைகளுக்குமான போராட்டம் - சும்பக் எப்படி?

ஓடிடி திரைப்பார்வை 16: மனசாட்சிக்கும் வாழ்வியல் தேவைகளுக்குமான போராட்டம் - சும்பக் எப்படி?

மனிதாபிமானம் நிறைந்த மனசாட்சிக்கும் வாழ்வியல் தேவைகளுக்கும் இடையே போராடும் ஒரு சிறுவனின் வாழ்க்கை குறித்த சினிமாதான் இந்த 'சும்பக்' (Chumbak). Chumbak என்றால் லாட்டரி என்று பொருள். மராத்திய சினிமாவான இதில் ஸ்வனாந்த் கிர்கிரே, ஷஹில் ஜாதவ், சங்ராம் தேசாய் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

15 வயது சிறுவனான பாலு மும்பையில் ஓட்டல் ஒன்றில் சாதாரண பணி செய்கிறார். தன் சொந்த ஊரில் சொந்தமாக ஒரு சிறிய ஜூஸ்கடை வைக்க முயலும் சிறுவனுக்கு 16,000 ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால் பாலுவிடம் இருக்கும் சேமிப்போ 8,000 ரூபாய் தான். இந்நிலையில், ஒரே வாரத்தில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகச் சொல்லும் நண்பனை நம்பி ஏமாந்து போகிறான். பாலு இயலாமையில் என்ன செய்வதென்று புரியாத பாலுவிற்கு கிடைக்கும் அறிவுரைகள் அவனை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறது. ஆனால் பணத்திற்காக அந்த தவறான பாதையில் முழுமையாக பயணிக்கவும் முடியாமல் இலக்கை அடையவும் முடியாமல் தவிக்கும் சிறுவனின் நாள்கள் தொகுப்பாக 'சும்பக்' கிடைக்கிறது.

“உங்களுக்கு லாட்டரியில் கோடி ரூபாய் பணம் கிடைத்திருக்கிறது. அதனைப் பெற சிறிய தொகையினை நீங்கள் வங்கியில் செலுத்த வேண்டும்.”. “உங்கள் ஏடிஎம் மேல் இருக்கும் இலக்கங்களைச் சொல்லுங்கள்.” இதுபோல நமக்கு எத்தனையோ ஏமாற்று போன் கால்கள், குறுந்தகவல்கள் அன்றாடம் வருகின்றன. பணத்தை சேகரிக்கவும் இழந்த பணத்தை மீட்கவும் அது போலொரு ஐடியாவைத் தான் கையாள்கிறான் பாலு. இப்படியாக பாலுவின் போன் காலை நம்பி மும்பை வந்து சேர்கிறார் ப்ரசன்ன்னா. சோலாப்பூருக்கு அருகே இருக்கும் கிராமத்திலிருந்து வந்திருக்கு ப்ரசன்னா கொஞ்சம் மனவளர்ச்சி குன்றியவரும் கூட.

இப்படியொருவரையா ஏமாற்றப்பார்த்தோம் என நினைக்கும் பாலு அவரிடமிருந்து கிடைக்கும் பணத்தை இழக்க விரும்பாமலும், அவரை ஏமாற்ற மனமில்லாமலும் தவிக்கிறான். உண்மையில் பாலுவும் பிரசன்னாவிடன் வசமாக மாட்டிக் கொள்கிறான் என்றே சொல்ல வேண்டும். இப்படியாக எளிய சிறுவனின் முன்னேறத்துடிக்கும் மனநிலைக்கும் அதனை நேர்மையாகத்தான் செய்யவேண்டும் என நினைக்கும் மனதுக்கும் நல்ல காட்சி வடிவங்களைக் கொடுத்திருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் சந்தீப் மோதி.

காட்சியொன்றில் பாலுவின் மனதைத் தேற்ற பாலுவின் நண்பன் சில விளக்கங்களைச் சொல்கிறான். “அங்க பாரு பாலு, அதோ கடையில் பத்து ரூபாய் தண்ணி பாட்டில 50 ரூபாய் குடுத்து வாங்குறானே., அது அவனுக்கு தெரியாம இல்ல. விக்கிறவனுக்கும் தெரியாம இல்ல. ஆனா தெரிஞ்சே ஏமாறுவானுங்க. இதுக்கு இங்க பிஸ்னஸ்னு பேரு. உன் கிட்ட காச திருடுனவன் உன்கிட்ட பிஸ்னஸ் பண்ணி இருக்கான். நீ அத கத்துக்க. இந்த உலகம் இப்படித்தான் இயங்குது.” என ஜி.நாகராஜன் நீண்ட விளக்கத்தை தருகிறான். இக்காட்சியில் வசனங்கள் அருமை. அதுபோல “செல்போனை விட கிட்னியோட விலை மலிவா...?” எனக் கேட்கும் காட்சி சிரிக்கவும் யோசிக்கவும் வைக்கின்றன. பேராசைக்கு முன் ஏழை பணக்காரன் என பேதமில்லை.

பாலு உண்மையில் மனநலம் குன்றிய பிரசன்னாவை அவரது சொந்த ஊருக்கு அழைத்துப் போய் குடும்பத்தாரிடம் சேர்த்தாரா இல்லையா என்பதை நோக்கி நகரும் படத்தின் இரண்டாம் பாதி நல்ல அணுகுமுறை. பிரசன்னா கதாபாத்திரத்தில் ஸ்வனாந்த் கிர்கிரே சிறப்பாக நடித்திருக்கிறார். சிறுவன் பாலு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் ஷஹில் ஜாதவும் நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார்.

ஒரு பயணம் போல நீளும் காட்சிகளில் பல இடங்கள் மேலோட்டமாக அணுகப்பட்டிருப்பது இப்படத்தின் மிகப்பெரிய குறை. நல்ல கதைக் கரு இதனை இன்னுமே அழுத்தமாக காட்சிகளுடனும் ஆழமான வசனங்களுடனும் அணுகி இருக்கலாம். என்றாலும் இத்திரைப்படம் மிக எதார்த்தமான உணர்வை பார்வையாளருக்குத் தருகிறது. இதற்கு ரங்கராஜன் ராமபத்ரனின் ஒளிப்பதிவு முக்கியக் காரணம்.

மும்பைக்கு வரும் பலரும் அம்பானியாகும் கனவுகளுடனே வருகிறார்கள். ஆனால் மும்பையோ பலரை கனவுகளுடன் மட்டுமே திருப்பியனுப்பிவிடுகிறது. ஏமாற்று பேர்வழிகளுக்கு நடுவே முன்னேறத்துடுக்கும் எளிய உயிர்கள் சிறுவன் குறித்த இந்த சினிமா பீல் குட் மூவி பிரியர்களுக்கு ஏற்றது. தன் சக்திக்குட்பட்டு மனிதர்கள் எல்லோரும் யாரோ ஒருவரை ஏதோ ஒரு சூழலில் ஏமாற்றவே நினைக்கின்றனர் என்பதே 'சும்பக்' (Chumbak) முவைக்கும் பார்வை. தற்போது இந்த சோனி லைவில் காணக் கிடைக்கிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com