"மொபைல் வேண்டாம், உங்களுக்கு வீட்டில் உதவி செய்கிறோம்" - பெற்றோருக்கு உதவும் குழந்தைகள்
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாவதை தடுக்க, மாற்று வழிகளில் நேரத்தை செலவழிக்கின்றனர் இரண்டு சிறுவர்கள்.
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் சிறுவர்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டை கடந்தும் கூட பள்ளிக்கு செல்ல முடியாத சூழலில் சுற்றுலாதலங்களுக்கு செல்ல முடியாமலும், நண்பர்களோடு சேர்ந்து விளையாட முடியாத நிலையிலும் மனசோர்வு ஏற்படும் நிலையில் உள்ளனர்.
இதனிடையே வீடுகளில் முடங்கி கிடக்கும் பொழுதில் பெற்றோர்களுடைய செல்போன்களை பயன்படுத்தி அதன் மூலமாக ஆன்லைன் கேம், யூடியூப் என முழுவதும், உண்ணாமல் உறங்காமல் கூட செல்போனுடன் இருக்கக் கூடிய அபாயகரமான சூழல் உருவாகியுள்ளது.
ஆன்லைன் வகுப்புகளுக்கு சில நிமிடங்கள் ஒதுக்கினாலும் பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க முடியாத சூழலும் ஏற்படுகிறது. இதன் காரணமாக பல்வேறு பாதிப்புகளும் உருவாகின்றது. இதனை மாற்றும் முயற்சியாக மதுரையில் செல்லூர் பகுதியை சேர்ந்த அன்புமணி - சுகன்யா தம்பதியினரின் பெண் குழந்தைகளான ஸ்ரீமதி, ஸ்ரீமுகி ஆகிய இரு சிறுவர்களும் ஊரடங்கு காரணமாக வீட்டிலயே பாதுகாப்பாக இருந்தாலும்கூட இந்த பொழுதை பயனுள்ளதாக மாற்றும் முயற்சியை கையில் எடுத்துள்ளனர்.
அந்தவகையில் பெற்றோருடன் வீட்டு வேலையில் உதவியாக இருக்க முன்வந்துள்ளார்கள் அவர்கள். குறிப்பாக சமைப்பதில் ஆர்வமாக இருப்பதால், தாங்களும் சமைக்க வேண்டும் என பெற்றோர்களிடம் கேட்டுள்ளனர். பெற்றோரும் அதற்கு உதவும் வகையில் குட்டி குட்டி பாத்திரங்கள் வாங்கி கொடுத்து, சமையலை விளையாட்டாக மாற்றி சொல்லிக்கொடுக்கின்றார்கள்.
கிராமங்களில் விளையாடக்கூடிய கூட்டாஞ்சோறு விளையாட்டு முறையை நிஜமாக்கும் வகையில் சின்னஞ்சிறு மண்பாண்டங்களை பயன்படுத்தி நெய்தீபங்களையும், சிறு சிறு விறகு குச்சிகளையும் பயன்படுத்தி அடுப்பை எரியூட்டி ரசம் சாதம், சாம்பார் சாதம், சைவ பிரியாணி, குளோப்ஜாமுன், கோதுமை அல்வா, வாழைப்பூ வடை என விதவிதமான சுவையான சிறிய அளவிலான ரெசிப்பிகளை சமைத்து சிறுவர்கள் இருவரும் உண்கின்றனர். தாங்கள் செய்யக் கூடிய உணவுகளை அருகில் உள்ள நண்பர்களுக்கு உரிய சுகாதாரத்தை பின்பற்றி வழங்கிவருகிறார்கள்.
சபீபத்தில் ட்ரெண்டாகிவரும் மினிமலிசம் என்ற குட்டி குட்டி பொருள்களை வைத்து இவர்கள் அனைத்தையும் உருவாக்குவதால், பார்ப்போரை கவரும் விதமான விளையாட்டாக அமைந்திருக்கிறது.
தங்கள் பிள்ளையின் இந்த க்யூட்டான முயற்சிகளை வீடியோவாகவோ புகைப்படமாகவோ எடுத்து, அவர்களின் தந்தை சமூகவலைதளங்களில் பதிவிடுகிறார்.
தாங்கள் செய்யும் உணவை, தங்கள் வீட்டில் அருகில் உள்ள நண்பர்களுக்கும், பெற்றோருக்கும் முகக் கவசங்களை அணிந்தவாறு சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி சுகாதாரமான முறையில் வழங்கி விருந்தோம்பல் பண்பையும் உருவாக்கி கொள்கின்றனர்.
"நான் ஆறாம் வகுப்பு படிக்கிறேன். சின்ன சின்ன பொருள்களில் சமைப்பதால் உற்சாகமாக உள்ளது" என்று கூறி மழலை மாறாமல் கூறி மகிழ்கிறார் குழந்தைகளில் ஒருவரான ஶ்ரீமதி.
இவர்களின் தாய் சுகன்யா பேசும்போது, "பிற குழந்தைகளை போல செல்போனில் நேரத்தை செலவிடாமல், எங்களோடு எங்களின் வேலையை பகிர்ந்துக்கொண்டு அவர்கள் நேரத்தை செலவிடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது" எனக் கூறியிருக்கிறார்.
- மணிகண்ட பிரபு