ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன? - சிதம்பரம் நடராஜர் கோயிலின் புராண சிறப்புகள் என்ன?

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன? - சிதம்பரம் நடராஜர் கோயிலின் புராண சிறப்புகள் என்ன?
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன? - சிதம்பரம் நடராஜர் கோயிலின் புராண சிறப்புகள் என்ன?

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில், எல்லா சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசனம் மிகச் சிறப்பாக நடைபெறும். ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளான சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள்.

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆனிமாதம் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த இரு விழாக்களிலும் மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் உற்சவராக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகும். வேறு எந்த கோவில்களிலும் இத்தகைய சிறப்பை காண இயலாது என்பதால் இந்த விழாவை காண தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்திற்கு வருவார்கள்.

புராணங்கள் சொல்வதென்ன?

இதற்கு சில புராணச் செய்திகள் உள்ளன. சேந்தனார் வீட்டுக்கு களி சாப்பிட நடராஜப் பெருமான் வந்த தினம் அது. ஒரு மார்கழி மாத திருவாதிரை நாளில் இதை உணர்த்தும் வகையில், தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுகிறது.

சிதம்பரத்தில் நடராஜர் ஆனந்த நடனம் ஆடிய இடத்தை சிற்றம்பலம் என்பார்கள். இதை சிற்சபை, சித்சபை என்றும் அழைப்பதுண்டு. இத்தலத்து பெருமானுக்கு சபாநாயகர், கூத்த பெருமான், நடராஜர், விடங்கர், மேருவிடங்கர், தெட்சிணமேருவிடங்கர், பொன்னம்பலம், திருச் சிற்றம்பலம் என்றெல்லாம் சிறப்புப் பெயர்கள் உண்டு. சிதம்பர ரகசியம் என்று கூறப்படும் பகுதியில் தங்கத்தால் ஆன வில்வத்தள மாலை தொங்கும் காட்சியைப் தரிசனம் செய்தால் முக்தி கிடைக்கும். இதைத்தான் பார்க்க முக்தி தரும் தில்லை என்கிறார்கள். பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலமாகக் அமைந்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் சிறப்பு

சிதம்பரத்தில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் திருக்கோவில் கொண்டுள்ளனர். இத்தலத்தில் மட்டுமே ஒரே இடத்தில் நின்றபடி சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூவரையும் தரிசனம் செய்ய முடியும். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவில் இந்த ஆலயம் உள்ளது. இத்தலத்தில் பொன்னம்பலம் எனப்படும் சிற்றம்பலம் மற்றும் திருமூலட்டானர் கோவில் ஆகிய 2 இடங்களில் இறைவனும், இறைவியும் எழுந்தருளி உள்ளனர்.

மனிதரின் உடம்பும் கோவில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞான மயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன. நடராஜரின் ஆனந்தத் தாண்டவத்தில்தான் இப்பிரபஞ்சத்தின் இயக்கமே அமைந்துள்ளது.

விழாக்கோலம் பூண்ட சிதம்பரம் - இன்று தேர்த்திருவிழா

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனம் விழா கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிலிருந்து இன்று வரை சிதம்பரம் விழா கோலமானது. முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று காலை தொடங்கியது விநாயகர் முருகன் நடராஜர் அம்பாள் சண்டிகேஸ்வரர் என ஐந்து தனி தனி தேர்களில் வீதி உலா நடைபெற்றது. தேரின் வடத்தை பிடித்து இழுக்க பல ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். குறிப்பாக, தேர் திருவிழா நடைபெற்று கொண்டிருந்தபோது மழை பெய்யத் தொடங்கியது. மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வடத்தை பிடித்து தேரை இழுத்து சென்றனர்.

தேரை இழுத்து செல்லும் சாலைகள் அனைத்திலும் கோலமிட்டு நடராஜரை பக்தர்கள், பொதுமக்கள் வரவேற்றனர். இது மட்டும் இல்லாமல் கலைக்குழுவினர் நடராஜர் நான்கு ரத வீதி வழியாக வரும் சமயத்தில் உற்சாக நடனமாடி கைலாய வாத்தியம், பம்பை, உடுக்கை என பல வாத்தியங்களில் வாசித்து உற்சாகமாக நடராஜரை வரவேற்றனர். இது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. இப்படி நான்கு ரத வீதி வழியாக 5 தேர்களும் வலம் வர ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு குவிந்த காரணத்தினால் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடும் அதிகப்படுத்தப்பட்டிருந்தது.

நடராஜருக்கு எப்படி நாட்டியாஞ்சலி அர்ப்பணம் செய்கிறார்களோ ஆண்டுக்கு ஒரு முறை அது போல் நாட்டுப்புற கலைஞர்கள் சிவ வேடம் அணிந்து நடனமாடி நடராஜருக்கு கலைகளை அர்ப்பணம் செய்தனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com