செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்: நூலிழையில் அரையிறுதி வாய்ப்பை இழந்த சென்னை அணி! காரணம் என்ன?

செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்: நூலிழையில் அரையிறுதி வாய்ப்பை இழந்த சென்னை அணி! காரணம் என்ன?
செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்: நூலிழையில் அரையிறுதி வாய்ப்பை இழந்த சென்னை அணி! காரணம் என்ன?

2023ஆம் ஆண்டுக்கான செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரில் நடிகர் ஆர்யா தலைமையிலான அணி ரன் ரேட் அடிப்படையில் நூலிழையில் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

பிரபலமான செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்

எத்தகைய வடிவ கிரிக்கெட் தொடராக இருந்தாலும், அதைக் கொண்டாடுவதற்கு உலக ரசிகர்கள் தயாராகி விட்டனர். இதில் சர்வதேச போட்டி, ரஞ்சிப் போட்டி, ஐபிஎல் வகையிலான கிரிக்கெட் தொடர்களுக்கு என கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் சமீபகாலமாக நடிகர்கள் பங்கேற்று விளையாடும் கிரிக்கெட் தொடரும் இந்திய ரசிகர்கள் மத்தியில் மெருகேறி வருகிறது. அதன்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட 8 மாநில திரைப்படத் துறையில் உள்ள நடிகர்கள் பங்கேற்கும் 'செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்' (CCL) என்ற கிரிக்கெட் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.

8 அணிகள் பங்கேற்கும் சிசிஎல்

மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், சென்னை ரைனோஸ், தெலுங்கு வாரியர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பெங்கால் டைகர்ஸ், பஞ்சாப் டி ஷேர், போஜ்புரி தபாங்ஸ் ஆகிய எட்டு அணிகள் இந்த தொடரில் மோதுகின்றன. இந்த ஆண்டுக்கான போட்டிகள் கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி தொடங்கியது. மார்ச் 19ஆம் தேதி வரை நடக்க உள்ள இத்தொடரில், லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த போட்டிகள் ஐதராபாத், ராய்ப்பூர், பெங்களூர், திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், ஜோத்பூர் ஆகிய 6 நகரங்களில் நடைபெற்று வருகின்றன. டி10 ஓவர்கள் அடிப்படையில் டெஸ்ட் போட்டி வடிவில், இப்போட்டிகள் நடைபெறும். 2 அரையிறுதி, 1 இறுதிப்போட்டியுடன் 16 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன.

அரையிறுதி வாய்ப்பை இழந்த நடிகர் ஆர்யா அணி

நேற்றுடன் நடைபெற்ற லீக் சுற்று முடிவின்படி, சென்னை ரைனோஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி, 2 போட்டியில் மட்டும் வெற்றிபெற்று பட்டியலில் 5வது இடத்தில் உள்ளதால், அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது. அதேநேரத்தில் இந்தப் பட்டியலில் கர்நாடகா புல்டோசர்ஸ் மற்றும் போஜ்புரி தபாங்ஸ் ஆகிய அணிகள் தாம் மோதிய 4 போட்டிகளிலும் வெற்றிபெற்று முதல் இரண்டு இடங்களில் உள்ளதுடன் அரையிறுதிக்கும் தகுதிபெற்றுள்ளன. அதேபோல், 3வது மற்றும் 4வது இடங்களில் மும்பை ஹீரோஸ், தெலுங்கு வாரியரஸ் ஆகிய அணிகள் உள்ளன.

பஞ்சாப் 1 போட்டியில் வெற்றிபெற்று 6வது இடத்தில் உள்ளது. பெங்கால் மற்றும் கேரளா தாம் மோதிய எந்த ஆட்டங்களிலும் வெற்றிபெறாததால் கடைசி இடங்களில் உள்ளன. சென்னை மற்றும் தெலுங்கு ஆகிய அணிகள் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தபோதும், ரன்ரேட் அடிப்படையில் தெலுங்கு வாரியர்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

இரண்டு அரையிறுதிப் போட்டிகள்

முன்னதாக இவ்விரு அணிகளுக்கும் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது. என்றபோதும் அரையிறுதியில் சென்னை அணியால் நுழைய முடியவில்லை. இதையடுத்து, வரும் 18ஆம் தேதி நடைபெற இருக்கும் முதலாவது அரையிறுதியில் கர்நாடகா புல்டோசர்ஸ் மற்றும் தெலுங்கு வாரியர்ஸ் அணிகள் மோத இருக்கின்றன. அதேநாளில் நடைபெற இருக்கும் இரண்டாவது அரையிறுதியில் போஜ்புரி தபாங்ஸ் மற்றும் மும்பை ஹீரோஸ் ஆகிய அணிகள் மோத இருக்கின்றன. இதில் வெற்றிபெறும் அணிகள் மார்ச் 19ஆம் நாள் இறுதிப்போட்டியில் மோதும்.

இரண்டு முறை கோப்பையைக் கைப்பற்றிய சென்னை அணி

2011 முதல் ஆண்டுதோறும் விளையாடப்பட்டு வரும் இந்தத் தொடரில் முதலாவது மற்றும் இரண்டாவது (2011, 2012) கோப்பைகளை சென்னை அணி வென்று சாதனை படைத்திருந்தது. அடுத்து, 2015ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் தெலுங்கு வாரியர்ஸ் அணியுடன் மோதி கோப்பையை இழந்தது. இந்தப் பட்டியலில் தெலுங்கு வாரியர்ஸ் அணி தொடர்ந்து மூன்று (2015, 2016, 2017) முறை கோப்பையைக் கைப்பற்றியது. சென்னையைப் போலவே கர்நாடக புல்டோசர்ஸ் அணியும் இரண்டு முறை (2013, 2014) தொடர்ச்சியாக இந்த கோப்பையைக் கைப்பற்றியது. இந்தப் பட்டியலில் மும்பை ஹீரோஸ் 2019ஆம் ஆண்டு கோப்பையைக் கைப்பற்றி இருந்தது.

இந்த ஆண்டுக்கான சென்னை ரைனோஸ் அணியில் ஆர்யா (கேப்டன்), விஷ்ணு விஷால், ஜீவா, விக்ராந்த், சாந்தணு, பிரித்திவி, அசோக் செல்வன், கலையரசன், மிர்சி சிவா, பரத் நிவாஸ், ரமணா, சத்யா, தசரதன், சரண், ஆதவ், பாலசரவணன் ஆகியோர் பங்கேற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com