“இன்னைக்கோ நாளைக்கோ, இதான்பா எங்க வாழ்க்கை” - பரிதவிக்கும் பட்டினப்பாக்கம்

“இன்னைக்கோ நாளைக்கோ, இதான்பா எங்க வாழ்க்கை” - பரிதவிக்கும் பட்டினப்பாக்கம்
“இன்னைக்கோ நாளைக்கோ, இதான்பா எங்க வாழ்க்கை” - பரிதவிக்கும் பட்டினப்பாக்கம்

வீடுகளை இழந்து, உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலையில் பிஞ்சுக் குழந்தைகளுடன் வாழும் இவர்களும் சென்னையை சேர்ந்தவர்கள்தான்.

சென்னையின் மைய பிரச்னையாக மாறியிருக்கிறது பட்டினப்பாக்கம். கடல் அரிப்பால் மக்கள் தங்களின் இருப்பிடத்தை இழந்து தவிக்கிறார்கள். பல வீடுகள் கடல் அரிப்பால் தரை மட்டமாக சரிந்து கிடக்கின்றன. விரைந்து செயல்பட வேண்டிய அதிகாரிகள் அமைதி காத்து வருகிறார்கள். இன்று கூட மீனவப் பெண் ஒருவர் மீனவத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வீட்டின் முன்பாக நண்டு விடும் போராட்டத்தை நடத்தியதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். அந்தப் பகுதியின் மனநிலை என்ன? உண்மையில் அவர்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிய புதிய தலைமுறை இணையதளம் சார்பில் ஒரு விசிட் அடித்தோம். கடல் அலைகள் பொங்குவதைவிட  நாம் பேச்சுக் கொடுத்த மீன மக்கள் அதிகமாகவே பொங்கினார்கள். 

இந்தக் கடல் அரிப்பால் பட்டினப்பாக்கம், சீனிவாசரபுரத்தில் மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் கடல் அலைக்கு இரையாகியுள்ளன. அங்கு இருக்கும் மக்கள் வீடுகள், உடைகள், சான்றிதழ்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை இழந்தும் வாழ்வாதாரத்தை பறிகொடுத்து சாலையில் நிற்கின்றனர் என்பதை நம்மால் நேரில் காண முடிந்தது. 

கடல் அரிப்பு என்பது பருவநிலை மாற்றத்தின்போது கடல் நீரோட்டத்தால் ஏற்படும் இயற்கை சம்பவமாகும். ஆனால் இந்தக் கடல் அரிப்புகள் தென் மாநிலங்களில் கடலோரப் பகுதிகளில் பல ஆண்டுகளாக படிப்படியாக முன்னேறி, மக்களின் குடியிருப்பு பகுதிகள் வரை வந்து நிற்கிறது. பல மாதங்களுக்கு முன்னர் தென்தமிழக கடலோர பகுதியான ராமேஸ்வரத்திலுள்ள மீனவக் குடியிருப்புகளை கடல் அரிப்பு சேதமடையச் செய்தது. இது ராமேஸ்வரம் மட்டுமின்றி சென்னை உள்ளிட்ட பல்வேறு கடலோரப் பகுதிகளிலும் தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக ஜூன், ஜூலை மாதங்களில் தான் இந்தக் கடல் அரிப்பு அதிகம் ஏற்படுகிறது. இந்தச் சமயங்களில்தான் கடல் அலையின் சீற்றமும் அதிகரிக்கின்றது. 

சீனிவாசபுரத்தின் பிராதன சாலையில் இருந்து, அங்கிருக்கும் கடல் பகுதியில் இறங்கினோம். காலை எடுத்து வைக்கும் போது, சீறிய வேகத்துடன் கடல் அலைகள் நமக்கு எச்சரிக்கை செய்தன. அங்கிருந்து கடலோரப்பகுதியை பார்வையிட்டால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இடிந்து கிடந்த வீடுகளாக காட்சியளித்தன. முற்றிலுமாக அப்பகுதி கடல் அலைகளால் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது புரிந்தது. 

அவ்வழியே நடந்து சென்றால் ஆங்காங்கே மணல் மேடுகள் அரிக்கப்பட்டு, வாழ்வா? சாவா? என மக்கள் போகும் வழித் தெரியாமல் பரிதவித்துக் கொண்டிருந்தனர். அதில் கையில் குழந்தைகளுடன் சில குடும்பப் பெண்கள் அமர்ந்திருந்தனர். அவர்களின் முகத்தில் இந்தக் கடல் அலை நம்மை எப்போது இழுத்துச் செல்லுமோ என்ற பதட்டம்தான் தென்பட்டது. 

சிலர் தங்களின் வீடுகளில் கடல் விட்டுச்சென்ற சில பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்தனர். அவர்களால் அங்கு வாழவும் முடியவில்லை. வேறு எங்கே போவது என்பதும் புரியாமல் புலம்புவதை நம்மால் கேட்க முடிந்தது. அச்சம் அந்தளவுக்கு அவர்களின் இரவு தூக்கத்தைகூட விரட்டியடித்துள்ளது.  

நம்முடன் பேசிய சாந்தா, “சுத்தமா எங்க வீடு கடல் தண்ணில போயிடுச்சு. வீட்டுல இருந்த பொருள் எல்லாம் தண்ணியோட தண்ணியா கரைஞ்சுப் போச்சு. எங்க இருக்குறதுனு தெரியாம ரோட்ல வந்து உட்கார்ந்து இருக்குறோம். இதுவரை அரசாங்கம் எங்களுக்கு எதாச்சும் செய்யும்னு நம்பிட்டு இருக்குறோம். ஒரு உதவியும் கிடைக்குற மாதிரி தெரியல. காலம்தான் கடந்துகிட்டு இருக்கு” என்றார். அவரது பேச்சில் ஆதங்கம் அதிகம் வெளிப்பட்டது.

அவரை தொடர்ந்து பேசிய கீதா, “எங்க வீடும் கடல்ல போயிடுச்சு, எங்க போவதென்று தெரியாமல் தவிக்கிறோம். ஒவ்வொரு வருசமும் இப்படியே  எல்லா வீடும் கடலுக்குள்ள போயிட்டேதான் இருக்கு. எங்களுக்கு அரசு வீடு கட்டிக் கொடுத்தால் போதும். சில இடத்துல அடுக்குமாடி வீடு கட்டிக் கொடுத்தது போல, எங்களுக்கும் வீடு கட்டிக்கொடுக்கனும். அரசு சார்பா யாரும் வரல, எந்த நடவடிக்கையும் எடுக்கல. நாதியற்று நடுத்தெருவுல நிற்குறோம் சாமீ” என்றார் அந்தப் பெண்மணி. 

நாம் வந்திருப்பதை அறிந்த மக்கள் நம்மை சூழ்ந்து கொண்டு புலம்பினார்கள். அவர்களுக்கு தேவை ஒரு அவசரகால நடவடிக்கை. அதுவே அனைவரின் குரலாக ஒலித்தது. அடுத்து நம்மிடம் பேசிய ரோசம்மா வயதில் முதியவர். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் இங்குதான். சுறுக்கமாக சொன்னால் பூர்வக்குடி. அவர்,  “எங்க பேரன், பேத்திலாம் எங்க போவாங்க சொல்லுங்க? ஒவ்வொரு வருஷமும் 10 வீட்டுக்கு மேல கடலுக்குள்ள போகுது. சின்னக் குழந்தைகளை வைச்சுக்கிட்டு இங்க இருக்குறது பயமா இருக்கு. என்ன சொல்றதுன்னே தெரியல தம்பீ” என்று பதட்டமாக பேசுகிறார்.

“உடுத்த ஒரு உடுப்பு இல்ல. மொத்த துணியும் போயிடுச்சு. போட்டிருக்க துணியத் தவிற மாத்து துணி இல்ல. எங்களுக்கு ஒரு குடியிருப்பு மட்டும் அரசு கொடுத்தா போதும். நொச்சிக்குப்பம் பகுதியில இருக்க குடியிருப்பு போல எங்களுக்கும் அரசு வீடு கட்டிக்கொடுக்கனும். அதுதான் எங்க கோரிக்கை” என்கிறார் ஸ்ரீமதி. 

ஸ்ரீமதியின் சகோதரியும் இங்கேதான் இருக்கிறார். அவர், “இரவு தூங்கும் போது மரண பயம் வருது. ஒரு வீடு விழும்போது மற்றொரு வீடு அதிர்கின்றது. அப்போது ஏற்படும் பயம் கொடூரமா இருக்கு. கடல் அலை மண்ணை அடியில் அரிச்சுடுது. மண்ணு போனபிறகு வீடு தானா விழுந்துடுது. குழந்தைகளோடு வீட்டில் இருக்கிறோம். வீடு அதிரும் போது உள்ளே எப்படி இருக்க முடியும்?”என்றார். ஒட்டு மொத்த மக்களும் எதிர்பார்ப்பது உடனடி நிவாரணத்தை. அரசு அதை அவர்களுக்கு உடனே செய்து கொடுக்கும் என நம்புகிறார்கள். ஆனால் அரசு சார்பில் எந்த அதிகாரிகளும் இதுவரை வரவில்லை என்பதை பேச்சுக்கு நூறுமுறை கூறுகிறார்கள். 

நம் பார்த்த காட்சிகள் அனைத்தும் மனதை உருக்கும் வகையில் இருந்தன. அங்குள்ள வீடுகளின் நிலைமையை வார்த்தையால் கூற முடியாது. படங்களில் பார்க்கும் போது பலருக்கும் அது எளிதாக புரியும். நாம் அங்கே சிதைந்து கிடக்கும் ஒவ்வொரு வீட்டையும் புகைப்படம் எடுத்தோம். பல பள்ளிப்பிள்ளைகள் ஒழுங்காக பள்ளிக்கூடம் போக முடியாமல் உட்கார்ந்திருப்பதை பார்த்தோம். அவர்களையும் படம் எடுத்தோம்.

கையில் குழந்தையுடன் வீட்டை இழந்து நிற்கும் தந்தை.

வீடுகளை இழந்து என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தைகளுடன் அமர்ந்திருக்கும் தாய்மார்கள். 

கண் எதிரே வீடு அடித்து செல்லப்பட்டதைக் கண்டு மனமுடைந்து, தனது பேத்தியுடன் அமர்ந்திருக்கும் மூதாட்டி. அவரிடம் கேட்டபோது, “இன்னைகோ, நாளைக்கோ, இதான்பா எங்க வாழ்க்கை. நான் எத்தன நாளைக்கு இருப்பேன்னு நினைக்குறத விட, என் பேத்தி எத்தன நாள் இருப்பாளோ என்ற வருத்தம்தான்பா எனக்கு” என்று கண்கள் கலங்கியபடி கூறினார்.

அதைவிட வீட்டை இழந்தது கூட தெரியாமல், நம்மிடம் பூங்கொத்தைக் கொடுக்க முயன்று புன்னகை செய்த அவர் பேத்தியின் சிரிப்பு சோகத்தின் உச்சம். 

கதவு இல்லாத வீடு, வீடே இல்லாத கதவு, சுவர்கள் மட்டும் இருக்கும் வீடு என அந்தப் பகுதியே சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒரு தீவு போல் காட்சியளித்தது. இவர்களின் நிலை மாற வேண்டுமென்றால், அவர்கள் கேட்பது போல அடுக்குமாடி குடியிருப்பை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். அந்தக் கோரிக்கை உடனே நிறைவேறுமா என்பதுதான் முதல் கேள்வி. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com