சென்னை சர்வதேச திரைப்படவிழா : முதல்நாளில் கவனம் ஈர்த்த இந்தோனேசியா, ஆப்கன் திரைப்படங்கள்

சென்னை சர்வதேச திரைப்படவிழா : முதல்நாளில் கவனம் ஈர்த்த இந்தோனேசியா, ஆப்கன் திரைப்படங்கள்
சென்னை சர்வதேச திரைப்படவிழா : முதல்நாளில் கவனம் ஈர்த்த இந்தோனேசியா, ஆப்கன் திரைப்படங்கள்

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சென்னை சர்வதேச திரைப்படவிழா கொண்டாடப்படுகிறது. இந்தோ சினி அப்ரிஸியேஸன்ஸ் சார்பில் நடத்தப்படும் இந்த திரைப்பட விழாவில் ஆண்டுதோறும் பல்வேறு உலக நாடுகளில் இருந்து திரைப்படங்கள் சேகரிக்கப்பட்டு திரையிடப்படுகின்றன.

இத்திரைப்பட விழாவானது சினிமா ஆர்வலர்களுக்கும், திரைப்படக் கல்லூரி மாணவர்கள் மற்றும் திரைத்துறை சார்ந்து பயணிக்கிறவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அவ்வகையில் இந்த ஆண்டும் சென்னை சர்வதேச திரைப்படவிழா துவங்கியுள்ளது. நேற்றய தினமான டிசம்பர் 30 முதல் வருகிற ஜனவரி 6ஆம் தேதி வரை சென்னையில் சத்யம் மற்றும் அன்னா அரங்குகளில் இத்திரையிடல்கள் நடக்கின்றன. காலை 9 மணிக்குத் துவங்கி இரவு வரை தொடர்ந்து திரைப்படங்கள் இந்த அரங்குகளில் காணக் கிடைக்கிறது.

முதல் நாளான நேற்று இந்தோனேசிய சினிமாவான yuni. இஸ்ரேல் திரைப்படமான All eyes off me. ருமானியத் திரைப்படமான 5 minutes too late. துருக்கி மொழிப்படமான flash drive. ஆப்கன் திரைப்படமான when the pomegranates howl உள்ளிட்ட பல திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அதில் yuni மற்றும் when the pomegranates howl ஆகிய திரைப்படங்கள் தனித்த கவனம் பெற்றன.

yuni திரைப்படத்தை இந்தோனேசிய பெண் இயக்குநர் கமிலா அந்தினி இயக்கியிருக்கிறார். The mirror never lies திரைப்படம் இவருக்கு தனித்த அடையாளத்தை பெற்றுத் தந்தது. yuni ஒரு பள்ளிக் கூட மாணவியை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. பள்ளிப்படிப்பை முடிக்கும் முன்னரே அவருக்கு திருமணம் ஏற்பாடாகிறது. ஒரு பெண் இரண்டு ஆண்களை நிராகரித்தால் அவளுக்கு திருமணம் நடக்காது என்பது அவ்வூராரின் நம்பிக்கை. yuni அப்படி இரண்டு ஆண்களை நிராகரிக்கிறாள். வயதான முதியவர்களை கொண்டுவந்து இவர்தான் மாப்பிள்ளை எனச் சொல்பவர்களுக்கு முன் தனக்கான வாழ்க்கைத் துணையை தானே தேர்வு செய்து நகர்கிறாள். எளிமையான கதைதான் ஆனால் அது சொல்லப்பட்ட விதத்தில் தனித்துவம் பெறுகிறது.

அதே போல ஆப்கன் குழந்தைகளின் எதிர்கால கனவுகளை அங்கு நிலவும் யுத்த சூழல் சூரையாடியது குறித்த ஒரு சினிமாதான் when the pomegranates howl இயக்குநர் Granaz Moussavi இயக்கி இருக்கும் இந்த சினிமா ஆப்கனில் நடந்த உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. மிக இயல்பான காட்சிகள் நம்மை ஒரு யுத்தகளத்திற்குள் அழைத்துச் செல்கின்றன.

இப்படியாக நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்கள் இந்த 19வது சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடலுக்காக அணிவகுத்து நிற்கின்றன. மாற்று சினிமா ஆர்வலர்கள் தவறவிடக்கூடாத ஒன்று இந்த சென்னை சர்வதேச திரைப்படவிழா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com