பூவையர் மறந்த டிசம்பர் பூக்கள்

பூவையர் மறந்த டிசம்பர் பூக்கள்
பூவையர் மறந்த டிசம்பர் பூக்கள்

சென்னை போன்ற மாநகரங்களில் பூக்கள் வைத்துக் கொள்ளும் பெண்களை நாம் விரல் விட்டு எண்ணிவிடலாம். ஜீன்ஸ், ஜெகிங்சில் வலம் வர கூடிய பெண்கள் இத்தகைய உடைகளுக்கு பூ வைத்து கொள்வது பொருத்தமில்லை என்பதால் பூ வைத்து கொள்வதை அரிதாக்கி கொண்டுள்ளனர். ஆனால் இதே பெண்கள் பண்டிகை நேரங்களில் பூ வைத்துக் கொள்வதையும் நாம் மறுக்க முடியாது. 

பூ வைத்து கொண்டு போனால்.. "ஏதாவது விசேஷமா"? என்று கேட்குமளவிற்கு பூக்களும் அலங்கார லிஸ்டில் சேர்ந்து விட்டது.

பள்ளிகள், கல்லூரிகளிலும் கூட பூக்கள் சூடி கொள்ளும் வழக்கம் மாணவிகளிடையே குறைந்து விட்டதை பார்க்கலாம். இதற்கு அந்தப் பள்ளிகளின் விதிமுறைகள் போன்ற  பல காரணங்கள் இருக்கலாம்.  

டிசம்பர் பூக்கள்:

ஊதா நிறத்திலும்  ரோஸ் நிறத்திலும் காணப்படும் டிசம்பர் பூக்களை காலையில் எழுந்தவுடன் செடியில் இருந்து  பறித்து கட்டுவதையே சில பெண்கள் வாடிக்கையாக வைத்திருப்பார்கள். 

தலை நிறைய எண்ணெய் வைத்து இரண்டு பக்கமும் ஜடை போட்டு  அதன்  குறுக்காக டிசம்பர் பூக்களை வைத்து கொள்ளும் சிறுமிகள் நகர்புறங்களில் கூட ஏராளமாக இருந்தார்கள். சில சமயங்களில் வெள்ளை நிற டிசம்பர்களும் ஜடைகளை அலங்கரிக்கும்.

அவ்வளவு ஏன் சிலர் வீட்டு திண்ணைகளில் டிசம்பர் பூக்களின் விற்பனை கூட நடக்கும் அதன் மீது பெண்களுக்கு அப்போதிருந்த மோகத்தை தெரிந்து கொள்ளலாம்.

ஒரு வேளை டிசம்பர் பூ இல்லையென்றால்… கனகாம்பரம். ஆரஞ்ச் நிறத்தில் காணப்படும் இந்தப் பூவை பெரும்பாலோனோர் பார்த்திருப்பார்கள்.

சில பெண்களுக்கு மிகவும் பிடித்தமான பூக்களில் ஒன்றாக இருந்தது கனகாம்பரம்.
கனகாம்பரத்தின் நிறமும் அதன் மெல்லிய தண்டும் பூவை வாங்கி கட்ட வேண்டும் என தோன்றும். 

பூக்கடைகளில் கூட கனகாம்பரம் அப்போது பெருமளவு விற்பனை செய்யப்பட்டன. மல்லிகையும் கனகாம்பரமும் கலந்து கட்டும் பழக்கம் அப்போது அதிகமாக இருந்தது. பத்து பூ மல்லிகை என்றால் நான்கு பூ கனகாம்பரம் வைத்து கட்டுவார்கள். வெள்ளை நிறமும் ஆரஞ்ச் நிறமும் கலந்த பூ சரங்களை ஜடையில் வைக்கும் போது கூடுதல் அழகே கிடைக்கும் கூந்தலுக்கு.

அது போல வீடுகளுக்கு பூ வாங்கி செல்லும் போது மல்லிகை ஒரு முழம் வாங்கினால் கனகாம்பரம் ஒரு முழம் என கணக்காய் வாங்கி கொண்டு போவார்கள் .ஏனெனில் மல்லிகை பூவின் ஜோடி பூவாகவே இருந்தது கனகாம்பரம்.

தஞ்சாவூர் கதம்பத்திற்கு ஒரு காலத்தில் தமிழகம் முழுவதும் மவுசு இருந்தது. 

பல வண்ணங்களில் இருக்கும் பூக்களை கட்டி விற்பனை செய்வார்கள்.  முல்லை, மல்லி ,கனகாம்பரம், செவ்வந்தி, மரிக்கொழுந்து, டிசம்பர் என 
பெண்கள் விரும்ப கூடிய அத்தனை பூக்களும் கலந்து கட்டப்படும் கதம்பத்தை பலரும் ஆர்வமுடன் வாங்கி செல்வதுண்டு.


 
கிராமங்களில் கதம்பத்தால் தன் ஜடையை அலங்காரம் செய்து கொள்ளும் பெண்களை அதிகமாக பார்க்கலாம். கதம்பத்தில் உள்ள பூக்களின் கலவையால் வரும் வாசமும் அதன் வண்ணங்களும் தான் அதன் சிறப்பு, அதனாலயே பிரபலமானது கதம்பம். 

தாழம் பூ:

வாசனைக்கு பெயர் பெற்றது. மரிக்கொழுந்தும் அப்படிதான். வாசனைகளுக்காவே தாழம் பூவை நறுக்கி பின்னலோடு பின்னி கொள்வதும், மரிக்கொழுந்தில் இரண்டை எடுத்து தலையின் பின்னல் இடுக்கில் செருகி கொள்வதும் பெண்களுக்கு மிகவும் பிடித்த விஷயமாக இருந்தது. 

இப்படி வாசனைகளுக்காக, அழகுக்காக, சம்பிரதாயத்துக்காக என பூக்களை சூடி கொண்ட நிலை மாறி தற்போது விசேஷ நாட்களில் மட்டுமே பெரும்பாலான பெண்கள் பூக்களை நாடுகின்றனர். வெள்ளிகிழமையானாலும் வெளியில் போனாலும் பூ வைத்து கொண்டு போக வேண்டும் என்ற மனநிலையில் இருந்து பெண்கள் பலரும்  மாறி விட்டார்கள். 

அதற்காக ஒட்டு மொத்தமாக பெண்கள் பூக்களை புறக்கணிக்கிறார்கள் என்று சொல்ல முடியாது ஆனால் அந்த நிலை வந்தாலும் கூட சாமி சிலைகளும் பூஜை அறைகளும் ஒரு போதும் பூக்களை புறக்கணித்து விடாது.

(ஞாபகம் வருதே தொடரும்)
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com