மீண்டு(ம்) வருமா அடையாறு ‘புரோக்கன் பிரிட்ஜ்’..?

மீண்டு(ம்) வருமா அடையாறு ‘புரோக்கன் பிரிட்ஜ்’..?
மீண்டு(ம்) வருமா அடையாறு ‘புரோக்கன் பிரிட்ஜ்’..?

தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருக்கின்றன. சென்ட்ரல் ரயில் நிலையம், மெரினா கடற்கரை, ரிப்பன் பில்டிங், எல்.ஐ.சி பில்டிங் என ஏராளமான குறிப்பிடத்தகுந்த இடங்கள் உள்ளன. ஆனால் சென்னையில் வசிக்கும் பலருக்கும் தெரியாத இடமாகவும், அதே நேரத்தில் பிரபலமான இடமாகவும் இருப்பது அடையாறு ‘புரோக்கன் பிரிட்ஜ்’ எனப்படும் உடைந்த பாலம். வாலி படத்தில் சிம்ரனிடம் அஜித் காதலைச் சொல்லும் சீன் உட்பட பல்வேறு சினிமாக் காட்சிகளில் இந்த புரோக்கன் பிரிட்ஜை பார்த்திருப்பீர்கள்.

சென்னை சாந்தோம் கடற்கரைக்கும், பெசன்ட் நகர் கடற்கரைக்கும் இடையே அடையாறு கலக்கும் பகுதி உள்ளது. இந்தப் பகுதியை மக்கள் கடக்க வேண்டும் என்பதற்காக 1967ஆம் ஆண்டு ஒரு பாலம் கட்டப்பட்டது. 10 ஆண்டுகள் மக்கள் பயன்பாட்டில் இந்தப் பாலம் இருந்தது. இப்பாலத்தின் மீது காலை மற்றும் மாலை நேரத்தில் நின்றால், அது மனதிற்குச் சுகமான அனுபவத்தைக் கொடுக்கும் என்பது மறுப்பதற்கில்லை. இதனால் அந்த காலகட்டத்தில் மக்கள் அதிகம் வந்து செல்லும் ஒரு பகுதியாக இந்தப் பாலம் திகழ்ந்தது. எம்.ஜி.ஆர் நடித்த ‘ரிக்‌ஷாக்காரன்’ படத்தில் வரும் ‘கடலோரம் வாங்கிய காற்று குளிராக இருந்தது நேற்று’ பாடலில் இந்த பாலத்தின் அழகை அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

குடும்பம் நடத்த வருமாறு அழைத்த கணவர்.. மறுத்த மனைவிக்கு சரமாரியாக கத்திக்குத்து

1977ஆம் ஆண்டு அடித்த பெரும் புயலில் இந்தப் பாலம் உடைந்து போனது. இந்த பாலத்தை மீண்டும் சீரமைக்கவோ அல்லது கட்டப்படவோ இல்லை. அதன்பின்னர் சுற்றுத்தலமாக மாறிய இந்தப்பாலம் காலப்போக்கில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் உருவெடுத்தது. கொலை, வழிப்பறி, பெண்கள் மீதான அத்துமீறல்கள் ஆகியவையும் இந்த இடங்களில் அரங்கேறின. இதனால் பொழுது சாய்ந்த பின்னர் புரோக்கன் பிரிட்ஜுக்கு செல்வது ஆபத்து என காவல்துறையே எச்சரித்தது. இரவு நேரத்தில் போதை ஆசாமிகளின் அட்டூழியங்களும் இங்கே அதிகரித்தன. அதன்பின்னர் காவல்துறை அங்கே கண்டிப்பு காட்டி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தது.

தற்போது அந்த இடம் சினிமா படங்கள், குறும்படங்கள், புகைப்பட ஆல்பங்கள் எடுக்கும் இடமாகவும், சுற்றுத்தலமாகவும் மாறியிருக்கிறது. இருப்பினும் மாலை நேரத்திற்குப் பின்னர் அங்கே செல்வது பாதுகாப்பற்றதாகவே கருதப்படுகின்றது. இந்தப் பாலத்தை தற்போது மீண்டும் கட்டினால் கண்டிப்பாகச் சென்னையின் பிரபல சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக மாறும் எனப் பலரும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அதற்குச் சாத்தியம் உள்ளதா ? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் மீன்கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சியிடம் கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் லூப் சாலை - பெசன்ட் நகர் இடையிலான உடைந்த பாலத்தை மீண்டும் அமைக்கச் சாத்தியம் இருக்கிறதா ? என்றும், அதன் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து மூன்று வாரங்களில் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டது.

இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆய்வு செய்து, பாலத்தைக் கட்ட வாய்ப்பு உள்ளது என அறிக்கை தாக்கல் செய்தால் மீண்டும் புரோக்கன் பிரிட்ஜ் மக்களின் கனவுப் பலமாக மாற வாய்ப்பிருக்கிறது. அதேசமயம் வாய்ப்பில்லை எனும் பட்சத்தில் அது என்றும் நிறைவேறாத கனவுப் பாலமாக, அதாவது ‘புரோக்கன் பிரிட்ஜாகவே’ இருக்கும். எனவே புரோக்கன் பிரிட்ஜ் மீண்டு(ம்) வருகிறதா ? அல்லது மீளாமல் போகிறதா ? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com