முதலமைச்சர் பழனிசாமி... சந்திக்கவிருக்கும் சவால்கள்...!

முதலமைச்சர் பழனிசாமி... சந்திக்கவிருக்கும் சவால்கள்...!
முதலமைச்சர் பழனிசாமி... சந்திக்கவிருக்கும் சவால்கள்...!

அரசியல் மர்மம் நிறைந்த பல நாட்களைத் தொடர்ந்து சனிக்கிழமையன்று சட்டமன்றத்தில் நடந்த கடுமையான போட்டியில் 64 வயதான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் 13-வது முதலமைச்சராகப் பதவி ஏற்றிருக்கிறார். ஜெயலலிதாவின் அமைச்சரவையில் உள்ள அடையாளம் தெரியாத பல அமைச்சர்களில் ஒருவர்தான் அவர். அவரைப் பற்றி யாருக்கும் தமிழகத்தில் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அமைச்சரவையை அடிக்கடி மாற்றுவதை ஜெயலலிதா தனது வழக்கமாகவே வைத்திருந்தார். ஆனாலும் அசையாத ஒரு விசுவாசத்தைக் காட்டி ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இரண்டு முறை தொடர்ச்சியாக இடம் பிடித்தவர் பழனிசாமி. ஓ.பன்னீர் செல்வம் போலில்லாமல் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சசிகலாவிடமும் தனது விசுவாசத்தை தொடர்ந்தவர் அவர்.

அதற்கான வெகுமதியும் அவருக்குக் கிடைத்தது. அதுவும் நினைத்த நேரத்தில் திரும்ப வாங்கிக் கொள்ள முடியாத வெகுமதி. உண்மையில் சசிகலா தனது குடும்பத்தில் ஒருவரை முதலமைச்சராக்கத்தான் விரும்பியிருப்பார். ஆனால் அதை சசிகலா தவிர்த்து விட்டார். தனக்கு அது பின்னடைவாகும் என்ற அச்சத்தில் பழனிசாமியைத் தேர்வு செய்தார்.

ஏற்கனவே கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பைத் தொடர்ந்து முதலமைச்சராவதற்கு வசதியாக சட்டமன்றக் கட்சித் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டதற்கே கடும் எதிர்ப்பு கிளம்பியது. தனது முடிவில் இருந்து பின்வாங்கியதற்கு அதுவே பிரதான காரணம் என்பதற்கு வெளிப்படையான ஆதாரம் இல்லை எனினும், பொது மக்கள் மத்தியில் சசிகலாவுக்கு கடுமையான எதிர்ப்பு இருப்பது தெளிவு. இரண்டாவதாக மேற்கு தமிழகத்திலிருந்து வந்த கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. தற்போதைய சட்டமன்றத்திற்கு கணிசமான எண்ணிக்கையில் அதிமுக எம்எல்ஏக்களை அனுப்பியிருப்பது மேற்கு தமிழகம்தான். ஏற்கனவே தேவர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டிருக்கும் அமைச்சரவை என்ற பேச்சைச் சரிக்கட்டுவதற்கான முயற்சியாகவும் இது இருக்கலாம்.

ஆனாலும் முதலமைச்சரின் பயணம் சுலபமாகவோ சுதந்திரமாகவோ இருக்காது. சசிகலா தனது அக்காள் மகன் டிடிவி தினகரனை துணைப் பொதுச் செயலாளராக நியமித்திருக்கிறார். இதன்மூலம் தினகரன் கட்சியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு, முதலமைச்சர் மீதும் ஒரு கண் வைத்திருப்பார். அவர்தான் முதலமைச்சரையே பின்னால் இருந்து இயக்குவார் என்றும் பரவலாக நம்பப்படுகிறது. 2011-ல் அரசு நிர்வாகத்தில் தலையிடுகிறார் என்ற குற்றச்சாட்டில்தான் ஜெயலலிதா தினகரனைக் கட்சியை விட்டு நீக்கினார்.

ஜெயலலிதாவின் மரணம் வரையில் தினகரன் அதிமுகவிற்கு வெளியேதான் இருந்தார். எனினும் சசிகலாவுக்கு தண்டனை உறுதியான சில மணி நேரங்களில் அவசர கதியில் அவர் கட்சியில் சேர்க்கப்பட்டார். அடுத்த ஒருசில நிமிடங்களில் அவர்தான் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் என சசிகலா அறிவிக்கிறார். அத்தனையும் அம்மாவின் பெயராலும் கட்சியை அதன் எதிரிகளிடமிருந்து காப்பாற்றப் போகிறோம் என்ற பெயரிலும் நடத்தப்பட்டன.

கேலிக்கூத்து இதோடு முடியவில்லை. மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், ஒரு குடும்ப ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாகக் கூறிவிட்டு சசிகலா அணியை விட்டு வெளியேறி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் ஆதரவைக் கோரினார். ஜெயலலிதாவின் சமாதியில் தீபாவை சந்தித்த அவர், தன்னோடு இணைந்து பணியாற்றுமாறு அழைப்பு விடுத்தார். சசிகலா குடும்ப ஆட்சி என்று சொன்ன பன்னீர் செல்வத்திற்கு ஜெயலலிதா குடும்ப ஆட்சியை ஆதரிப்பதிலோ எந்த ஒரு அரசியல் பின்புலமும் இல்லாத தீபாவை ஆதரிப்பதிலோ உறுத்தல் எதுவும் இல்லை.

இந்த சந்தர்ப்பத்தை திமுக தனக்கு சாதகமாக்கும் என்று பார்த்தால் அதுவும் இல்லாமல் போயிற்று. ஆரம்பத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து திமுக அமைதியான இணக்கமான அணுகுமுறையைத்தான் கையாண்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு அன்று திமுக ரகசிய வாக்கெடுப்பு கோரியது. அந்த கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்த போது, வாக்கெடுப்பை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை வைத்தனர். சசிகலா அணியினர் எம்எல்ஏக்களை கூவத்தூர் கோல்டன் பே சொகுசு விடுதியில் இருந்து கைதிகளைப் போல அழைத்து வந்திருக்கின்றனர் என்று திமுக உறுப்பினர்கள் கூறினர். முதலில் எம்எல்ஏக்கள் சுதந்திரமாக அவர்களின் தொகுதிக்குச் சென்று தொகுதி மக்களிக் கருத்தைக் கேட்க அனுமதிக்க வேண்டும் எனவும் அதன்பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் எனவும் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அந்த வாதங்கள் அத்தனையும் மோசமாக மாறியது. அவர்கள் கோஷம் போட அவை அமளி துமளியாகி, கடைசியாய் கிழிந்த சட்டையோடு சபாநாயகர் இருக்கையை விட்டு எழுந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஸ்டாலின் பதிலுக்கு தனது சட்டையும்தான் கிழிந்து போனது என்று குற்றம்சாட்டினார். தனது கிழிந்த சட்டையை பத்திரிகையாளர்களிடம் காட்டியது மட்டுமல்ல. அதோடு ஆளுநர் மாளிகைக்கும் சென்று புகாரும் கொடுத்தார். அடுத்து மெரினாவில் காந்தி சிலைக்குச் சென்ற அவர் அங்கே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த.. போலீஸ் அவரைக் கைது செய்தது.

ஜெயலலிதாவின் மறைவு மற்றும் கருணாநிதியின் உடல் நிலை காரணமாக இரு பெரும் தலைவர்கள் இல்லாத வெற்றிடத்தில் தமிழக அரசியல் ஆரோக்கியமற்ற போக்கை நோக்கிச் செல்கிறது. ஆரம்பத்தில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவளிக்கிறதோ எனப் பார்க்கப்பட்டது திமுக. ஆனால் அடுத்தடுத்த நிகழ்வுகளைப் பார்க்கும் போது தமிழக அரசியல் களத்தைத் தீர்மானிப்பது தாங்கள்தானே தவிர ஓபிஎஸ் அல்ல என்ற செய்தியை திமுக சொல்ல விரும்புவது தெளிவாகவே தெரிகிறது. ஒருபுறம் அதிமுகவின் இரு அணிகளும் - ஒன்று ஓபிஎஸ் தலைமையிலானது மற்றொன்று டிடிவி தினகரன் தலைமையிலானது- மற்றொருபுறம் திமுகவும் தமிழக அரசியலைக் கைப்பற்ற போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன.

புதிய அரசு அமைந்து விட்டாலும் எல்லாம் சுமூகமாகவே நடக்கும் என சொல்வதற்கில்லை. எடப்பாடி பழனிசாமி கடும் போட்டிக்குப் பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று விட்டார். தினகரனைச் சமாளித்து விட்டார். பன்னீர் செல்வம்தான் முதலமைச்சர் என்று அவருக்கு ஆதரவளித்துக் கொண்டிருந்த பாஜகவையும் மத்திய அரசையும் கூட சமாளித்து விட்டார். ஆனால் பழனிசாமிக்கு பெரிய தலைவலியாக இருக்கப் போவது சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள்தான். தினகரன் போதாதென்று சசிகலாவின் சகோதரர் திவாகரன், சசிகலாவின் கணவர் நடராஜன் இன்னபிற அவரின் குடும்ப உறுப்பினர்கள் என அனைவரும் அரசு நிர்வாகத்தில் தலையிடுவதோடு ஆளுக்கொரு பக்கம் பழனிசாமியை இழுக்க வாய்ப்பிருக்கிறது.

தற்போதைக்கு ஜெயலலிதா விட்டுச் சென்ற அதே அமைச்சரவையை - ஓபிஎஸ் அணிக்குச் சென்ற மாஃபாய் பாண்டியராஜனுக்குப் பதில் ஒருவரை மாற்றியதைத் தவிர - அப்படியே தொடர்கிறார் பழனிசாமி. இனிமேல் ஒருசில மூத்த அமைச்சர்களுக்கு உரிய இடமளிக்கும் விதத்தில் அமைச்சரவையை அவர் மாற்றலாம். இதுவரையில் ஒரு முதலமைச்சராக அவரது நிர்வாகத் திறன் குறித்து தெரியவில்லை. வளர்ச்சி சார்ந்த தூய்மையான ஒரு நிர்வாகத்தைத் தந்தாக வேண்டிய கட்டாயத்தில் நிச்சயம் அவர் இருப்பார். ஒரு நிலையற்ற அரசியலும் ஸ்திரமற்ற அரசியல்வாதிகளும் தங்களைத் தாங்களே நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய அவசியமான ஒரு சூழ்நிலையில், பழனிசாமி தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

- எஸ்.ஸ்ரீனிவாசன்

செய்தி இயக்குனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com