மாடுகளை அப்படியே விழுங்கவா முடியும்? மத்திய அரசின் வினோத விதிமுறைகள்
இறைச்சிக்காகவும், மத நம்பிக்கையின் அடிப்படையில் பலியிடுவதற்காகவும், மாடுகளை சந்தையில் விற்பனை செய்வதற்கு தடை விதித்து மத்திய அரசு புதிய வினோத விதிமுறைகளை 1960ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மிருகவதைத் தடைச் சட்டத்தின் 38வது பிரிவின் கீழ் கொண்டு வந்துள்ளது. மிருகவதைத் தடைச் சட்டம் என்பது மாடுகளுக்கு மட்டுமானது அல்ல, அச்சட்டம் அனைத்து விலங்குகளுக்கும் பொருந்தும்.
தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிகள், "கேட்டில்" (Cattle) எனப்படும் கால்நடைகளுக்காக மட்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விதிகள் மாட்டு இறைச்சியைத் தடை செய்யக் கொண்டு வரப்படவில்லை என்றும், மாடுகளின் விற்பனையை ஒழுங்குபடுத்த மட்டுமே இந்த விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.
மாட்டு இறைச்சிக்குத் தடை இல்லை. ஆனால் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்குத்தான் தடை என்று சொல்வது ஏமாற்று வேலை. மாடுகளை வெட்டத் தடை என்றால் மாடுகளை அப்படியே விழுங்கியா சாப்பிட முடியும்?
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிகள், பலியிடுவதற்கு மாடுகளை விற்பனை செய்யக் கூடாது என்றும் சொல்கிறது. பலியிடப்படும் எல்லா விலங்குகளும் இறைச்சியாகி உணவாகத்தான் உட்கொள்ளப்படுகின்றன. அசாமின் தலைநகர் கவுகாத்தியில் உள்ள காமாக்கியா கோவிலில் எருமை மாடுகளைத்தான் ஆயிரக்கணக்கில் பலியிடுகிறார்கள்.
மிருகவதை தடை சட்டத்தின் கீழ் விதிகளை மத்திய அரசு கொண்டு வரலாம். ஆனால், அந்த விதிகள், மிருகவதை தடை சட்டத்திற்கு விரோதமாக அமையக் கூடாது. எந்த ஒரு சட்டத்தின் கீழும் செய்யப்படும் விதிகள், அச்சட்டத்திற்கு விரோதமாக அமையக் கூடாது என்பது ஒரு அடிப்படை விதி. அப்படி அமைந்தால் அது சட்டவிரோதம். அப்படிப் பார்க்கையில் தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள விதிமுறைகள் சட்டவிரோதம்தான்.
மிருகவதை வதை தடைச் சட்டத்தின் பிரிவு 11 (1) எதுவெல்லாம் மிருக வதை என வரையறுக்கிறது. அதே சட்டத்தின் பிரிவு 11(3) எதுவெல்லாம் மிருக வதை இல்லை என்றும் சொல்கிறது. பிரிவு 11 (3) (e) விலங்குகளை உணவுக்காக கொல்வது வதை இல்லை என்று சொல்கிறது.
மிருகவதை தடை சட்டத்தின் 28வது பிரிவு, மத நம்பிக்கையின் அடிப்படையில் விலங்குகளை பலியிடுவது வதை இல்லை என்று சொல்கிறது. அதன்படி பார்த்தால் இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவது வதை அல்ல. அதற்காக விற்பனை செய்வதும் தவறு / குற்றம் அல்ல.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள விதிமுறைகள் மாநில உரிமைகளையும் பறிக்கின்றது. அதாவது, எப்படி சட்டம் ஒழுங்குப் பிரச்னை, அரசமைப்பு சட்டபடி மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டதோ, அதேபோல சந்தையும் (Market) மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. காய்கறிச் சந்தையைப் போல மாட்டுச் சந்தையும் மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டதுதான். அதில் எதை விற்கக் கூடாது எப்படி விற்கக் கூடாது என்பது பற்றி மத்திய அரசு விதிமுறைகளை வகுப்பது மாநில அரசுக்கு அரசியல் சாசனம் அளித்துள்ள அதிகாரப் பகிர்வை மீறுகிற செயல்.
இந்த அடிப்படையில்தான் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, புதுவை முதலமைச்சர் நாராயணசாமி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் போன்றவர்கள் இந்தச் சட்டத்தை எங்கள் மாநிலத்தில் அமல்படுத்த முடியாது என்று கூறியுள்ளனர்.
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், விவசாயிகள் தங்களுக்கு கஷ்டம் வரும் போது தங்களது சொத்துக்களை விற்பதைப் போலவே மாடுகளையும் விற்பார்கள். வறட்சியில் வாடும் விவசாயிகள், அவர்களின் மாடுகளை விற்றேனும் பிழைக்க முனைவர். ஆனால் தற்போது மத்திய அரசின் விதிகள்,மாட்டு சந்தைக்கு மாட்டை விற்க வரும் விவசாயி தனது அடையாளத்தைத் நிரூபிக்க வேண்டும்; மாட்டை உணவிற்காக வெட்டுவதற்கோ, பலியிடுவதற்கோ விற்கவில்லை என்று உறுதி கூற வேண்டும் என கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
வாங்குபவரும் விவசாயி என்ற அடையாளத்தை வைத்திருக்க வேண்டும். இறைச்சிக்காகவோ, பலியிடவோ வாங்கக் கூடாது. வாங்கிய பிறகு 6 மாதங்களுக்கு விற்பனை செய்யக் கூடாது என்று ஏகப்பட்ட கெடுபிடிகள். இத்தனை கெடுபிடியையும் மீறி ஒரு விவசாயி தனது கஷ்டத்திற்கு எப்படி மாட்டை விற்பனை செய்ய முடியும்? விவசாயத்திற்கு இனி பயன்படாது, இனவிருத்திக்கு இனிப் பயன்படாது என்று முடிவு செய்த மாடுகளை கடைசியாக இறைச்சிக்குத்தான் விற்பனை செய்வார்கள். அதை இந்த விதிகள் தடை செய்கின்றன.
மாடுகளின் கழுத்தில் கயிறு போட்டு கட்டி வைக்கக் கூடாதாம். நான்கு பக்கமும் சுவர் கொண்ட ஒரு அறையிலா விவசாயியால் மாடுகளை அடைத்து வைக்க முடியும். இவை எல்லாமே பசுவைப் புனிதம் என்ற இந்துத்துவாக் கருத்தை வலிமைப்படுத்துவதற்காகத்தானே தவிர வேறு அல்ல.
மாட்டு இறைச்சியை பெரும்பாலும் தலித்துகளும் இஸ்லாமியர்களும் உண்கின்றனர். அவர்களின் உணவு உரிமையை மத்திய அரசின் இந்த விதிமுறைகள் பறிக்கின்றன. மத்திய அரசின் புதிய விதிமுறைகள், நமது உணவு உரிமையைப் பறிக்கிறது.
- அரிபரந்தாமன், ஓய்வு பெற்ற நீதிபதி