ஹீரோயின்களின் தெரியாத கண்ணீரும் அறியாத சோகமும்!
அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. கனவு கன்னிகளாகவும் தேவதைகளாகவும் அறியப்பட்ட சில ஹீரோயின்களின் அகால மரணங்களில் இன்னும் விலகாமல் இருக்கின்றன, அவிழாத மர்மங்கள்! அதில் ஒன்றாகி இருக்கிறது ஸ்ரீதேவியின் மரணமும்.
முதலில் மாரடைப்பு என்றும் பிறகு குளியலறை தொட்டியில் மயங்கி விழுந்ததால் இறந்தார் என்றும் குழப்பத் தகவல்கள். ’ரசிகர்களை மகிழ்விக்கிற நடிகைகளின் விழிகளுக்குப் பின்னே, மறைந்தே இருக்கிறது தெரியாத கண்ணீரும், அறியாத சோகமும். அதை விவரிக்க முடியாது’ என்கிறார்கள் சாலிக்கிராமத்தினர்!
ஸ்ரீதேவியை போல இன்னும் சில நடிகைகளின் மர்ம மரணம் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
அவர்கள் பற்றிய லிஸ்ட்:
விஜி:
கங்கை அமரனின் ’கோழி கூவுது’ படத்தில் அறிமுகமானவர். விஜயகாந்த் உள்ளிட்ட பலருடன் நடித்து பிரபலமான விஜி, 2000-மாவது ஆண்டு தற்கொலை செய்துகொண்டார்.
மோனல்:
’பத்ரி’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்தவர். சிம்ரனின் தங்கையான இவரது வாழ்க்கையும் தற்கொலையிலேயே முடிந்தது. 2002ம் ஆண்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டார் மோனல். காதல் தோல்வி காரணம் என்று கூறப்பட்டது.
சில்க் ஸ்மிதா:
கவர்ச்சி குயின். தமிழ், தெலுங்கு, மலையாளம் என சில்க்-கிற்கு ஏராளமான ரசிகர்கள். அவரது அந்த உதட்டுச் சுழிப்பில் உயிர் விட தயாரானவர்கள் அதிகம். 1996-ல் திடீரென்று ஒரு நாள் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு காரணங்களாக ஏகப்பட்ட கதைகள் சொல்லப்பட்டு வருகின்றன. அவரது வாழ்க்கை வரலாறு டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் இந்தியில் வெளியானது. வித்யா பாலன் நடித்திருந்தார்.
’பசி’ ஷோபா:
பேபி மகாலட்சுமி என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷோபா, ’பசி’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 17 வயதில் தேசிய விருதை வாங்கியவர். சிறுவயதிலேயே ஏராளமான ரசிகர்களை கொண்டிருந்த ஷோபா, இயக்குனர் பாலு மகேந்திராவை திருமணம் செய்துகொண்டார். திடீரென்று ஒரு நாள் தற்கொலை செய்துகொண்டார்.
படாபட் ஜெயலட்சுமி:
’அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் ’அடி என்னடி உலகம் அதில் எத்தனை கலகம்’ என்று பாடி ஆடுபவர். அன்னக்கிளி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபதுவரை என பல படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆரின் உறவினர் ஒருவரை திருமணம் செய்துகொண்ட இவர் ஒரு நாள் திடீரென்று தற்கொலை செய்துகொண்டார்.
குணால்:
காதலர் தினம், பார்வை ஒன்றே போதுமே, பேசாதே கண்ணும் பேசுமே உட்பட சில படங்களில் ஹீரோவாக நடித்தவர். 2008-ம் ஆண்டு மும்பையிலுள்ள வீட்டில் ஃபேனில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக குணாலின் வீட்டில் இருந்த இந்தி நடிகை லாவினா பாட்டியாவை கைது செய்து பின்னர் விடுவித்தனர். தற்கொலைக்கான காரணம் மட்டும் தெரியவே இல்லை.
திவ்ய பாரதி:
தொண்ணூறுகளில் இந்தி சினிமாவின் தேவதை. இளம் வயதிலேயே பாலிவுட் இயக்குனர் சஜித் நதியத்வாலாவை திருமணம் செய்து கொண்டவர். திடீரென்று தான் வசித்த அபார்ட்மென்டின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். நாடு முழுவதும அதிர்ச்சி. போலீஸ் விசாரணை நடத்தியது. தற்கொலை என்று கணக்கை முடித்துக்கொண்டது. அதுதான் காரணமா?
ஜியா கான்:
ராம்கோபால் வர்மாவின் ’நிசப்த்’ பட நாயகி. இருபத்தைந்து வயது இளம் ஹீரோயின். மும்பை ஜுஹூவில் உள்ள தனது வீட்டில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டார். ‘இது தற்கொலையல்ல, கொலை’ என்று புகார் சொன்னார் அவர் அம்மா, ரபியா கான். ஜியாவின் ஆண் நண்பர் சூரஜ் பஞ்சோலிதான் காரணம் என்று கூறப்பட்டது.
பர்வின் பாபி:
டைம் பத்திரிகையின் அட்டையில் இடம்பெற்ற முதல் இந்திய நடிகை. மும்பை வீட்டில் திடீரென்று ஒரு நாள் இறந்துகிடந்தார். பட்டினி கிடந்தது இறந்ததாகச் சொன்னது போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்.