உன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்!

உன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்!

உன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்!
Published on

சென்னைக்கு போனால் எப்படியும் பிழைத்துவிடலாம் என்ற பெருமையை தாங்கி நிற்கும் சென்னையின் 380தாவது பிறந்தநாள் இன்று. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கிட்டத்தட்ட தமிழகமே வசித்துக்கொண்டு இருக்கிறது. தமிழகம் என்பதையும் தாண்டி வேறு வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தினம் தினம் சென்னையை நோக்கி படையெடுத்து வருவதே 'வந்தாரை வாழவைக்கும் சென்னை' என்பதன் அடிநாதம். கல்லூரிகள், வேலைவாய்ப்புகள் என சென்னை எல்லாருக்குமாக பரந்துவிரிந்து கிடக்கிறது. 

மழை பெய்தாலும் அடை மழை, வெயில் அடித்தாலும் கொடூர வெயில், ஒரு சீசனில் தண்ணீர் பஞ்சம், ஒரு சீசனில் கடும் வெள்ளம் என பல முகங்களை காட்டும் சென்னை என்றாலும் இங்கு நாளுக்கு நாள் கூட்டம் கூடுமே தவிர குறைவதில்லை. கோயம்பேட்டின் அதிகாலையிலும், எக்மோரின் அதிகாலையிலும் தினம் தினம் ஆயிரக்கணக்கான புதிய பாதங்கள் சென்னை மண்ணில் பதிந்துக்கொண்டே இருக்கின்றன.

ஒரு தெருவின் இந்த மூலையில் கோவிலுக்கும், மறு முனையில் மசூதிக்கும் இடையே சர்ச்சுக்கும் இடம் கொடுத்திருக்கிறது சென்னை. சாதி, மதம், மொழிகளை கடந்து நிற்கும் சென்னையில் பரந்துவிரிந்த கடற்கரை, ஆங்காங்கே வணிக வளாகங்கள், சினிமா திரையரங்குகள், பூங்காங்கள் என பொழுதுபோக்குக்கும் குறை இல்லை. மாதம் சில ஆயிரங்கள் சம்பாதிப்பவர்களும் சென்னையில் வாழ்க்கையை ஓட்டலாம். பல லட்சங்கள் சம்பாதிப்பவர்களுக்கும் இங்கு இடமுண்டு. ஒரே சாலையில் கையேந்தி பவன்களும் ஸ்டார் ஹோட்டல்களும் இங்குண்டு. 

பைக் டாக்சி, ஷேர் ஆட்டோ, பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில், விமானம்,கப்பல் என மனிதர்களை சுமந்துகொண்டு பல பரிமாணங்களில் போக்குவரத்துகளை தாங்கிக் கொண்டும், சினிமா, புத்தகம், உணவு,இசை, ஆன்மீகம் என பல கலாச்சாரங்களோடும் இயங்கிக்கொண்டு இருக்கிறது நம்ம சென்னை. பெண்கள் பாதுகாப்பு, மருத்துவம், தொழில்நுட்பம் என பலவற்றிலும் மற்ற இந்திய நகரங்களைவிடவும்  ஒருபடி மேல் தான் இருக்கிறது சிங்காரச்சென்னை.

வேகம், பரபரப்பு என புதிதாக வருபவர்களை மிரட்டும் சென்னை, சில நாட்களில் அவர்களுக்குள் ஒன்றிவிடும் என்பது உணர்ந்தவர்களுக்கு தெரியும். சென்னை என்பதை வேற்று ஊராய் இங்கு யாருமே நினைப்பதில்லை. இயற்கை இடற்பாடுகளில் சென்னை சிக்கித்தவித்தால் தமிழகத்தின் ஒவ்வொரு ஊர்களும் கைகோர்த்து நிற்பதையும் நாம் கண்கூட கண்டதுண்டு. 

மழைநீர் சேகரிப்பு, சரியான வடிகால் வசதி, போக்குவரத்து சீரமைப்பு என சில முக்கிய விஷயங்களில் மக்களும் அரசும் அதிக கவனம் கொண்டால் நம் சிங்காரச் சென்னையை என்றுமே சிங்காரச்சென்னையாக வைத்துக்கொள்ள முடியும். வந்தாரை வாழவைக்கும் சென்னையை வந்தவர்களும், இருப்பவர்களும் நன்றி மறக்காமல் வாழ வைக்க வேண்டும்.

மனிதர்களையும், வரலாறுகளையும் தாங்கி நிற்கும் உணர்வுப்பூர்வமான ஊர் சென்னை.இது உன் ஊரும் இல்லை. என் ஊரும் இல்லை. இது நம்ம ஊரு.

பிறந்தநாள் வாழ்த்துகள் சென்னை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com