வந்தவர்களுக்கு எதிராக பேசுபவர்கள் வராதவர்களை ஏன் கண்டிப்பதில்லை?: குமுறும் நடிகர்கள்

வந்தவர்களுக்கு எதிராக பேசுபவர்கள் வராதவர்களை ஏன் கண்டிப்பதில்லை?: குமுறும் நடிகர்கள்

வந்தவர்களுக்கு எதிராக பேசுபவர்கள் வராதவர்களை ஏன் கண்டிப்பதில்லை?: குமுறும் நடிகர்கள்
Published on

மிக அமைதியாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அமைதி வழி அறப்போராட்டம் நடந்து முடிந்துள்ளது. தனக்கு என்று ஆயிரம் தனித்தனி அபிப்ராயங்கள் இருக்கலாம். ஆனால் அதை எல்லாம் ஒரே மேடையில் பேசி உரசலை உண்டு பண்ணாமல் மெளனமாக வந்து மெளனமாக கலைந்து செல்ல நடிகர்கள் நினைத்ததில் தவறேதும் இல்லை. ஆனால் அந்த அமைதியான கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு நடிகர் சத்யராஜ் மட்டும் கொஞ்சம் மெளனம் கலைந்தார். அவர் பேசியதற்குப் பின்னால் ஏதோ ஒரு உள்நோக்கம் தென்பட்டது. ‘குரல் கொடுக்க தைரியம் இருப்பவர்கள் தமிழர்கள் பின்னால் நில்லுங்கள். தமிழர்களின் உணர்வுகளுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும். எந்த அடக்குமுறைக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம். ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம்.” என கொந்தளித்தார்.

இந்தக் கொந்தளிப்பு யாரை நோக்கியது? எதை நோக்கியது என்பதை பலர் அறிவார்கள். அந்த மேடையில் சத்யராஜ் முன் வைத்த கோஷத்தை கேட்ட பலரும் அதை ரஜினிக்கு எதிரான கோஷமாகவே எடுத்துக் கொண்டனர். அந்தக் கருத்தை அங்கே சுற்றிச்சுழன்றுக் கொண்டிருந்தவர்கள் பிரதிபலித்ததை காதுபடக் கேட்க முடிந்தது.

சத்யராஜ் இப்போது மட்டுமில்லை; அவர் எப்போதும் ரஜினிக்கு எதிராக தன் அரசியலை முன் வைப்பதில் தெளிவாகவே இருந்துள்ளார். ரஜினியின் படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடிக்க அழைக்கப்பட்ட போதுகூட அவர் பகிரங்கமாக அதை விமர்சித்தார். சில கோடிகள் சம்பளம் தருவதாக பேச்சு அடிப்பட்டும் அதை ஏற்கவே இல்லை அவர். ‘எனக்குப் பணப்பிரச்னையே இல்லை. நான் இப்போதும் செளகர்யமாக இருக்கிறேன்’ என்று விளக்கம் கொடுத்தார். ‘மிஸ்டர் பாரத்’ படத்தில் எலியும் பூனையுமாக ரஜினியும் சத்யராஜூம் இருந்தைபோலவே பல காலமாக நிஜம் வாழ்விலும் அந்தப் போட்டியை தொடர்கிறார் சத்யராஜ். அந்தக் கோவம் ரஜினி அரசியல் கட்சி அறிவிப்புக்குப் பிறகு இன்னும் கூடியே உள்ளது. 

மேடையில் மிக ஆக்ரோஷமாக சத்யராஜ் பேசியதற்கு ரஜினிகாந்த் எந்தவித எதிர்ப்பையும் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அந்தக் கேள்வி தன்னை நோக்கியதுதான் என அவரால் புரிந்து கொள்ளாமல் இருந்திருக்க முடியாது. அதை உறுதிப்படுத்தும் வகையில் சத்யராஜ் பேசுகையில் வெளிப்பட்ட ரஜினியின் முகபாவத்தை தனித்தமிழ் அமைப்புகள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு குத்திக்காட்டி வருகின்றனர். 

ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் ஒருமித்த கருத்தோடு மேடைக்கு வந்த ரஜினியை விமர்சிக்க வேண்டிய இடம் அதுவா என பலரும் கேட்கின்றனர். ரஜினி அந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு முன்பாகவே மிகத் தெளிவாக வீட்டை விட்டுக் கிளம்பும் போதே தனது நிலைப்பாட்டை விளக்கிவிட்டு வந்து அமைதி வழி அறப்போராட்டத்தில் பங்கேற்றார். அவர் வீட்டில் கொடுத்த பேட்டியில் கூட தெளிவாகவே “மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டி வரும்” என கூறிவிட்டு “ஸ்டெர்லைட் நிர்வாகம் கொடுத்த விளக்கத்தை மதிக்கிறேன். அதற்கு நன்றி. ஆனால் அந்தப் பதில் எனக்கு திருப்தியாக இல்லை” என்றும் சொன்னார். ஆக, காற்று, நீர், ஆகாயம், நெருப்பு போன்ற பஞ்சப்பூதங்களை அசுத்தப்படுத்துவதை ஆயிரம் நன்மைகள் வந்தாலும், கோடிக் கோடியாக பணம் வந்தாலும் அதை அனுமதிக்க முடியாது என்றார். ஆக, அவர் மேலாண்மை வாரியத்தையும் ஸ்டெர்லைட்டையும் கடுமையாக எதிர்க்கிறார் என்பது உறுதி. மேலும் தமிழ்நாட்டு மக்களின் குரலாக அவர் நிற்கிறார் என்பதும் உறுதி. ஆனாலும் அவரை தமிழன் வளையத்திற்கு வைத்து விமர்சிக்கும் தேவை சிலருக்கு ஏனோ எழுகிறது.  

இந்த முறை அல்ல; கடந்த முறை 2008ல் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு எதிராக களத்தில் கர்நாடக அரசு இறங்கியபோது அதையும் மிக கடுமையாக விமர்சித்திருந்தார் ரஜினி. அன்றைய மாலை செய்திகளில் ரஜினியின் ஆக்ரோஷமான பேச்சு சூடாக வெளியானது. அவர் ‘தண்ணீர்த் தர மாட்டேன் என்று சொன்னா உதைக்க வேண்டாம்?’ என சொன்னதை கேட்டு கர்நாடகாவில் பதட்டம் பற்றிக் கொண்டது. ஆனாலும் ரஜினி தயங்காமல் வந்து உஷ்ணமாக பேசினார். கறுப்பு தொப்பியோடு அவர் புதிய தோற்றத்தில் வந்து மேடையேறி பேசினார் என்பதைவிட கொந்தளித்தார் என்றே சொல்லலாம். 

அந்தப் பேச்சில் “நம்ம நாடு எங்க போய் கொண்டு இருக்கு? கவர்ன்மெண்ட் இருக்கா? சுப்ரீம் கோர்ட் இருக்கா? எது சொன்னா ஜனங்க கேட்குறாங்க? யார் சொன்னா கேட்குறாங்க? ஒன்றுமே தெரியமாட்டேன் என்கிறது. ஒரு நிலம் நமக்கு சொந்தம் என்று சொன்னா, அதுல வேற ஒருத்தவன் வந்து உட்கார்ந்துவிட்டால் பட்டாவை எடுத்துக் கொண்டு ரிஜிஸ்டர் ஆபீஸுக்குப் போனா அது கரெக்ட்டா இருந்தா, ‘டேய் போடா அது அவங்க இடம்’னு சொல்லி ரிஜிஸ்டாரே உதைச்சுடுவார். எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால இது கர்நாடகா, இது ஒகேனக்கல் என்று தனித்தனியா பிரித்து வைத்திருக்காங்க.

அந்த ஒகேனக்கல் பகுதியில இருக்கின்ற தண்ணியை நாம எடுத்துக் கொள்கிறோம்னு சொல்லி ஒரு சட்டம் போட்டா அதை எடுக்கக் கூடாதுனு சொன்னா உதைக்க வேண்டாம்? இதுல எனக்கு என்ன வருத்தம்னா, ஒரு தேசியக் கட்சியை சார்ந்த ஒருவரே பிரச்னையை தூண்டி விடுகிறார். என்ன கேவலம் பாருங்க? இந்த வாட்டாள் நாகராஜன், அவங்க இவங்க எல்லோரையும் விட்டுடுங்க. நாம பெரிய லெவல்ல பேசுவோம். எதுக்கு? அங்க எலெக்‌ஷன் வர போகுது? இந்தத்தேசிய கட்சியை சேர்ந்த டெல்லியில இருக்குறவங்க, தமிழ்நாட்டுல இருக்குறவங்க எல்லாம் சும்மா இருக்காங்க? நாம மதிக்கிற ஒரு தலைவர் பாம்பேயில இருந்து கர்நாடக போய் ‘இந்தப் பிரச்னையை தூண்டிவிட்ட வைரஸ்சே கலைஞர்தான்’ என்கிறார். என்ன கேவலம் இது? ஜனங்க என்ன முட்டாளா? யாரா இருந்தாலும் உண்மையை பேசுங்க! சத்தியத்தை பேசுங்க! சுயநலம் இல்லாம பேசுங்க? இந்த விஷயத்தை நகம் அளவிலேயே கிள்ளிவிட வேண்டும். இல்லை என்றால் கோடாலி வந்தாலும் வெட்ட முடியாது.” என்றார்.

அப்போதும் கூட ரஜினி தனது துணிச்சலான நிலைப்பாட்டை பலரும் பாராட்டினர். சந்தர்ப்பம் எழும்போது எல்லாம் ரஜினி தன்னை தமிழனாக அடையாளப்படுத்த தவறுவதில்லை. அதே சமயம் அவர் ஒரு தேசியவாதி என்பதையும் குறிப்பிடத் தவறுவதில்லை. அப்படி இருந்தும் அவர் தமிழ் அடையாளத்தை முன் வைத்து தனிமைப்படுத்தப்படுகிறார். அதன் தொடர்ச்சியே சத்யராஜின் ஆவேசம். பல முரண்பாடுகள் இருந்தாலும் ரஜினி கூட்டத்திற்கு வந்துவிட்டார். ஆனால் அஜித் வரவே இல்லை. அவர் ஏன் வரவில்லை என்பது குறித்து எந்தக் கேள்வியும் எழவே இல்லை. அவர் வராமல் போனது குறித்து ஒருவரும் எதிர்வினை ஆற்றவும் இல்லை. 

நடிகர் சங்கம் அறிவிக்கும் பல கூட்டங்களுக்கு அவர் வருவதில்லை. அதேபோல சிம்புவும் வரவில்லை. அவர் வீட்டில் தனி ப்ரஸ் மீட் வைத்தார். அதில் “பேசாமல் மெளனமாக இருந்ததால்தான் இவ்வளவு பிரச்னையே? அங்கே போய் வாயை மூடிக்(சைகையில்) கொண்டு உட்கார எனக்கு உடன்பாடில்லை” என்றார். பிறகு பேசிப் பேசியேதான் பிரச்னையை பெரிதாகிவிட்டோம். ஆகவே ஒவ்வொரு தாய்மார்களிடமும் ஹேஷ்டேக் போட்டு தண்ணீர் கேளுங்கள். அவர்கள் கொடுப்பார்கள் என்கிறார். முதலில் அமைதி வழியில் உடன்பாடில்லை என்றவர், பிறகு பேச வேண்டும் என்னால் மெளனமாக இருக்க முடியாது என குழப்புகிறார். அவருக்கும் விஷால் அண்ட் கோவுக்கும் பிரச்னை பல காலமாக இருக்கிறது. இன்னும் அவர் சரத் அணியில் இருப்பதாகவே நினைத்து தனிமையாக இருக்கிறார். அல்லது அவரை தனிமைப்படுத்துகிறார்கள். அவரே எனக்கு அழைப்பு வரவில்லை என்று கூறுகிறார். ஒரு பொது பிரச்னையை முன் வைத்து போராடும் போது அழைப்பு ஒரு முக்கியமாக என எதிர்தரப்பு கேள்வி எழுப்புகிறது. 

சினிமாவில் நடிகர் சங்கம் என்று ஒன்றுள்ளது. ஆனால் அது ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் பல நடிகைகள் பங்கேற்கவில்லை. அதைப் பட்டியல் போட்டால் நீளும். அவர்கள் ஏன் வரவில்லை என யார் கேட்பது? கட்டுக் கோப்பான ஒரு அமைப்பாக இருந்தால் அவர்கள் அதற்கு விளக்கம் தர வேண்டும் என பலர் குறிப்பிட்டு நியாயம் கேட்கிறார்கள்.

அதே போல பெரிய நட்சத்திரமான அஜித், சிம்பு அதை புறக்கணிக்கிறார்கள். சங்கம் ஷூட்டிங் இல்லை என்கிறார்கள். ஆனால் விஜய் ஷூட்டிங் நடக்கிறது. விஜய் சேதுபதியின் ஷூட்டிங் நடக்கிறது. அறவழிப்போராட்டம் என்கிறார்கள் அதற்கு பலர் வரவே இல்லை. ஆக, இந்தச் சங்கத்தின் சட்ட திட்டம்தான் என்ன? நாட்டின் தலையாய பிரச்னையை பல நட்சத்திரங்கள் புறக்கணிக்கிறார்கள் என்றால், அதை கேள்வி எழுப்ப வேண்டியவர்கள் வேடிக்கைப் பார்ப்பது நியாயமா? வராதவர்களை கண்டிக்காமல் வந்தவர்களை மேடையில் வைத்து தமிழனா? இல்லையா? அடையாளம் பிரிப்பதுதான் முறையா? இந்தக் கேள்விகளை முன் வைத்து ஒரு மெளன வாதம் சினிமா வட்டாரத்தில் உலாவி வருகிறது. அந்த அமைதிப் புயல் விரைவில் பூகம்பமாக மாறும் என எதிர்பார்க்கலாம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com