“காவிரி செயல்திட்டம் ஒன்றும் உங்களுக்கு தண்ணீர் தரப் போவதில்லை” மத்திய அரசு

“காவிரி செயல்திட்டம் ஒன்றும் உங்களுக்கு தண்ணீர் தரப் போவதில்லை” மத்திய அரசு

“காவிரி செயல்திட்டம் ஒன்றும் உங்களுக்கு தண்ணீர் தரப் போவதில்லை” மத்திய அரசு
Published on

காவிரி வழக்கில் பல கட்ட சட்டப் போராட்டங்களை நடத்திய தமிழக அரசு ஒரு வழியாக இறுதித்தீர்ப்பை பெற்றது. ஆனால் இப்போது வரை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்நிலையில் நேற்று உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது மத்திய அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் காவிரி தீர்ப்பை அமல்படுத்துவதற்கான வரைவுத் திட்டம் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

தமிழக அரசின் வழக்கறிஞர் சேகர் நாப்தே இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு காலம் தாழ்த்துவது என்பது காவிரி விவகாரத்தில் அரசியல் செய்வதையே காட்டுகிறது என்றும் மத்திய அரசை நம்பினால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது என்றும் தெரிவித்தார். தீர்ப்பை அமல்படுத்தாததற்கு மத்திய அரசு கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என்றும் வாதிட்டார். இவற்றை விசாரித்த உச்சநீதிமன்றம் காவிரி விவகாரத்தில் வரைவுத் திட்டத்தை மே 3-ஆம் தேதி தாக்கல் செய்யுமாறு‌ மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. 3-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோதும், மத்திய அரசு வரைவு அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. வரைவுத் திட்டம் தயாராக இருப்பதாகவும் ஆனால் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறமுடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அரசியல் காரணங்களைக் காட்டி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்யாமல் தள்ளிப்போடுவதை ஏற்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்தார். அத்தோடு மட்டுமில்லாமல் தமிழகத்திற்கு 4 டிஎம்சி நீரை திறக்கவும் கர்நாடகா அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் காவிரி வரைவு அறிக்கை எந்த அளவிற்கு‌ தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசிற்கும் உத்தரவிடப்பட்டது.

இப்படி நடந்த விசாரணையில் பலரும் குறிப்பிட மறந்த ஒரு விஷயமும் நடந்திருக்கிறது. வாதங்கள் நடந்த போது தமிழக அரசு வழக்கறிஞரும் , மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரும் மாறி மாறி கடுமையான வாதங்களை பகிர்ந்து கொண்டிருந்தனர். அதன் தொடர்ச்சி...

சேகர் நாப்தே : காவிரி விவகாரத்தில் வாரியம் அமைக்காததால், தீர்ப்பாயம் மற்றும் உச்சநீதிமன்றம் ஒதுக்கிய தண்ணீரை பெற முடியவில்லை

கே.கே.வேணுகோபால் : செயல்திட்டம் ஒன்றும் உங்களுக்கு தண்ணீர் தரப் போவதில்லை 

சேகர் நாப்தே : பூனை வெளியே வந்து விட்டது; எந்த அதிகாரமும் இல்லாத ஒரு அமைப்பையே மத்திய அரசு உருவாக்க போகிறது

உச்சநீதிமன்றம் : எங்கள் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான செயல்திட்டத்தையே உங்களை உருவாக்க சொன்னோம்

இந்த வாதங்களை படிக்கும் போது சில விஷயங்களை புரிந்து கொள்ள முடிகிறது. அமையப் போகிற செயல்திட்டம் என்பது வெறுமனே எந்த வித அதிகாரமும் இல்லாத, முடிவெடுக்க முடியாத அமைப்பாக இருக்க போகிறது. காவிரி அணைகளின் கட்டுப்பாடு என்பது கார்நாடகாவிடமே இருக்கும். ஒதுக்கப்பட்ட தண்ணீரை இப்போது போல எப்போதும் தமிழகம் கேட்டுப் பெற முயற்சி செய்து கொண்டே இருக்க போகிறது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com