செரோடைப் 2 டெங்கு: இது மிகவும் ஆபத்தானதா? இதிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

செரோடைப் 2 டெங்கு: இது மிகவும் ஆபத்தானதா? இதிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?
செரோடைப் 2 டெங்கு: இது மிகவும் ஆபத்தானதா? இதிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

வருடந்தோறும் மழைக்காலம் வந்தாலே டெங்கு பாதிப்பின் எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கமாகி விட்டது. இதற்கு காரணம் ஈரப்பதம் மற்றும் மழையால் தேங்கிநிற்கும் தண்ணீரால் கொசுக்களின் உற்பத்தி அதிகரிப்பதுதான். டெங்கு என்பது கொசுக்களால் பரவக்கூடிய நோய் என்பது நாம் நன்கு அறிந்ததே. குறிப்பாக ஏடிஸ் எகிப்தி(Aedes aegypti) என்கிற பெண் கொசுக்களால் டெங்கு பாதிப்பு அதிகரிக்கிறது. இந்த ஆண்டும் டெங்கு பாதிப்பின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், செரோடைப் - 2 டெங்கு பாதிப்பு 11 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இது மற்ற டெங்கு வகைகளைக் காட்டிலும் ஆபத்தானது. மேலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.

செரோடைப் - 2 டெங்கு: பாதிப்புகள் என்னென்ன?

அதீத காய்ச்சல், தலைவலி, கண்களுக்கு பின்புறம் வலி, குமட்டல், வாந்தி, தசை வலி, மூட்டு வலி மற்றும் அரிப்பு போன்றவை டெங்குவின் அறிகுறிகள். ஃபிளவிவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த வைரஸால் டெங்கு ஏற்படுகிறது என்றும், டெங்குவுக்கு காரணமான வைரஸிற்கு நெருங்கிய தொடர்புடைய நான்கு செரோடைப்கள் உள்ளன எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. அவை டென்வி - 1, டென்வி - 2, டென்வி - 3 மற்றும் டென்வி - 4 என பெயரிடப்பட்டுள்ளன.

தற்போது இந்தியாவில் செரோடைப் - 2 (DEN-2) வகை பாதிப்பானது ஆந்திரா, குஜராத், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய 11 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு செரோடைப்-2 வானது டெங்குவின் கடுமையான வடிவமான ரத்தக்கசிவு காய்ச்சலை ஏற்படுத்தும் திறன் கொண்டது என அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் மருத்துவம் மற்றும் சுகாதாரம் இதழ் வெளியிட்டுள்ளது. டெங்கு hemorrhagic காய்ச்சலானது தீவிர ரத்தக்கசிவை ஏற்படுத்துவதுடன் ரத்த அழுத்ததைக் குறைத்து அதிர்ச்சி அல்லது மரணத்திற்கு வழிவகுக்கும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இந்த காய்ச்சலுக்கு சில அறிகுறிகள் உள்ளன. அதீத காய்ச்சல், நிணநீர் மண்டல சேதம், ரத்த ஓட்ட அமைப்பு தோல்வியடைதல், மூக்கில் அல்லது தோலின்கீழ் ரத்தக்கசிவு, உட்புற ரத்தக்கசிவு, கல்லீரல் வீக்கம் போன்றவை டென் - 2 டெங்குவின் அறிகுறிகள் எனக் கூறப்படுகிறது. மேலும், குறைந்த ரத்த அழுத்தம், குளிர், சருமம் , அமைதியின்மை மற்றும் இதயத்துடிப்பு பலவீனமடைதல் போன்றவையும் அறிகுறிகளாகக் கூறப்படுகிறது.

பாதுகாப்பாக இருப்பது எப்படி?

  • வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் கொசுவலைகளை பயன்படுத்துவது நல்லது.
  • வீட்டிற்கு அருகில் நீர் தேங்கி நிற்க விடக்கூடாது.
  • பானைகள் மற்றும் பாத்திரங்களை மூடிவைக்கவும் அல்லது கவிழ்த்துவைக்கவும்.
  • வீடு மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைப்பது அவசியம்.
  • முடிந்தவரை முழுநீளக்கை சட்டைகள் மற்றும் தளர்ந்த ஆடைகளை அணியலாம்
  • தூங்கும்போது கொசுவலைகளைப் பயன்படுத்துவது சிறந்தது.

டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டவுடன் முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் ஒரேவாரத்தில் குணமாகிவிடும். இதுவே அறிகுறிகள் மோசமாகும்போது உயிருக்கே ஆபத்து விளைவித்துவிடும். எனவே டெங்குவிற்கான குறைந்தபட்சம் 2 அறிகுறிகள் தென்படும்போதே மருத்துவரை அணுகி ரத்தப் பரிசோதனை செய்துகொள்வது தீவிர பிரச்னைகளிலிருந்து தப்பிக்க வழிவகுக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com