எப்போதும் கோபமாகவே இருக்கிறீர்களா? காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள் - வல்லுநர்கள் ஆலோசனை

எப்போதும் கோபமாகவே இருக்கிறீர்களா? காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள் - வல்லுநர்கள் ஆலோசனை
எப்போதும் கோபமாகவே இருக்கிறீர்களா? காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள் - வல்லுநர்கள் ஆலோசனை

கோபம் என்பது அனைவருக்குள்ளும் இயற்கையாகவே இருக்கும் ஓர் உணர்வுதான். ஆனால், கோபத்திற்கான காரணம் ஒரு நபரிலிருந்து மற்றொருவருக்கு வேறுபடுகிறது. இருந்தாலும் சிலருக்கு கோபத்தை கட்டுக்குள் கொண்டுவந்து சூழ்நிலைகளை அமைதியாகக் கையாளும் திறமை இருக்கிறது. அதேசமயம் சமாளிக்க முடியாத அளவுக்கு கோபத்தை தூண்டும் கடினமாக சில காரணிகளும் உள்ளன.

கோபத்தை வெளிப்படுத்தும் வடிவங்கள்

கோபம் என்பது உணர்ச்சியை உடல்மொழியின் வேகத்தில் காட்டுவது மட்டுமல்ல; கோபத்தை வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுத்துகின்றனர். வெவ்வேறு நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக கோபத்தை வெளிப்படுத்த முடியும் என்பதால், கோபத்தை வெளிப்படுத்துவதில் பல வடிவங்கள் உள்ளன. சிலர் கோபத்தை தனிமையில் வெளிப்படுத்த நினைப்பர். சிலர் தனது கோபத்தை அதிகாரத்திலும், உடல் வலிமையிலும் வெளிப்படுத்துவர். அதேபோல, சிலர் மக்களை பயமுறுத்துவதற்காக கோபத்தைக் காட்டுகின்றனர் அல்லது கோபமும் சில நேரங்களில் பயத்தின் வெளிப்பாடாகக்கூட இருக்கலாம்.

அதாவது, கோபமானது இயல்பில் உடல் ரீதியானதே தவிர, அதன் வெளிப்பாடானது வாய்மொழியாகவோ, மன ரீதியாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாகவோ இருக்கலாம் என்கின்றனர் வல்லுநர்கள். பெரும்பாலும் கோபமானது அடித்தல் மற்றும் தள்ளுதல் போன்ற உடல் ரீதியான தாக்குதலுக்கு வழிவகுக்கும். அதேசமயம் மிரட்டுதல் மற்றும் தகாத வார்த்தைகளை பேசுதல் போன்றவையும் கோபம் என்று அழைக்கப்படலாம்.

கோபம் வர பொதுவானக் காரணங்கள்

கோபம் எல்லோருக்கும் வரும். ஆனால் கோபப்படுவதற்கான காரணம் எல்லோருக்கும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. சிலருக்கு குடும்பப் பிரச்னை, பணப் பிரச்னை, வேலைப்பளு, காதல் உறவுகளால் கோபம் வரும். சிலருக்கு உடல்நலப் பிரச்னைகளால் கோபம் வரும். இதுபோல் கோபத்திற்கான காரணமும், அளவும், தாக்கமும் நபருக்கு நபர் வேறுபடும்.

மன அழுத்தம்

பொதுவாக மன அழுத்தமானது நீண்ட சோகம், அடிக்கடி மனநிலை மாற்றம், விரக்தி மற்றும் கோபம் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். சிறிய விஷயங்களுக்குக்கூட இதுபோன்ற உணர்வுகள் மேலோங்கும். இது பார்ப்பவர்களுக்கு நியாயமற்றதாகத் தோன்றலாம். ஆனால், பிரச்னையை சந்திப்பவர்களோ உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருப்பர்.

வலிப்பு நோய்

இது மிகவும் அரிதானதுதான் என்றாலும், இந்த வலிப்புநோய் உணர்ச்சிகளைப் பாதித்து கோபத்தையும் ஆக்கிரமிப்பு உணர்வுகளையும் ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

வெறித்தனத்தைத் தூண்டும் கோளாறு (Obsessive compulsive disorder)

வெறித்தனமான எண்ணங்கள் மற்றும் கட்டாய நடத்தைகளைத் தூண்டுவதால் இதை ஒரு படபடப்புக் கோளாறு என்று சொல்லலாம். பெரும்பாலும், ஒரு குறிப்பிட்ட வேலையை முடிக்க எண்ணி அல்லது ஒரு அட்டவணையைப் பின்பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டு, ஆனால் அதைச் சரியாகச் செய்ய இயலாமை போன்றவை விரக்தியைத் தூண்டி, கோபத்திற்கு வழிவகுக்கும். மேலும் இந்த நடத்தையானது ஒருவருடைய எரிச்சலின் அளவை அதிகரிக்கும்.

இருமுனைக் கோளாறு(Bipolar disorder)

இது ஒருவருடைய மனநிலை மற்றும் ஆளுமையில் தீவிர மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய பிரச்னை. இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிதீவிர கோபமும் ஆத்திரமும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

ஆல்கஹால் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு

அதிகப்படியான ஆல்கஹால் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு, அதிகப்படியான ஆத்திரத்தைத் தூண்டும் என்கின்றனர் வல்லுநர்கள். மேலும் இந்த பழக்கங்கள் மனத்தெளிவின்மைக்கு வழிவகுப்பதுடன், பகுத்தறிவின்மைக்கும் வழிவகுக்கும். அதுமட்டுமல்லாமல் இது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறனைக் குறைத்து கோபத்திற்கு வழிவகுக்கும்.

தீராத கோபத்திற்கான அறிகுறிகள்

கோபம் இயல்பான ஒரு உணர்ச்சிதான் என்றாலும், அதுவே பிரச்னையாக உருவெடுக்கும்போது அதை பிரச்னையில்லாமல் கையாள்வது மிகமிக அவசியம். அதாவது கோபம் கொண்ட ஒரு நபரிடம் சில வரையறுக்கும் பண்புகள் உள்ளன.

- எரிச்சல் மற்றும் விரக்தி ஏற்படுத்தும் வகையிலான தொடர்ச்சியான நிகழ்வுகள்

- ஒரே நேரத்தில் பல எதிர்மறை உணர்ச்சிகளால் அதிகமாக ஆட்கொள்ளப்படுதல்

- உயர் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு மற்றும் உடலில் கூச்ச உணர்வு போன்ற உடல்சார்ந்த அறிகுறிகள்

- அவ்வப்போது மோசமாக பேசுதல் மற்றும் உடல்ரீதியாக தன்னைத்தானே துன்புறுத்திக்கொள்ளுதல்

- பிறரை / ஒரு செயலைத் தூற்றுவது, எல்லா நேரங்களிலும் ஏளனமாக இருப்பது போன்றவையும் கோபத்தின் அறிகுறிகளாக இருக்கலாம் என்கின்றனர் வல்லுநர்கள்.

மனம் கொந்தளிக்கும்போது அமைதியாக இருப்பது எப்படி?

எப்போதும் கோபமாக இருப்பதுபோல் தோன்றியும், கைமீறி போய்விட்டதாக எண்ணும்நிலைக்கு சிலர் தள்ளப்படுவர். அவர்கள் மனதை அமைதிப்படுத்தும் சில யுக்திகளை கையாள்வது அவசியம்.

- எதையும் வாய்திறந்து பேசுவதற்கு முன்பு யோசிப்பது மிகவும் அவசியம். சூழ்நிலையை மோசமாக்கும் வார்த்தைகளைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு சில மூச்சுப்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். உடற்பயிற்சியும் கோபத்தைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும்.

- வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவெடுப்பதைவிட பிரச்னைக்கு சாத்தியமான தீர்வுகளை யோசிக்கவேண்டும்.

- கோபத்தைக் கட்டுப்படுத்த எந்த வழியும் தெரியவில்லை என்ற நிலை வரும்போது, கோபத்தை கையாளும் வகுப்புகளை அணுகலாம். அங்கு கோபத்தை கையாள்வது மற்றும் தவிர்ப்பது பற்றிய ஆலோசனைகளை வழங்குவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com