பாஜகவின் சமீபத்திய முதல்வர் தெரிவுகளும், சாதிய கணக்கீடுகளும் - ஓர் அரசியல் பார்வை

பாஜகவின் சமீபத்திய முதல்வர் தெரிவுகளும், சாதிய கணக்கீடுகளும் - ஓர் அரசியல் பார்வை
பாஜகவின் சமீபத்திய முதல்வர் தெரிவுகளும், சாதிய கணக்கீடுகளும் - ஓர் அரசியல் பார்வை

கடந்த சில மாதங்களில் பாஜக ஆளும் மாநிலங்களில் முதல்வர்கள் ராஜினாமா படலங்களும், புதிய முதல்வர்களின் பதவியேற்பும் நடந்து வருகிறது. இதன் பின்னணியில் பாஜகவின் சாதிய கணக்கீடுகள் தெளிவாகிறது. அடுத்தடுத்து வருகின்ற தேர்தல்களைக் கணக்கில் கொண்டு இந்த மாற்றங்களை செய்து வருகிறது பாஜக. இது தொடர்பாக சற்றே விரிவாகப் பார்ப்போம்.

சமீபத்தில் குஜராத் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் 65 வயதான விஜய் ரூபானி. அடுத்த ஆண்டு குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அவரது ராஜினாமா முடிவு அதிர்வலைகளை ஏற்படுத்த, அதற்கு மத்தியில் பூபேந்திர படேல் புதிய முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். கடந்த சில மாதங்களில் பாஜக ஆளும் மாநிலங்களில் முதல்வர் ராஜினாமா செய்வது இது மூன்றாவது முறை. கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும், உத்தராகண்ட் முதல்வர் திரத் சிங் ராவத்தும் அண்மையில் பதவி விலகியிருந்தனர். அதேநேரம் உத்தரப் பிரதேசம் முதல் குஜராத் வரை, மோடி தலைமையிலான இந்த எட்டு ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் மட்டும் புதிய முதல்வராக 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்கின்றன தரவுகள்.

இத்தனை தேர்வுகளிலும் சாதிய கணக்கீடுகளைப் பின்பற்ற தொடங்கியிருக்கிறது பாஜக. ஏனென்றால், முன்பு சில சமயங்களில் ஆதிக்க சாதி பின்புலம் இல்லாத தலைவர்களை முதல்வர்கள் ஆக்கியிருந்துகிறது பாஜக. ஆனால், சமீபத்திய முதல்வர் தேர்வுகள் அப்படியில்லை. தனது நிலைப்பாட்டை பாஜக மாற்றிக்கொண்டுள்ளதாக தெரிகிறது. உத்தராகண்ட் மற்றும் கர்நாடகாவுக்குப் பிறகு, இதற்கு மிக சமீபத்திய உதாரணம் குஜராத். விஜய் ரூபானி பதவி விலகிய உடன், துணை முதல்வர் நித்தின் படேல், விவசாய துறை அமைச்சர் ஆர்சி ஃபால்டு, மத்திய அமைச்சர்கள் புருஷோத்தம் ரூபாலா, மன்ஸுக் மண்டாவியா போன்ற பல பெயர்கள் அடுத்த முதல்வர் எனப் பேசப்பட்டன.

ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில், யாருமே பேசப்படாத பூபேந்திர படேல் வசம் முதல்வர் பதவி வந்தது. இவர் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி அவர் சார்ந்த சமூகம்தான். குஜராத் மாநிலத்தில் செல்வாக்கு மிக்கதாக கருதப்படும் பட்டிதார் சமூகத்தைச் சார்ந்தவர் இவர். இந்த சமூகம் குஜராத் மட்டுமல்ல, இந்தியாவின் 22 மாநிலங்களில் பரவலாக வசிக்கின்றனர். கால் நூற்றாண்டாக பாஜக குஜராத் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்து வரும் நிலையில், இந்த சமூகத்தைச் சேர்ந்த யாரும் இதுவரை பாஜக சார்பில் முதல்வராக பதவி வகித்ததில்லை. இது அந்த சமூக மக்கள் மத்தியில் ஒரு குறையாக சொல்லப்பட்டு வந்த நிலையில், இறுதியாக அந்த சமூகத்தின் நீண்டகால கோரிக்கைக்கு செவிசாய்க்கும் வண்ணம் பூபேந்திர படேலை முதல்வராக்கியது பாஜக.

முன்னதாக, உத்தராகண்டில் திரிவேந்திர சிங் ராவத்தை ஆர்எஸ்எஸ் தலைவர்களின் அழுத்தத்தின் காரணமாக பாஜக தலைமை முதல்வர் பதவியில் இருந்து மாற்றியது. இவர் ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால் இவருக்கு அடுத்ததாக மாநிலத்தில் பெரும்பான்மையாக இருக்கும் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்த புஷ்கர் சிங் தாமியை தேர்வு செய்தது. உத்தராகண்டில் பாஜக பல ஆண்டுகளாக வலுவான வாக்கு வங்கியாக இருந்துவருகிறது தாக்கூர் சமூகம். அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த முறை தாக்கூர் சமூகத்தை முன்னிலைப்படுத்தி இருக்கிறது. இதேநிலை தான் கர்நாடகாவிலும்.

கர்நாடகாவில் நான்கு முறை முதல்வராக, அசைக்க முடியாத தலைவராக இருந்தவர் பி.எஸ். எடியூரப்பா. இவரும் பாஜக மத்திய தலைமை அழுத்தத்தால் பதவியில் நீடிக்க முடியாமல் ராஜினாமா செய்தார். அவருக்கு அவரின் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த பசவராஜ் பொம்மையை முதல்வராக்கியது. லிங்காயத் சமூகம் கர்நாடகாவில் ஆதிக்கம் மிகுந்த சமூகம். அந்த சமூகத்தைச் சேர்ந்த பலர் கர்நாடக முதல்வராகி இருக்கின்றனர். பாஜக அவரது சமூகத்தை பற்றி நன்றாக அறிந்திருப்பதால் அவர்களுக்கு மாற்றாக வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களை முதல்வராக்க முயலவில்லை.

2014-ல் ஆட்சிக்கு வந்த பிறகு, மோடி-ஷா தலைமையிலான பாஜக, சில முதல்வர்களை சோதனை முயற்சியாக ஆதிக்க சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இல்லாமல், மற்ற சமூகங்களில் இருந்து தேர்ந்தெடுத்தது. இதற்கு உதாரணம் மகாராஷ்ட்ரா முன்னாள் முதல்வர் பட்னாவிஸ். மகாராஷ்டிராவில் மராத்தா சமூகம் ஆதிக்கம் மிகுந்ததாக இருக்கும்போது பிராமணரான பட்னாவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு காரணம் அவர் மோடியின் குட்புக்கில் இடம்பிடித்திருந்தார். இதேபோல் ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டர். ஹரியானாவில் ஜாட் மற்றும் பஞ்சாபிகள் அதிக ஆதிக்கம் செலுத்தும் நிலையில், மோடியின் நல்லவர்கள் லிஸ்ட்டில் இடம்பிடித்ததால் கட்டாரி சமூகத்தைச் சேர்ந்த மனோகர்லால் முதல்வராக்கப்பட்டார். அதேநேரத்தில் பழங்குடியினர் அல்லாத ரகுபர் தாஸ் ஜார்க்கண்டில் முதல்வர் பதவியை அலங்கரித்தார்.

இதன் விளைவு, சில காலங்களிலேயே தெரியவந்தது. மகாராஷ்டிரா தேர்தலில் அதிக தொகுதியில் நின்றும் பட்னாவிஸ் தலைமையில் பாஜகவால் தனிப்பெரும்பான்மை பெறமுடியாமல் ஆட்சியை இழந்தது. இதேதான் ஜார்கண்டிலும். ஹரியானாவில் கிட்டத்தட்ட ஆட்சி அமைக்க முடியாத நிலை. ஆனால், புதிதாக உருவாக்கப்பட்ட ஜனநாயக் ஜனதா கட்சியின் உதவியால் ஒருவழியாக ஹரியானாவில் ஆட்சி அமைத்து பாஜக முதல்வராக்கப்பட்டார் மனோகர். ஜாட் சமூகத்தின் முழு பின்புலத்தில் நடத்தப்பட்டு வரும் விவசாய போராட்டத்தை அவரால் சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார்.

ஆதிக்க சமூகங்களை பகைத்ததன் காரணமாக பின்னடைவு ஏற்பட்டது என்பதை சில மாதங்கள் முன் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அமித் ஷாவே ஒப்புக்கொண்டார். மேலும், ``நாங்கள் ஜார்க்கண்டிற்கு பழங்குடியினர் அல்லாதவர்களையும், ஹரியானாவிற்கு ஜாட் அல்லாதவர்களையும், மகாராஷ்டிராவுக்கு மராத்தியர் அல்லாதவர்களையும் தேர்ந்தெடுத்தோம். சாதி தடைகளை உடைத்து ஜனநாயகத்தை வலுப்படுத்த இதை ஒரு சோதனை முயற்சியாக செய்தோம். ஆம், இதில் சில பின்னடைவுகள் இருந்தன" என்று பேசினார்.

``இந்த சோதனை முயற்சியை தொடர்ந்து செய்ய முடியாத அழுத்தத்தில் தற்போது பாஜக இருந்து வருகிறது. ஆதிக்க சமூகத்தையோ அல்லது அதன் முக்கிய ஆதரவு வரும் சமூகத்தையோ புறக்கணிக்கக் கூடாது என்ற நிலைக்கு பாஜக வந்துள்ளது. இதனால்தான் இந்த மாற்றங்கள் மேலும் தொடரலாம்" என்கிறார்கள் பாஜகவினர். அந்த லிஸ்ட்டில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

``தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்த இவரை தேர்ந்தெடுத்தது மாநிலத்தில் ஓபிசிக்களாக அறியப்படும் மவுரியா சமூக மக்கள் மத்தியில் ஒருவித அதிருப்தியை உண்டாக்கியது. மேலும், உத்தரப் பிரதேசத்தில் துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியா மூலமாக அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். இதேபோல் கவனிக்க வேண்டிய மற்றொரு மாநிலம் மத்தியப் பிரதேசம், அங்கு மாநிலத்தின் ஒரு சக்திவாய்ந்த சமூகம் சிவராஜ் சிங் சவுஹானை மாற்றுவதற்கு வலியுறுத்தி வருகிறது" என்றுள்ளனர் பாஜகவினர்.

- மலையரசு

தகவல் உறுதுணை: The Indian Express

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com