"ஈ சாலா கப் நம்தே" - ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக வெற்றிகளை குவித்த கேப்டன்கள்!

"ஈ சாலா கப் நம்தே" - ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக வெற்றிகளை குவித்த கேப்டன்கள்!
"ஈ சாலா கப் நம்தே" - ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக வெற்றிகளை குவித்த கேப்டன்கள்!

இந்தியாவில் டி20 கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய ஐபிஎல் போட்டிகள் 14 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த 14 ஆண்டுகளில் ஏராளமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. மேலும் மறக்கவே முடியாத பல்வேறு போட்டிகளும் நடைபெற்று இருக்கிறது. இதில் சூதாட்டம், "மேட்ச் பிக்சிங்" போன்ற சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. எனவேதான் ஐபிஎல் போட்டிகள் எப்போதும் ரசிகர்களுக்கு ஒரு 'கமர்சியல்' படம் பார்ப்பது போலவே இருக்கும். இந்தியாவில் மட்டுமல்ல ஐபிஎல் வேறு எந்த நாட்டிலும் நடைபெற்றாலும் அந்த நாட்கள் கிரிக்கெட் திருவிழா போலவேதான் இருக்கும்.

இந்தியாவில் இந்தாண்டு திட்டமிட்டதுபோல பார்வையாளர்களின்றி ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்பட்டாலும் கொரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து இடையிலேயே போட்டி தொடர் நிறுத்தப்பட்டது. நீண்ட ஆலோசனைகளுக்கு பின்பு ஐபிஎல் 2021 சீசனின் எஞ்சியுள்ள ஆட்டங்கள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது. இதனையடுத்து செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரை போட்டிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும், மும்பை அணியும் போட்டிக்கு தயாராக ஏற்கெனவே அமீரகம் சென்றுவிட்டனர்.

இத்தனை ஆண்டுகால ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் 5 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறையும், சன்ரைஸர்ஸ் ஐதராபாத் அணி 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒருமுறையும் கோப்பையை வென்றுள்ளது. எனவே இந்தாண்டு ஐபிஎல் கோப்பையை எந்த அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுவரை டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை. 14 ஆண்டுகள் ஐபிஎல் வரலாற்றில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன்கள் யார் என்பதை பார்க்கலாம்.

சென்னையின் "தல" தோனி: அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் சிஎஸ்கே கேப்டன் தோனி. 2008 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை ஐபிஎல்லில் பல அணிகள் தங்களது கேப்டன்களை மாற்றிவிட்டது. ஆனால் சிஎஸ்கே அணிக்கு தோனி மட்டுமே இதுவரை நிரந்தர கேப்டனாக இருந்து வருகிறார். இதுவரை தோனி தலைமயிலான சிஎஸ்கே 115 வெற்றிகளை பெற்றுள்ளது. 2020 ஐபிஎல் தொடரில் மட்டும்தான் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெறவில்லை. ஆனால் அந்தாண்டை தவர மற்ற அனைத்து சீசன்களிலும் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்று சாதனைப்படைத்துள்ளது.

மும்பை "ஹிட்மேன்" ரோகித் சர்மா: ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி இதுவரை 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. சச்சின் டெண்டுல்கருக்கு பின்பு மும்பைக்கு கேப்டன் பொறுப்பை ஏற்ற ரோகித் சர்மா மிகச் சிறந்த கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இதுவரை ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி 72 வெற்றிகளை பதிவு செய்திருக்கிறது. மேலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் என்றால் அது சிஎஸ்கே - மும்பை அணிகள் மோதும் போட்டியாகவே பார்க்கப்படும். அந்தளவுக்கு கேப்டன்சியில் தோனிக்கு டஃப் கொடுப்பவர் ரோகித் சர்மா.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கவுதம் காம்பீர்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இருமுறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. அந்த இருமுறையும் கோப்பையை வென்றுக்கொடுத்தவர் கேப்டன் கவுதம் காம்பீர். 2012 இல் சென்னையை சொந்த மண்ணில் இறுதி ஆட்டத்தில் தோற்கடித்த பெருமை கவதம் காம்பீரையே சேறும். பின்பு 2014 இல் கவுதம் காம்பீர் கோப்பையை பெற்றுத் தந்துள்ளார். இவர் தலைமையிலான கொல்கத்தா அணி 71 வெற்றிகளை பெற்றுள்ளது. அதன் பின்பு ஐபிஎல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வெடுத்துக்கொண்ட காம்பீர், இப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 

ஆர்சிபி - விராட் கோலி: "ஈ சாலா கப் நம்தே" என ஒவ்வொரு ஆண்டும் ஆர்சிபி ரசிகர்கள் கொக்கரித்து வந்தாலும் ஆனால் கோலி தலைமையிலான அணிக்கு கோப்பைதான் இன்னும் வசமாகவில்லை. ஆனால் இந்த சீசனில் ஆர்சிபி சிறப்பான தொடக்கத்தை தொட்டிருப்பதால் கோப்பையை இம்முறை கோலி கையில் ஏந்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தோல்விகள் வழக்கமானது என்றாலும் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி 60 வெற்றிகளை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com