உனக்கென இருப்பேன்; கேன்சரை விரட்டிய காதல்!

உனக்கென இருப்பேன்; கேன்சரை விரட்டிய காதல்!
உனக்கென இருப்பேன்; கேன்சரை விரட்டிய காதல்!

கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களிடம் நம்பிக்கையும் அன்பும் அளிப்பதுதான் முதல் மருந்து!

கல்லூரியில் டிகிரி முடித்ததும் மேற்படிப்புக்காக அக்கவுண்டசி படிப்பை தொடர முடிவெடுத்தார் கேரளாவைச் சேர்ந்த சச்சின் குமார். தனது வாழ்க்கைத் துணையை அங்கு சந்திக்கப் போகிறோம் என்பது அவருக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. காதலுக்காக தான் எந்த எல்லைக்கும் செல்வேன் என்பதும் அப்போது அவருக்கு தெரிந்திருக்காது.

“பாவ்யா சேர்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே நான் வகுப்பில் சேர்ந்துவிட்டேன், ஆறு மாதங்கள் நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம். அதன்பிறகு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “உன்னை எனக்கு பிடித்திருக்கிறது” என அவளிடம் கூறினேன். ஒருவேளை அவள் ஏழ்மையான குடும்பப் பின்னனியை கொண்ட காரணத்தினால் ஆரம்பத்தில் அவள் மீது பரிவு ஏற்பட காரணமாக இருந்திருக்கலாம். எனது காதலை அவளிடம் கூறியபோது எந்த பதிலும் அவள் கூறவில்லை. ஆனால் அவளும் என் மீது காதல் கொண்டிருக்கிறாள் என்பதை நான் புரிந்து கொண்டேன்” என தன் காதல் கதையை கூற ஆரம்பிக்கிறார் 23 வயதான சச்சின்.

அடுத்த இரண்டு மாதங்கள் அவர்களின் காதல் மேலும் வலுப்பட்டது. ஆனால் எல்லோர் வாழ்க்கையிலும் நல்லது நடக்கும் போது சில தடங்களும் ஏற்படும். அப்படித்தான் பாவ்யா பெற்றோர்கள் ரூபத்தில் சச்சினும் பாவ்யாவும் பிரச்சனைகளை சந்தித்தனர். இருவரின் காதலையும் அவர்கள் கடுமையாக எதிர்த்தனர்.

“நாங்கள் இருவரும் திருமணம் செய்வதை கடுமையாக எதிர்த்தனர். அப்படியே திருமணம் செய்தால் இனி வீட்டுக்கு திரும்பி வராதே என பாவ்யாவை மிரட்டினர்” என கூறி சிரிக்கிறார் சச்சின்.

இவர்களின் காதலை சச்சினின் குடும்பமும் ஏற்கவில்லை. ஆனால் அவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இருவரின் படிப்பும் முடிந்ததும் கல்வி நிலையம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார் பாவ்யா. இந்த சமயத்தில்தான் தனக்கு அடிக்கடி முதுகு வலிப்பதாக கூற ஆரம்பித்தார் பாவ்யா.

சச்சின் கூறுகையில், “தினமும் நீண்ட தூர பேருந்து பயணத்தினாலோ அல்லது ஒரு நாள் முழுதும் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்திருந்த காரணத்தினாலோ இந்த முதுகு வலி ஏற்பட்டிருக்க கூடும் என நாங்கள் நினைத்தோம். இதற்காக இரண்டு வாரங்கள் சிகிச்சை எடுத்தும் எந்த பலனுமில்லை. அவள் வலி தாங்க முடியாமல் துடித்த போது மருத்துவரிடம் சென்றோம். ஸ்கேன் செய்து பார்த்த போது எலும்பில் சிறு கட்டி இருப்பது போல் தெரிந்தது. எதற்கும் சிறப்பு மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெறுமாறு எங்களிடம் பரிந்துரைத்தனர்”. 

இருவரின் பெற்றோர்களுக்கு தெரியாமல் நண்பர்களின் உதவியோடு மருத்துவ சோதனைக்காக கோழிக்கோடு சென்றனர். அங்குதான் பாவ்யாவை பாதித்திருப்பது எலும்பை, குறிப்பாக முதுகெலும்பை பாதிக்கும் அரிய வகை புற்றுநோய் என தெரியவந்தது.

மேலும் அவர் கூறுகையில், “இனி காலம் கடத்த வாய்ப்பேயில்லை. உடனடியாக அவளுக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். இந்த சிகிச்சைக்கு தேவையான நிதியை திரட்ட பாவ்யா குடும்பத்தால் கண்டிப்பாக முடியாது. இதனால் பணத்தை திரட்டுவதற்காக நண்பர்கள் உதவியோடும் சில கூடுதல் வேலைகளை செய்தேன்’’ என விவரிக்கிறார் சச்சின்.   

இந்த சிகிச்சையின் கதிர்வீச்சால் தனது நீண்ட, கருமையான கூந்தலை இழக்க நேரிடம் என்று தெரிந்து சிகிச்சைக்கு முன்பு மொட்டை போட்டு கொண்டார் பாவ்யா. இந்த முடிவிற்கு சச்சினும் மனப்பூர்வமாக சம்மதித்தார்.

நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு தேவைப்படும் ஆறுதலும் உறுதுணையும் அளிக்காமல் இந்த நேரத்தில் பலர் விட்டு விட்டு சென்று விடுவர். ஆனால் வாழ்க்கையில் முக்கியமான ஒன்றை உணரத் தொடங்கினார் சச்சின்.

“எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் எங்கள் வாழ்க்கையில் புற்றுநோய் நுழைந்த போது, எந்தளவிற்கு அவளை நான் விரும்புகிறேன் என தெரிந்து கொண்டேன். இன்னும் சில காலமே மீதமிருப்பதால் ஒவ்வொரு நொடியும் அவளோடு சேர்ந்திருக்க விரும்பினேன். எங்கள் பெற்றோர்கள் கடுமையாக எதிர்த்த போதிலும், முக்கியமாக பாவ்யாவின் உயிர் நிச்சியமற்ற நிலையில் இருக்கும்போது நாங்கள் திருமண நிச்சியதார்த்தம் செய்து கொண்டோம், அதுவும் ஏப்ரல் 1-ம் தேதி” என கூறி புன்னகைக்கிறார் சச்சின்.

தொடர் கீமோ சிகிச்சைக்காக அதிகளவு பணம் தேவைப்பட்டதால், வளைகுடா நாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற தன் கனவை கைவிட்டார் சச்சின். பணத் தேவைக்காக டைல்ஸ் ஒட்டும் கூலி வேலைக்குச் செல்ல தொடங்கினார். இதற்கிடையில் நண்பர்களின் உதவியோடு ஃபேஸ்புக் மூலம் பாவ்யாவின் சிகிச்சைக்கு நிதி திரட்டப்பட்டது.

ஐந்து மாதங்களில் ஆறு கீமோதெரபி சிக்கிச்சைக்குப் பிறகு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இருவரின் பெற்றோர்கள் முன்னிலையில் சச்சினும் பாவ்யாவும் திருமணம் செய்து கொண்டனர். தங்களின் திருமணத்தை சம்மதிக்க அவர்களிடம் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினதாக ஒத்துக் கொள்கிறார் சச்சின். திருமணம் முடிந்து ஆறு நாட்கள் கழித்து மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது, மகிழ்ச்சியான செய்தி அவர்களுக்கு காத்திருந்தது.

சச்சின் கூறுகையில், “முற்றிய நிலையில் உள்ளதால் பாவ்யாவின் முதுகெலும்பில் உள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடியாது என முதற்கட்ட கணிப்பில் கூறியிருந்தாலும், நாங்கள் உடனடியாக கீமோ சிகிச்சை எடுத்துக் கொண்டதால் நல்ல பலன் கிடைத்தது. அவளது முதுகெலும்பிலுள்ள கட்டியை இப்போது அகற்ற முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை அளித்துள்ளனர்.

13 முறை கீமோதெரபி சிகிச்சை முடிந்துள்ள நிலையில், இதுவரை அறுவை சிகிச்சை வெற்றிகரமாகவே நடந்துள்ளது. புற்றுநோயிலிருந்து முழுதும் வெளிவந்துவிட்டார் என மருத்துவர்கள் அறிவிப்பதற்கு முன்பு இன்னும் பல கீமோதெரபி சிகிச்சைகள் உள்ளது. அதன்பிறகு பாவ்யா வழக்கமான மருந்துகளை எடுத்துக் கொண்டாலே போதும்.

யாரும் 100% உத்தரவாதம் கொடுக்கவில்லை. ஏனென்றால், இது மீண்டும் வரக்கூடிய நோய். இது நடந்து விடக்கூடாது என நாங்கள் கடவுளிடம் வேண்டினாலும், ஐந்து வருடம் கழித்து மீண்டும் கட்டி வருவதற்கு வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். .

ஆனால் ஒன்றை சொல்கிறேன். மருந்துகளை விட அன்புக்கு குணமாக்கும் சக்தி உண்டு. ஒரு பிரச்சினையில் இருப்பவரிடம் ‘கவலைப்படாதீங்க. நிச்சயம் மீண்டு வருவீங்க’ என்று கூறுவதற்குப் பதிலாக, ‘’நான் இருக்கிறேன். உங்களுக்கு எதுவும் ஆகாது’’ என்று சொல்லிப் பாருங்கள். அவர்களுக்குள் ஒரு நம்பிக்கை பிறக்கும். அதைத்தான் நானும் பாவ்யாவுக்கு செய்தேன்.

ஒருநாள் இரவு ஒரு மணி இருக்கும். பாவ்யா மனமுடைந்து, ‘’நான் செத்துப்போயிடுவேன்னு பயமா இருக்கு சச்சின்’’ என்று கூறி புலம்பினார். அவள் கையை பற்றி ‘நான் இருக்கும்வரை உனக்கு எதுவும் ஆகாது’ என்று சொன்னேன். இது அவளுக்கு நம்பிக்கை அளித்தது. கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களிடம் நம்பிக்கையும் அன்பும் அளிப்பதுதான் முதல் மருந்து” எனக் கூறி முடிக்கிறார் சச்சின்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com