வன்னியருக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்தானதற்கு யார் காரணம்? – தமிழக அரசியலில் சூடான விவாதம்

வன்னியருக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்தானதற்கு யார் காரணம்? – தமிழக அரசியலில் சூடான விவாதம்

வன்னியருக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்தானதற்கு யார் காரணம்? – தமிழக அரசியலில் சூடான விவாதம்

வன்னியருக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என நேற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு காரணம் அதிமுகவா? திமுகவா? என்ற கேள்வி தமிழக அரசியல் அரங்கில் தற்போது புகைந்துகொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் மொத்த இடஒதுக்கீடு எவ்வளவு?

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் பல்வேறு விகிதாச்சாரங்களில் இட ஒதுக்கீட்டினை வழங்குகின்றன.  இவை பெரும்பாலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 100 சதவீத இடங்களில் 31 சதவீத இடங்கள் பொது பட்டியலில் உள்ளது, மீதமுள்ள 69 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.  

இதில்,

  • பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவீத உள் ஒதுக்கீடு போக, 26.5 சதவீத இட ஒதுக்கீடு மற்ற பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு கிடைக்கிறது.
  • மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது.
  • பட்டியலின மக்களுக்கான 19 சதவீத இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவீதம் மற்றும் பழங்குடியினருக்கு 1 சதவீத இட ஒதுக்கீடு போக 15 சதவீத இட ஒதுக்கீடு மற்ற பட்டியலின மக்களுக்கு கிடைக்கிறது.

எடப்பாடி பழனிசாமி எடுத்த உள் ஒதுக்கீடு அஸ்திரம்:

கடந்த முறை ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு முன்பாக வன்னியர் சமூகத்துக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலிருந்து 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தது. இதன்படி, தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு நடைமுறையில் உள்ள 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் , சீர் மரபினருக்கு 7 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5 சதவீதம் என மூன்று பிரிவுகளாக உள் ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் அறிவித்தது. மேலும் இது தொடர்பாக சாதிவாரியாக கணக்கெடுப்பினை நடத்த நீதிபதி குலசேகரன் தலைமையில் கமிட்டியும் அமைக்கப்படும் என அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதிமுகவின் இந்த அறிவிப்பை தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் வரவேற்றன. ஆனால் இது தேர்தல் நோக்கில் அரசியல் காரணமாக அவசர கதியில் வழங்கப்பட்ட உள் ஒதுக்கீடு என்று அப்போதே திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்தன. இந்த உள் ஒதுக்கீடு தேர்தல் ரீதியாக பெரிய பலனைக் கொடுக்கும் என நினைத்த அதிமுகவுக்கும் இது ரிவர்ஸ் ஆனதே மிச்சம். வன்னியர்களுக்கு கொடுத்த இந்த உள் ஒதுக்கீடு மற்ற சமூகத்தினரிடம் அதிருப்தியை உருவாக்கியதை அதிமுக தலைவர்கள் பலரே ஒப்புக்கொண்டனர்.

உள் ஒதுக்கீட்டை ரத்து செய்த நீதிமன்றம்:

சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்ற பிறகு, வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது. தொடர்ச்சியாக பல்வேறு கல்லூரிகளிலும் 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக 25க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இதுதொடர்பான வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

இந்த வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், ` சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும், அவ்வாறு முறையாக கணக்கெடுக்காமல் எப்படி இடஒதுக்கீட்டை வழங்க முடியும்?, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டே இந்தச் சட்டம் அவசரமாக இயற்றப்பட்டுள்ளது. இதனை இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா? சாதி அடிப்படையில் இடஒதுக்கீட்டினை வழங்க முடியுமா? இதுதொடர்பாக முறையான தரவுகள் இல்லாமல் இடஒதுக்கீட்டை வழங்க முடியுமா என்பன உள்பட ஆறு கேள்விகளை அரசிடன் எழுப்பினோம். அதற்கு அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை. எனவே, வன்னியர் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு செல்லாது' எனத் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பு அரசியல் அரங்கில் மீண்டும் விவாதங்களை உருவாக்கியது.

அருந்ததியர் உள் ஒதுக்கீடு குறித்து கேள்வியெழுப்பும் வன்னியர் அமைப்புகள்:

வன்னியர் சமூக உள் ஒதுக்கீட்டுக்கு முன்னுதாரணமாக அமைந்தது, முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அருந்ததியர் சமூகத்துக்கு வழங்கப்பட்ட உள் ஒதுக்கீடுதான். தாழ்த்தப் பட்டோரின் 18 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் 3 விழுக்காடு அருந்ததியர் மக்களுக்கு உள் இடஒதுக்கீடாக வழங்குவதாக 2009 மார்ச் மாதம் கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதே ஆண்டு மே-29ஆம் தேதி இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு அமலுக்கு வந்தது.

தற்போது வன்னியர் உள் ஒதுக்கீடு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக கேள்வியெழுப்பியுள்ள வன்னியர் அமைப்புகள், “தமிழ்நாட்டில் இதுவரை வழங்கப்பட்ட இஸ்லாமியர்கள், அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு சென்னை உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ தடை விதிக்காத நிலையில், வன்னியர்கள் உள் இடஒதுக்கீட்டுக்கு மட்டும் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வன்னியர்கள் உள் இட ஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, அதன் அடிப்படையில் பல்லாயிரம் மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். அவர்களின் நலனையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ளாமல் உயர்நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனால் அவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கும், பிற பாதிப்புகளுக்கும் ஆளாகியுள்ளனர். இத்தீர்ப்புக்கு எதிராக உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து சமூகநீதியையும் பாதுகாக்க வேண்டும்” என தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த எம்.பி ரவிக்குமார், “ உயர்நீதிமன்றத் தீர்ப்பில் ( பக்கம் 178 பத்தி 83 ) இதற்கான காரணம் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. முஸ்லீம்கள் மற்றும் அருந்ததியர்களுக்கான இடஒதுக்கீட்டைப் பொருத்தவரை, ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்பிலும் மக்கள்தொகைப் புள்ளிவிவரங்கள் கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில், அவர்களது பின் தங்கிய நிலையும், போதிய பிரதிநிதித்துவம் இல்லையென்பதும் கண்டறியப்பட்டு, முறையாகக் கமிஷன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. தன்னிச்சையாகச் செயல்படுவதற்கும், 115 சாதிகளுக்குக் கிடைத்த உரிமைகளைப் பறிப்பதற்கும் எந்த அதிகாரத்தையும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அரசுக்கு வழங்கவில்லை. மேலும் எம்.நாகராஜ் வழக்கில் மூன்று அளவுருக்களிலும் நேரடியாக அரசின் கையிலோ அல்லது ஆணையத்திடமோ தரவுகள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கைப் பொருத்தமட்டில் 1994 ஆம் ஆண்டின் சட்டம் 45 பிரிவு 7 இன் படி ஆணையத்தின் அறிக்கையின் மூலம் அந்தத் தரவுகள்  பெறப்பட வேண்டும். ஆனால் இந்த வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டத்தை 2021 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தபோது உச்சநீதிமன்றம் கூறியதோ, அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருப்பதோ எதுவும் பின்பற்றப்படவில்லை, இதுதான் நீதிமன்றத்தால் இத்தீர்ப்பு ரத்து செய்யப்பட காரணம்” என தெரிவித்திருக்கிறார்.

உள் ஒதுக்கீடு ரத்துக்கு காரணம் அதிமுகவா? திமுகவா?

வன்னியர் உள் ஒதுக்கீடு ரத்துக்கு காரணம் எடப்பாடி பழனிசாமி அவசர கோலத்தில் இந்த முடிவை எடுத்ததுதான் என்று இந்த தீர்ப்புக்கு பின்னர் திமுக, அமமுக, மக்கள் நீதி மையம், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளன. ஆனால் தமிழக அரசு இந்த வழக்கில் சரியான வாதங்களை வைக்காததே காரணம் என்று நாம் தமிழர் கட்சி, பாமக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மேலும் தமிழக அரசு உடனடியாக இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சிகளும், வன்னியர் அமைப்புகளும் கோரிக்கை வைத்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com