கட்சியிலிருந்து கழன்ற முக்கியத் தலைவர்கள்... உ.பி.-யில் தனித்து விடப்படுகிறாரா மாயாவதி?!

கட்சியிலிருந்து கழன்ற முக்கியத் தலைவர்கள்... உ.பி.-யில் தனித்து விடப்படுகிறாரா மாயாவதி?!
கட்சியிலிருந்து கழன்ற முக்கியத் தலைவர்கள்... உ.பி.-யில் தனித்து விடப்படுகிறாரா மாயாவதி?!

உத்தரப் பிரதேசத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி சந்தித்து வரும் சிக்கல்கள் அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்துமா என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

அடுத்த மார்ச் மாதம் நடக்கவிருக்கும் உத்தரப் பிரதேச தேர்தல் நாளுக்கு நாள் அதிக கவனம் பெறத் தொடங்கியுள்ளது. இதுவரை இல்லாத அளவு இந்தமுறை உத்தரப் பிரதேச தேர்தல் களம் நான்குமுனைப் போட்டியை எதிர்கொள்ளவிருக்கிறது. பா.ஜ.க., சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் என நான்கு முக்கிய கட்சிகள் தனித்து போட்டியிடப்போவதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டன. இதில் சமாஜ்வாடி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது.

ஏற்கெனவே, ராஷ்ட்ரிய லோக் தளம் போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள சமாஜ்வாடிக்கு அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளன. பாஜகவும் சில சிறிய கட்சிகளுடன் கூட்டணி அறிவித்துள்ள அதேநேரம், பகுஜன் சமாஜ் நிலைதான் இப்போது மாநிலத்தில் பேச்சாக உள்ளது. நேற்று முன்தினம் பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததுதான் இந்த பேச்சுக்கான காரணம்.

பகுஜன் சமாஜ் கட்சியைப் பொறுத்தவரை, மாயாவதிக்குப் பிறகு முக்கியத் தலைவர்களாக அறியப்படுபவர்கள் அவரின் உறவினர்களான சதீஷ் சந்திர மிஸ்ரா மற்றும் ஆகாஷ் ஆனந்த் ஆகியோர்தான். அதன்பின் இரண்டாம் கட்ட தலைவர்களாக இருப்பவர்கள் கங்கா ராம், ஷிவ் புரான் சிங் செளகான், ராஜ்வரதன் சிங் போன்றோர். இந்த மூவரில் மாயாவதிக்கு மிக நெருக்கமான நபர் கங்கா ராம். மாயாவதியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்து கட்சியில் இணைந்தவர். இவர்கள் மூவரும்தான் நேற்று முன்தினம் உத்தரப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் அஜய் குமார் லல்லுவின் முன்னிலையில் காங்கிரஸில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

இதற்கு சில தினங்களுக்கு முன்புதான் தர்மேந்திர பாண்டே என்ற பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் பாஜகவில் இணைந்தார். அதற்கு முன் மொத்தமாக சில பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்துக்கொண்டனர். இதுபோக முன்னாள் பகுஜன் சமாஜ்ஜின் சட்டமன்றக் கட்சித் தலைவர் லால்ஜி வர்மா உட்பட பலர் கட்சி தாவி வருகின்றனர்.

தேர்தலுக்கு முன்பாக, இப்படி மூத்த நிர்வாகிகள் கட்சி தாவியிருப்பது பகுஜன் சமாஜை பரிதாப நிலைக்கு தள்ளியுள்ளது என்கிறார்கள் அம்மாநில அரசியல் நோக்கர்கள். கட்சித் தாவலுக்கு விளக்கம் கொடுத்துள்ள அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான உமா சங்கர் சிங், ``வேறு கட்சியில் சேரும் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் பிஎஸ்பியில் இருந்து நீக்கப்பட்டவர்கள். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி இதுபோன்றவர்களை காரணமாக கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். அவர்கள் மாயாவதியால் ஓரம்கட்டப்பட்டவர்கள்தான். இவர்கள் கட்சியை விட்டு வெளியேறியதன் மூலம் பகுஜன் சமாஜ் கட்சி வலுப்பெற்றுள்ளது" என்றுள்ளார்.

ஆனால், விலகியவர்கள் தரப்பில் வேறுமாதிரியாக சொல்லப்படுகிறது. பாஜக, சமாஜ்வாடி, காங்கிரஸின் பிரியங்கா, பீம் ஆர்மி சந்திரசேகர் ஆசாத் போன்றோரின் ஆதிக்கத்தால் பகுஜன் சமாஜ் தனது ஆஸ்தான வாக்கு வங்கிகளை இழந்து நாளுக்கு நாள் வலுவிழந்து வருகிறது. இதற்கு கட்சியை குடும்பக் கட்சியாக மாயாவதி மாற்ற நினைப்பதே முதல் காரணம். அதேபோல் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிடுவதில் பலருக்கு விருப்பமில்லை. இதனை தலைமையிடம் எடுத்துச் சொல்லியும் பலனில்லை என்று தங்கள் தரப்பு நியாயத்தை சொல்லி குமுறுகிறார்கள் மாற்று கட்சியில் இணைந்தவர்கள்.

கூட்டணி நிலைப்பாடு பகுஜன் சமாஜ் கட்சியை கேள்விக்குறியாக்கியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தல்களின்போது காங்கிரஸ், சமாஜ்வாடி போன்ற கட்சிகளுடன் இணைந்து களம்கண்டது பகுஜன் சமாஜ். ஆனால், இந்த முறை தனித்துப் போட்டி என்று நிலைபாட்டில் இருக்கிறது. ``உத்தரப் பிரதேசம், பீகார், கர்நாடகா உள்ளிட்ட மாநிலத் தேர்தல்களில் பல கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டுவிட்டோம். ஆனால், எந்த முன்னேற்றமும் கட்சிக்கு ஏற்படவில்லை. இதனாலேயே கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போல தனித்துப் போட்டி என்ற முடிவுக்கு வந்துள்ளோம்" என்று கூட்டணி நிலைப்பாடு குறித்து பகுஜன் சமாஜ் கட்சி விளக்கம் கொடுத்துள்ளது.

இந்த சிக்கல்கள் ஒருபுறம் என்றால், மறுபுறம் பகுஜன் சமாஜ் கட்சியை தோற்றுவித்த கன்ஷிராம் உறவினர்கள் புதிய புயலை கிளப்பி வருகின்றனர். கன்ஷிராமின் இளைய சகோதரி ஸ்வர்ன் கௌர், கன்சிராமின் மருமகன் லக்பிர் சிங் ஆகியோர் ``கன்ஷிராம் ஜி உருவாக்கிய கட்சியின் கதையை மாயாவதி கொஞ்சம் கொஞ்சமாக முடித்து வருகிறார். குடும்ப நிறுவனமாக கட்சியை மாற்றி வருகிறார். எனவே, இந்தத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியை தோற்கடிக்கும் எண்ணத்தை கொண்டுள்ள கட்சிக்கு ஆதரவு கொடுத்து பிரசாரம் செய்வோம்" என்று அறிவித்துள்ளனர்.

இதுபோன்ற சூழலால் வரவிருக்கின்ற உத்தரப் பிரதேச தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து விடப்பட்டுள்ளது எனக் கூறும் அரசியல் நோக்கர்கள், ஒவ்வொரு நிலையில் கட்சியை மறுசீரமைக்க வேண்டிய நிலைக்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது என்கிறார்கள். இல்லையென்றால் கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பகுஜன் சமாஜ், இந்தமுறை அந்த அளவுகூட வெல்லுமா என்பது சந்தேகமே என்று எச்சரிக்கை விடுக்கின்றனர்.

- மலையரசு

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com