பரிவுத்தொகை அறிவிக்கப்பட்ட 5 தமிழ் எழுத்தாளார்கள் யார்.. யார்? - அவர்களின் படைப்புகள் என்னென்ன? - முழுவிபரம்

யார் இந்த எழுத்தாளர்கள்? இவர்களின் பணி என்ன? என்பதை பார்க்கலாம்.
எழுத்தாளார்கள்
எழுத்தாளார்கள்த.அரசு

தமிழக அரசு எழுத்தாளர்களையும் அவர்கள் எழுதிய நூல்களையும் கௌரவிக்கும் பொருட்டு அந்நூல்களை நாட்டுடைமையாக்கியதுடன், அந்நூலிற்கான பரிவுத்தொகை பரிசையும் வழங்கி கௌரவித்துள்ளது. அதன்படி எழுத்தாளர் திருமதி. அம்சவேணிக்கு ரூபாய்.5 லட்சத்தையும், திரு.ம.சு.சம்பந்தம் அவர்களுக்கு ரூபாய் 10 லட்சத்தையும், திரு. கோதண்டபாணி பிள்ளைக்கு ரூபாய்.10 லட்சத்தையும், திரு.கோ.முத்துப்பிள்ளை என்பவருக்கு ரூபாய் 10 லட்சத்தையும், முனைவர்.இரா.மோகனுக்கு ரூபாய் 10 லட்சத்தையும் வழங்கியுள்ளது.

யார் இந்த எழுத்தாளர்கள்? இவர்களின் பணி என்ன? என்பதை பார்க்கலாம்.

திருமதி.அம்சவேணி

இவர் சென்னையை பூர்விகமாகக் கொண்டவர். 1955 ஜனவரி மாதம் பிறந்தவர். ராணிமேரி கல்லூரி, சென்னை பல்கலையில் உயர்கல்வி பயின்றவர். இவரது கணவர் கோ.பெரியண்ணன் உடன் இணைந்து 1978ல் ”வனிதா” என்ற பதிப்பகத்தை துவங்கினார். இவரது பதிப்பகத்தில் படிக்கும் மாணவர்களை கருத்தில் கொண்டு கல்வி, போட்டித்தேர்வுகளுக்கான நூலை அதிகம் பதிப்பித்தார். மக்களை கவரும் வகையில் தனது பதிப்பகத்தில் புதுமையை கொண்டு வர விரும்பியவர், ஓலைச்சுவடி வடிவில் திருக்குறள். புத்தக அட்டையில் திருமண அழைப்பிதல் என்று வித்தியாசமாக அச்சடித்து தேங்காய் பழத்துடன் திருமண நிகழ்வுகளில் இலவசமாக வழங்கியவர். தமிழில் பற்றுக்கொண்ட இவர், பெண் கல்வி, வெற்றி நமதே, சங்க இலக்கிய உரை, உள்ளிட்ட, 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். இத்துடன் தனது சேவையை நிறுத்தாமல், இவரும் இவரது கணவரும் சேர்ந்து ‘அம்சா’ என்ற கல்வி அறக்கட்டளை ஒன்றைத் துவங்கி

கிராமப்புற மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வந்தார். சர்வதேச சென்னை புத்தக கண்காட்சியில் அம்சவேணி பெரியண்ணன் என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது. 2018ல் தனது 63 வயதில் மறைந்தார்.

மா. சு. சம்பந்தன்

இவர் ஆந்திர மாநிலத்தில் மாரம்பேடு என்ற ஊரில் பிறந்தவர். (மே 25, 1923 ) தன் பெயருக்கு பின்னால் தன் தந்தையின் பெயரான சுப்பிரமணியத்தையும், ஊர் பெயரையும் சேர்த்து மா.சு. சம்பந்தன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். தமிழ் இலக்கிய , இதழியல் வரலாற்றாளர், தனித்தமிழ் ஆர்வலர், பெரியாரியச் சிந்தனையாளர். சென்னை முத்தியாலுப்பேட்டை மேல்நிலைப்பள்ளியிலும், பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்றவர். சென்னைக் கன்னிமாரா நூலகத்தில், இளநிலை அலுவலராகப் பணிபுரிந்தவர். முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாத்துரையுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். சென்னை மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்று, மாநகராட்சி உறுப்பினராக ஆனார்.

பிறகு, சென்னைப் பல்கலைக் கழகத்தின், 'செனட்' உறுப்பினராக பணியாற்றினார். தமிழ் அல்லாத சொற்களான ஸ்ரீ, ஸ்ரீமதி, அபேட்சகர் போன்றவற்றை, முறையே திரு, திருமதி, வேட்பாளர் என்று தமிழில் மாற்றிப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தவர். தமிழ் பற்றாளர், தமிழ் வளர்ச்சிக்கான பல்வேறு விதமான களப்பணிகளை ஆற்றியுள்ளார். மா.சு.சம்பந்தன் தன் 89-வது வயதில் செப்டெம்பர் 25, 2011-ல் காலமானார்.

1966-ஆம் ஆண்டு, 'அச்சுக்கலை' என்ற நூலுக்கு, தமிழக அரசின் முதல்வர் பக்தவத்சலம் கையால் விருது பெற்றவர்,

1982-ஆம் ஆண்டு, 'அச்சும் பதிப்பும்' என்ற நூலுக்கு, எம்.ஜி.ஆர். கையால் விருது பெற்றவர்.

1986-ஆம் ஆண்டு'தமிழ் இதழியல் வரலாறு' என்ற நூலுக்கு, தமிழக அரசின் விருது பெற்றவர்.

ராவ் சாகிப் கு. கோதண்டபாணி

29 அக்டோபர் 1896 கும்பகோணத்திற்கு அருகில் உள்ள செம்மங்குடியில் பிறந்தவர். குக்கிராமமான விடையல் கருப்பூரில் பள்ளிபடிப்பை முடித்த கையோடு திருச்சி புனித சூசையப்பர் கல்லூரி யில் பி.ஏ பட்டம் பெற்றவர். மிகுந்த தமிழ் ஆர்வம் கொண்டவர், கல்லூரி படிப்பை முடித்ததும் 1934 முதல் 1940 வரை மெட்ராஸ் மாகாணத்தின் Deputy Collector (Civil Service) ஆக பணிபுரிந்தவர். 1940 முதல் 1944 வரை இரண்டாம் உலகப்போரில் குடியேறியவர்கள் பாதுகாவலராக (Protector of Emigrants for South African repatriates) பணிபுரிந்தார். பின்னர், மெட்ராஸ் மாகாணத்தின் அயல்நாட்டுச் செல்கைக் கட்டுப்பாட்டாளராகவும் (Controller of Emigration) பணியாற்றியுள்ளார். பணி ஓய்வுக்குப் பின்னர் இரயில்வே பணிக்குழு (Railway Service Commission) உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். சென்னை ஆட்சி சொல்லாக்கக் கழக உட்குழுவில் முக்கிய பங்கு வகித்தார் .1943ல் இராவ் சாகேப் (Rao Sahib) பட்டம் பெற்றவர். ரஷ்ய எழுத்தாளர் "லியோ டால்ஸ்டாய்"-ன் சிறுகதை நூலை, தமிழில் "கதைமணிக்கோவை"என்ற தலைப்பில் மொழி பெயர்த்தார். இப்புத்தகம் தமிழ் பள்ளிகளில் பாடநூலாக இருந்தது.

1968 இல் நடந்த இரண்டாம் உலக தமிழ் மாநாட்டில் அவர் “Ancient Tamilians Philosophy of Life” என்ற தலைப்பில் ஆற்றிய சிறப்புரை அவரை பற்றி பேச வைத்தது. பழந்தமிழ் இசை-1959 என்கின்ற நூல் மூலமாக இசையின் நுணுக்கங்களை மிகத்துல்லியமாக ஆராய்ச்சி செய்துள்ளார்.நெடுநல்வாடையின் சிறப்பை எழுதியுள்ளார். ஈரடி இருநூறு- குறள் வெண்பாக்களால் ஆகிய இவரது நூலுக்கு அருட்டிரு அழகரடிகள் உரை எழுதியுள்ளார். இந்த நூல் மாம்பாக்கம் குருகுலத்திற்க்கு நூலாசிரியரால் உரிமையாக்கப்பட்டுள்ளது. குருகுலத்தினர் இந்த நூலினின்று கிட்டும் வருவாயை கொண்டு “கோதண்டபாணியார் தமிழ் பரிசு” என்னும் பெயரில் ஒரு பரிசு திட்டம் வகுத்து குருகுலத்தில் பயில்வோருள் தமிழில் முதன்மை பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்கி வருகின்றனர்.

இதே போல் பல கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், ஆராய்ச்சிநூல்களை கோதண்டபாணி பிள்ளை அவர்கள் எழுதியுள்ளார். 1925 முதல் 1979 வரை அவர் ஆற்றிய தமிழ் தொண்டானது சிறப்பு வாய்ந்தது. அவரின் கடைசி படைப்பானது 1979 இல் அவர் இயற்றிய “கீழை மேலை நாடுகளின் மெய்ப்பொருள் இயல் வரலாறு” (சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் ஆங்கில புத்தகத்தின் மொழிபெயர்ப்பு)

இவரின் நாடகங்களான மங்கையர்க்கரசியார் மற்றும் பங்கயச்செல்வி என்பன மெட்ராஸ் பல்கலைகழகத்தில் பாடநூலாக இருந்துள்ளது. நெடுநல்வாடை பொருள்நலன், நெடுநல்வாடை பாநலன், கம்பரும் மெய்ப்பாட்டியலும், மற்றும் திருமுருகாற்றுப்படை திறன், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்றும் பாடநூலாக இருக்கிறது. இசையைப்பற்றி வெளிவந்த பழந்தமிழ் இசை என்ற நூல் இன்றும் சென்னை பல்கலைக்கழகத்தில் இசை பயிலும் மாணவர்களுக்கு பாடநூலாக இருக்கிறது. 1979 ஆண்டு ஜனவரி மாதம் உலக வாழ்க்கையை நீத்தவர்.

கோ.முத்துப்பிள்ளை

இவர் தஞ்சையை அடுத்த மானாங்கோரை என்ற கிராமத்தில் செப்டம்பர் 15 1919 ல் பிறந்தவர். தஞ்சையில் பள்ளியை முடித்த இவர் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் இளங்கலை பட்டமும் பெற்றவர். 1942ல் சென்னை தலைமைச்செயலகத்தில் இளநிலை உதவியாளாராகப் பணிசேர்ந்தார்.

தமிழில் ஆர்வம் கொண்ட இவர் கோப்புகளில் ஆங்கிலத்தில் எழுதும் வழக்கத்தை மாற்றி தமிழில் எழுத ஊக்குவித்தார். தான் தலைவராக இருந்த சென்னை மாகாணத் தலைமைச் செயலகப் பணியாளர்கள் மன்றம் என்பதை தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகப் பணியாளர்கள் மன்றம் என்று பெயர் மாற்றினார். துணிச்சலான இந்தச் செயலுக்காக அண்ணா, நெடுஞ்செழியன் மு. கருணாநிதி உள்ளிட்டோரின் பாராட்டுதலைப் பெற்றவர். தமிழில் புதிதாக பல சொற்கள் உருவாக உழைத்தார்.

1973ல் தலைமைச்செயலகத்தில் ‘முத்தமிழ் மன்றம்’ உருவானபோது அதன் தலைவராகப் பொறுப்பேற்று திறம்பட உழைத்தார். இதற்காக தமிழ்த்தொண்டர் பட்டமும் பெற்றார். தமிழகத்தில் நடைப்பெற்ற மூன்று உலகத்தமிழ் மாநாடுகளிலும் இவர் பேராளராகப் பங்கு பெற்றுள்ளார். இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டில் இவர் எழுதிய அரியணையில் அழகு தமிழ் என்ற கட்டுரை இடம்பெற்று முக்கியமானதாகப் பேசப்பட்டது. நீதியரசர் எஸ். மகராசன் தலைமையில் இயங்கிய ஆட்சிமொழி ஆணையத்தில் தொடர்ந்து ஒன்பதாண்டுகள் உறுப்பினராகப் பணியாற்றினார்.

எம்.ஜி.ஆர். கைகளால் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதைப்பெற்றவர். முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விஸ்வநாதம் விருதை முதன்முதலில் பெற்றவரும் இவரே. முத்தமிழ் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கினார். தஞ்சை தமிழ்ப்பல்கலையின் திட்டக்குழு உறுப்பினராகவும் இருந்தவர்.

இவர் எழுதிய முக்கிய நூலானது, ‘அரியணையில் அழகு தமிழ், அன்னை மொழியும் ஆட்சித்துறையும், ஆட்சி மொழிச்சிந்தனைகள் ஆட்சிமொழி அருஞ்சொற்கள், மொழிபெயர்ப்பு வேடிக்கைகள், தமிழறிவோம், கவினார்ந்த கலைச்சொற்கள் முத்தமிழ் ஆய்வுமன்ற முழுமணிச் சொற்கள்’ போன்றவை இவர் எழுதிய முக்கியமான நூல்களாகும். இறுதிக்காலம் வரை தமிழ் வளர்ச்சிக்காக உழைத்து வந்த இவர் எழுதிய கட்டுரைகளும் நூல்களும் ஏராளம். தனது 90 வயதில் காலமானார். ஆட்சிமொழித்துறை வளர்ச்சிக்கு கோ.முத்துப்பிள்ளை ஆற்றியிருக்கும் சேவை என்றென்றும் போற்றத்தக்கது.

இரா.மோகன்

நூற்றுக்கணக்கான மாணவர்கள் முனைவர், இளமுனைவர் பட்டம் பெற வழிகாட்டியவரும் ஏராளாமான இலக்கிய நூல்களை எழுதிக் குவித்தவருமான பேராசிரியர் தமிழ் தேனீ இரா.மோகன் அவர்கள் ஒரு சிறந்த எழுத்தாளர், திறனாய்வாளர், சொற்பொழிவாளர், பட்டிமன்ற நடுவர், எனப் பல படிவங்களில் காலடி பதித்தவர். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தின் ஒப்பிலக்கியத்துறை தலைவராக இருந்தவர். சாகித்ய அகாதமியின் பொதுக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

பல்வேறு பொறுப்புகளை வகித்த மோகன் பணி ஓய்வுக்குப் பின் மதுரை காமராஜர் பல்கலையின் மதிப்புறு பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். பல்வேறு நூல்களின் தொகுப்பாசிரியராகவும்,பதிப்பாசிரியராகவும் பணியாற்றியவர். ஒப்பியல் சிந்தனைகள், தொல்காப்பியம் பொருள்திகாரம், இலக்கியச்செல்வம், உரை மரபுகள் புதுக்கவிதைத் திறன் போன்ற இவரது நூல்கள் முக்கியமானவை. மேலும் பட்டிமன்றபேச்சாளார். உலக தமிழ் மாநாடு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க மாநாடு உட்படப் பல மாநாடுகள் கருத்தரங்குகளில் சிறப்புரை ஆற்றியிருக்கிறார். தமிழக அரசின் கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது, மூவேந்தர் இலக்கிய விருது தமிழ்ச்சுடர் விருது, தமிழ்ப்பணிச் செம்மல் விருது உட்படப் பல்வேறு விருதுகளைப்பெற்றவர் 2019 ஜுன் மாதம் தனது 69 வது வயதில் மதுரையில் காலமானார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com