'வயது வந்தவர்களுக்கு மட்டும்' - பேசாப்பொருளை பகிரங்கமாக பேசிய எழுத்தாளர் கி.ரா.!

'வயது வந்தவர்களுக்கு மட்டும்' - பேசாப்பொருளை பகிரங்கமாக பேசிய எழுத்தாளர் கி.ரா.!
'வயது வந்தவர்களுக்கு மட்டும்' - பேசாப்பொருளை பகிரங்கமாக பேசிய எழுத்தாளர் கி.ரா.!

தலைசிறந்த கதை சொல்லி எனப்போற்றப்பட்ட கி.ரா. குறுநாவல், நாவல், சிறுகதை, கி.ரா.மியக்கதை, கடிதம் என இலக்கியத்தின் பல தளங்களில் இயங்கியவர். நாட்டுப்புற பாலியல் கதைகளை சேகரித்து கி.ராஜநாராயணன் தொகுத்த 'வயது வந்தவர்களுக்கு மட்டும்' என்கிற புத்தகம் குறித்தும், பேசாப்பொருளை பகிரங்கமாக இவர் அணுகியதைப் பற்றியும்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

நாட்டுப்புற பாலியல் கதைகளை சேகரித்து கி.ராஜநாராயணன் தொகுத்த 'வயது வந்தவர்களுக்கு மட்டும்' என்கிற புத்தகம் தமிழின் மிக முக்கியமான புத்தகங்களில் ஒன்று. கி.ரா. குறித்து பேசுகிறவர்களில் ஒரு பகுதியினர் இப்புத்தகம் குறித்து பேசுவதில்லை. 'எங்க நம்மள தப்பா நினச்சிடுவாங்களோ' என்கிற பலரது தயக்கமே அதற்குக் காரணம். கி.ரா.வும் அதைத்தான் சொல்கிறார். இப்படியான கதைகளை மனிதன் ரகசியமாக நுகரவே விரும்புகிறான் என்பது அவரது கோணம்.

கி.ரா.வின் 'வயது வந்தவர்களுக்கு மட்டும்' - இப்புத்தகத்தில் கி.ரா. எழுதியிருக்கும் முன்னுரையிலிருந்து சில விசயங்களைப் பார்க்கலாம். ஒழுக்கம் குறித்து பாடமெடுக்கும் பலரையும் நோக்கி கி.ரா. எழுப்பும் கேள்வி இது: "ஒரு பாலியல் கதைகள் புத்தகம் சரியாக விற்பனை ஆகவில்லை என்று எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா..?" - இப்படிக் கேட்கும் கி.ரா. சொல்கிறார்: "வாசகர்கள் சமர்த்தர்கள். பாலியல் புத்தகங்களை ஒன்றுவாங்கி பலரும் ரகசியமாக ஜெராக்ஸ் எடுத்துக் கொள்கிறார்கள்". "இந்த ஜெராக்ஸ் காலம்கூட பரவாயில்லை" எனத் தொடரும் அவர், தன் சிறுவயதில் பைரன் எழுதிய 'எம்மாஸ் லெட்டர்' எப்படியெல்லாம் பிரதி எடுக்கப்பட்டது என தன் சிறுவது நினைவுகளை இப்புத்தகத்தின் முன்னுரையில் அசைபோடுகிறார்.

எம்மாஸ் லெட்டர் - எம்மா என்கிற பெண் தன் தோழியுடன் பெண்கள் விடுதியில் தங்கிப் படிக்கிறாள். இருவருக்கும் அவ்வளவு நெருக்கம். இருவரும் பிரியும்போது ஓர் ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார்கள். தங்கள் இருவரில் யாருக்கு முதலில் கல்யாணம் நடக்கிறதோ, அவர்கள் தங்கள் முதலிரவில் நடந்ததை அப்படியே கடிதமாக எழுதவேண்டும். எம்மாவிற்குத்தான் முதலில் திருமணம் நடந்தது. ஒப்பந்தப்படி எம்மா தன் தோழிக்கு எழுதிய கடிதமே அக்காலத்தில் புகழ்பெற்ற 'எம்மாஸ் லெட்டர்'. ஜெராக்ஸ் வராத காலத்தில் இந்த 'எம்மாஸ் லெட்டரை' யார் எடுத்துச்சென்றாலும் ஒரு பிரதி தட்டச்சு செய்து கொள்வார்களாம். கி.ரா.வும் அப்படிச் செய்ததாகச் சொல்கிறார்.

இப்படியாக விரியும் கி.ரா.வின் 'வயது வந்தவர்களுக்கு மட்டும்' எனும் புத்தகத்தின் முன்னுரை மிகவும் சுவாரஸ்யமானது. அநேகமாக வாசகர்கள் மீண்டும் மீண்டும் மறுவாசிப்பிற்கு உட்படுத்திய முன்னுரை என்று கி.ரா.வின் 'வயது வந்தவர்களுக்கு மட்டும்' புத்தகத்திற்காக எழுதிய 'எம்மாஸ் லெட்டர்' முன்னுரையைச் சொல்லலாம்.

இப்புத்தகத்தின் முன்னுரைக்கு சற்றும் சுவாரஸ்யம் குறையாதது அதன் உள்ளடக்கம். இப்புத்தகத்தில் இருக்கும் நாட்டுப்புற பாலியல் கதைகளை கி.ரா. தேடித் தேடி சேகரித்திருக்கிறார். பல இடங்களில் வசவுகளையும் பாராட்டுகளையும் பெற்றதாக குறிப்பிடுகிறார். வெகுசன பத்திரிகைகளில் 'சென்சார் கட்' அடித்து வெளியானதால் இந்தக் கதைகளின் ஆன்மா கெட்டுப் போனதாக நினைத்த கி.ரா. பிறகு எந்த கட்டுப்பாடுகளுமற்ற மொழியில் நாட்டுப்புற பாலியல் கதைகளைத் தொகுத்து எழுதியதே 'வயது வந்தவர்களுக்கு மட்டும்' எனும் புத்தகம். இப்புத்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு கதையும் சுவையானவை. மனதிற்குள்ளும் நண்பர்களுக்குள்ளும் பகிர்ந்து கொண்டு கொண்டாடத் தகுதியானவை.

அதில் ஒரு கதை - "40 வயது அப்பனும் 20 வயது மகனும் மணல்வெளியில் நடந்து போனார்கள். அப்பன் தாரம் இழந்தவன்; மகனுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. இருவருமாக பெண் தேடி நடந்து போனார்கள். அவர்கள் கண்ணின் சிறிதும் பெரிதுமாக இரு பெண்களின் காலடித்தடங்கள் பட்டன. பெரியது தாயுடையதாகவும் சிறிய காலடித் தடம் மகளுடையதாகவும் இருக்கலாம் என யூகித்த அவர்கள், பெரியகாலடித் தடம் கொண்ட தாயை அப்பனும், சிறிய காலடித் தடம் கொண்ட மகளை மகனும் கல்யாணம் கட்டும் முடிவோடு அந்த காலடித்தடங்களை பின் தொடர்ந்து சென்றனர். இறுதியாக 35 வயது தாயையும், 16 வயது மகளையும் அவர்கள் கண்டுபிடித்தனர். அப்பெண்களும் மாப்பிள்ளை தேடி அலைவதாக தெரியவந்தது. நால்வருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போனது. ஆனால் விசயம்  என்னவென்றால், பெரிய காலடித் தடம் மகளுடையது, சிறிய காலடித் தடம் தாயுடையது என பின்னர் தெரியவந்தது. ஆனாலும் வாக்குப்படி தாயை மகனும், மகளை அப்பனும் கல்யாணம் செய்து கொண்டார்கள். இப்போது யாருக்கு யார் என்ன உறவு..?" என்று எழுதி இருக்கிறார் கி.ரா. உண்மையில் அவர் சொல்ல வருவதை ஆழ்ந்து வாசித்தால் புரிந்துகொள்ள முடியும். அதற்கு இக்கதையின் துவக்கத்தில் கி.ரா கொடுத்திருக்கும் விளக்கத்தை படிப்பது அவசியம்.

இன்னொரு கதையில், மனைவியை எப்போதும் சந்தேகப்படும் கணவனின் அபத்தத்தின் உச்சமான செய்கை குறித்து பதிவு செய்திருப்பார். தன் மனைவியின் நடத்தையைக் கண்காணிக்க அந்தக் கணவன் செய்யும் உத்தியும், அதன் அடுத்தகட்ட நகர்வும் பாலியல் நகைச்சுவையாக மட்டுமே நாம் கடந்துவிட முடியாத ஒன்று. மாறாக, மண வாழ்க்கையின் பாலுறவு சார்ந்த நம்பிக்கையின்மையால் விளையும் சந்தேகம் என்னும் மனக்கோளாறு ஒருவரை எந்த அளவுக்கு கேவலமான செயல்களுக்கு இட்டுச் செல்லும் என்பதையும் பகிரங்கமாக வெளிப்படுத்தும்.

இப்படியாக இப்புத்தகத்தில் எந்த ஒளிவு மறைவுமில்லாமல் பாலியல் கதைகளை செல்லிச் செல்கிறார் கி.ரா. ஓர் இடத்தில் "அனைத்து உயிர்களுமே பசியுணர்வும் பாலுணர்வும் கொண்டவை. ஆதிகாலத்தில் - மனித சமூகத்தின் தொடக்க காலத்தில் - மனிதனுக்கு இந்தப் பால் உணர்வும் சரி பசியுணர்வும் சரி எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் இருந்து வந்தது, மனித சமுதாயம் முறையாக வளர்ச்சி அடைந்து நாகரிகத்தின் படிக்கட்டில் காலடி எடுத்து வைக்க இந்த உணர்வுகளில் சிக்கல்கள் தோன்ற ஆரம்பித்துவிட்டன" என்கிறார் கதைசொல்லி கி.ரா.


"பாலியல் கதைகள் எல்லா மொழியிலும் இருக்கு. அதை திரட்டுவதாலும் வெளியிடுவதாலும் நம் ஆச்சாரம் போய்விடும் என்று அரற்றுவது பேதமை. மானுடவியலில் இதெல்லாம் இருக்கு. மனுஷன் எங்கெல்லாம் இருக்கானோ அங்கெல்லாம் மனுஷநாத்தம் இருக்கும்" என்று சொல்லும் கி.ராஜநாராயணன், "இவற்றை எல்லாம் ஆபாசம் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டால் கூட இவற்றைத் தெரிந்துகொள்வதால் ஒருவன் கெட்டுவிடுவான் என்று சொல்ல முடியுமா? நான் வயதில் இதுபோல நிறைய கதைகளை வண்டி வண்டியாக கேட்டிருக்கிறேன். அதனால் பாலியல் சம்பந்தமான விஷய ஞானம் கிடைத்திருக்கிறதே தவிர, நாம் கெட்டுப் போய்விடுவோம் என்பதல்ல" என்கிறார்.

இந்தப் பாலியல் கதைகளை கிமு - கிபி போல காலமாக பிரித்தால் நம் சமுதாயத்தில் திருமணம் எனும் மரபு வருவதற்கு முன் - திருமணம் எனும் மரபு வருவதற்கு பின் என்று பிரிக்கலாம் என்கிறார் அவர். மானுட வளர்ச்சியில் ஒரு கட்டத்தில்தான் திருமணம் வருகிறது. ஒவ்வொரு வசவுகளுக்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது என்று பதிவு செய்யும் கி.ரா. தனது 'வயது வந்தவர்களுக்கு மட்டும்' புத்தகத்தில் ஒரு பகுதியில் 'இப்போது நான் வசவுகளை திரட்டிக் கொண்டிருக்கிறேன். இந்த கி.ரா.வுக்கு என்ன கிறுக்கா, வசவுகளை திரட்டிக் கொண்டு அலைகிறான் என சிலர் நையாண்டி செய்கிறார்கள். நான் கதை எழுதுவதை தள்ளி வைத்துவிட்டு. இதைச் செய்ய யாரும் இல்லாததால் செய்கிறேன்' என எழுதி இருக்கிறார். உண்மைதானே இப்படியான காரியத்தை செய்ய யார் முன்வருவார்கள்..? அதனைச் செய்தவர் கி.ரா.

தற்கால சமூகத்தில் பாலியல் தொடர்பாக பேசுவதே தப்பு என்றல்லவா போதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மை யாதென யாவருக்கும் தெரியும்தானே. ஆதியில் பாலுணர்வு இல்லாமல் மனித சமூகம் ஓர் அடி கூட நகர்ந்திருக்க வாய்ப்பில்லை. பாலுறுப்புகளை கற்பனை செய்து கொள்வதிலும், தன் கற்பனைப்படி அதனை வரைந்து பார்ப்பதிலும் ஆர்வமுள்ள ஓர் ஆதிவாசியின் ஜீன் எப்போதும் எக்கால மனிதனுக்குள்ளும் பயணித்துக் கொண்டே இருக்கும். அதனால்தான் நம் ஊர் பொதுக் கழிவறைகள் எங்கும் குகைச் சித்திரவாசியின் வழிவந்தவர்கள்போல் தங்கள் அந்தரங்க சித்திரங்களை தீட்டியபடி இருக்கின்றனரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இப்போதும்கூட இக்கட்டுரையின் தலைப்பிற்காக இதனை ரகசியமாக வாசிக்கிறவர்களே அதிகம் இல்லையா?

போய் வாருங்கள் கி.ரா. இம்மண்ணுள்ளவரை, இம்மண்ணில் மனிதருள்ளவரை, மனுஷநாத்தம் உள்ளவரை உங்கள் கதைகளில் நீங்கள் வாழ்வீர்கள்!

- சத்யா சுப்ரமணி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com