“இது பிள்ளையார் மண் என்று உணர்த்திவிட்டார் உதயநிதி”- பாஜக நாராயணன் திருப்பதி பேட்டி

“இது பிள்ளையார் மண் என்று உணர்த்திவிட்டார் உதயநிதி”- பாஜக நாராயணன் திருப்பதி பேட்டி
“இது பிள்ளையார் மண் என்று உணர்த்திவிட்டார் உதயநிதி”- பாஜக நாராயணன் திருப்பதி  பேட்டி

மகள் கையில் இருக்கும் பிள்ளையார் படத்தை  தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டது  சர்ச்சையை ஏற்படுத்தியது. “எனக்கும்  என் மனைவிக்கும் கடவுள்  நம்பிக்கை  இல்லை. எனது மகள் விருப்பத்திற்காக பதிவிட்டேன் ” என்று அவர் விளக்கம்  அளித்தபிறகும்கூட  “பகுத்தறிவு  பேசுபவரின்  பக்தியை பாருங்கள்“ என்று  உதயநிதியின் ட்விட்டருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளது.  இந்நிலையில், பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்…

        “பிள்ளையார்  யாருக்கும்  தனிப்பட்ட முறையில் சொத்து அல்ல.  அவர்  பொதுச்சொத்து. இது பெரியார் மண்.  திராவிட மண்’  என்ற உதயநிதி,  இப்போது இது பிள்ளையார் மண் என்பதை புரிந்து உணர்ந்துகொண்டு ட்விட்டரில்  பதிவிட்டுள்ளார்.  உதயநிதி மகள் கையில் பிள்ளையார் படம் இருந்ததற்கும் அதை  அவர்  பதிவிட்டதற்கும்  மிகப்பெரிய மகிழ்ச்சி அடைகிறேன்.  அதுகுறித்து, நான் எந்த விமர்சனமும் செய்யவில்லை. அதில், அரசியல் இருப்பதாகவும் நான் பார்க்கவில்லை.

ஆனால், பிள்ளையார் படத்தை பதிவிட்டப் பிறகு ‘குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்பதுபோல்,  தான் செய்ததை  தவறென்றும்  சொல்லாமல், சரியென்றும் கூறாமல்,  ’நான் மற்றவர்களுக்குத்தான் வாத்தியார். ஆனால், நான் என்ன வேண்டுமென்றாலும் செய்வேன்’  என்கின்ற  திமுகவின்  போக்கு  உதயநிதிவரை  நீடிக்கிறது.

         ட்விட்டரில் பிள்ளையார் படம் போட்டதற்காக எல்லோரும் விமர்சிக்க ஆரம்பித்ததும் ’எனக்காக செய்யவில்லை மகளுக்காகச் செய்தேன்’ என்கிறார். பிள்ளையார் படம் பதிவது என்னுடைய விருப்பம் நான் பதிவேன் என்று தைரியமாகச் சொல்லலாமே? அதைவிடுத்து விளக்கம் கொடுத்ததுதான்  தவறான அரசியல்.

          மேலும், அவர் தனக்கும் தனது மனைவிக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை என்கிறார். ஆனால், இருவருமே கோயில்களுக்கு சென்று வந்ததை பலப் பதிவுகளில் நான் பார்த்திருக்கிறேன். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ஏன் கோயிலுக்குச் செல்லவேண்டும்? தனிப்பட்ட வாழ்க்கை வேறு,  மக்களுக்கான வாழ்க்கை என்பது வேறா?  தனிப்பட்ட வாழ்க்கையில் மகளையோ, மனைவியையோ, தாயையோ மகிழ்விப்பது தாய்நாட்டுக்கு செய்யும் கடமை போன்றது.  அந்தக் கடமைக்கு விளக்கம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. இவர்கள்,  கோயிலுக்குச் செல்வதையெல்லாம் என்னதான் மறைத்தாலும் இன்றுள்ள சமூக வலைதளங்களின் வளர்ச்சியால்  அதெல்லாம் வெளிவந்துவிடும்.  தனிமனித  ஒழுக்கம் என்பது பொது வாழ்வில் கண்டிப்பாக பார்க்கப்படும். உதயநிதி தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி நடந்து கொண்டிருக்கிறாரோ அப்படித்தான் பொதுவாழ்க்கையில் நடக்கவேண்டும். வீட்டில் பிள்ளையார் கும்பிடுவேன். வெளியில் கும்பிடாதீர்கள் என்பது நியாயமே அல்ல.

என் பொண்ணுக்காக செய்தேன் என்று சொல்வது என்பது, மகளையே இவரது நம்பிக்கையை ஏற்றுக்கொள்ள வைக்க முடியவில்லை என்றால் தமிழக மக்களை எப்படி ஏற்றுக்கொள்ள வைக்கமுடியும்? இவரது, தாயையே கடவுள் நம்பிக்கை இல்லாதவராக மாற்ற முடியாதபோது தமிழகத் தாய்மார்களை எப்படி ஏற்றுக்கொள்ளச் செய்வார்? பகுத்தறிவு பேசும் திமுகவின் தோல்விதான் இது.

அதனால், உதயநிதி இயல்பாக இருக்கவேண்டும். கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்று சொல்லிவிட்டுப் போகட்டும். அதில் என்ன தவறு உள்ளது? ஆனால், விளக்கம் கொடுத்து  மத நம்பிக்கைகளை சீர்குலைக்காதீர்கள். ஆனாலும், இது பெரியார் பூமி அல்ல. பிள்ளையார் பூமி என்பதை உதயநிதி ஸ்டாலின் மிகத்தெளிவாக கூறிவிட்டார். ஏனென்றால், மண் என்றாலே தாய் மண் என்பதுதான் பொருள். அப்போது, அவரது தாயே பிள்ளையாரை மதிக்கிறார் என்றால், இது பிள்ளையார் மண் என்பதை தாய் மூலமாக உதயநிதி ஸ்டாலின் திமுகவுக்கும் தமிழக மக்களுக்கும் உணர்த்திவிட்டார்” என்கிறார், அவர்.

- வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com