வாக்குகளை குறிவைத்து காய் நகர்த்துகிறதா பாஜக..? புதிய தலைவரால் தமிழகத்தில் மலருமா தாமரை..?

வாக்குகளை குறிவைத்து காய் நகர்த்துகிறதா பாஜக..? புதிய தலைவரால் தமிழகத்தில் மலருமா தாமரை..?
வாக்குகளை குறிவைத்து காய் நகர்த்துகிறதா பாஜக..? புதிய தலைவரால் தமிழகத்தில் மலருமா தாமரை..?

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த செப்டம்பர் மாதம் தெலங்கானா மாநில ஆளுநராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து மாநில பாஜக தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து 6 மாதகாலம் காலியாக இருந்த தமிழக பாஜக தலைவர் பதவிக்கு வானதி ஸ்ரீனிவாசன், ராதாகிருஷ்ணன், ராகவன், ஹெச்.ராஜா உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் போட்டி போட்டு வந்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில், பட்டியலினத்தை சேர்ந்த எல்.முருகன் என்பவரை தமிழக பாஜக தலைவராக, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமனம் செய்துள்ளார்.

இதுகுறித்து எல்.முருகன் கூறுகையில், “பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு முதலில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து பாஜகவின் மாநிலத் தலைவராக அறிவித்துள்ளனர். அவர்களது நம்பிக்கைக்கு ஏற்ப தமிழ்நாட்டில் என்னுடைய பணிகளை சிறப்பாக செய்வேன். ஏற்கெனவே தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையத்தின் துணைத்தலைவராக பல பணிகளை செய்து மக்களை சந்தித்து இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

42 வயதான எல்.முருகன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர். இவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக உள்ளார். அத்துடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் இவர், சட்டப்படிப்பில் பிஹெச்டி முடித்தவர். மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் நிலைக்குழு உறுப்பினராக பதவி வகித்தவர்.

டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் பிஎல் படிப்பும், சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எல்.படிப்பும் படித்தவர். ஏற்கெனவே, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் கிருபாநிதி 2000-மாவது ஆண்டு தமிழக பாஜக தலைவராக பதவி வகித்த நிலையில், தற்போது, எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல், சட்டப்பேரவை தேர்தல் என அடுத்தடுத்து தேர்தல்கள் வர உள்ளன. இதனால்தான் பட்டியலினத்தை சேர்ந்தவரை தலைவராக நியமித்து பட்டியலின மக்களின் வாக்குகளை கவர பாஜக திட்டமிட்டு முருகனை களமிறக்கியுள்ளதா என்ற கேள்வி எழும்புகிறது.

இதுகுறித்து பத்திரிகையாளர் கோலாகல சீனிவாசன் கூறும்போது, “பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டிருப்பது எதிர்பார்த்திராத அறிவிப்பு. பாஜக ஒரு தெளிவான பாதையில் காலடி வைத்திருக்கிறது. பாஜக என்றாலே பிராமணர்கள் கட்சி என்ற பார்வை இருக்கிறது. அதேபோல், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற பார்வையும் இருக்கிறது. அந்த பார்வையை உடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பாஜக மீதான எதிர்மறையான பார்வையை உடைப்பதே அக்கட்சியின் திட்டமாக இருக்கிறது. ரஜினிக்கு சாதகமான தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று கொண்டு வந்துள்ளார்கள். எந்தவொரு சர்ச்சைக்கும் உள்ளாகாதவரை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் முருகனை தேர்வு செய்துள்ளனர். பாஜகவில் பதவி போட்டியே கிடையாது. யாரேனும் தலைவராக மாறிவிட்டால் அவரின் வழிகாட்டுதலின் படி அனைவரும் செயல்படுவார்கள். முருகனை தேர்வு செய்தது தமிழகத்திற்கு பொருத்தமான முடிவு” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து பத்திரிகையாளர் ஷ்யாம் கூறுகையில், “பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களை தலைவர்களாக நியமிப்பதால் மட்டுமே பாஜக செல்வாக்கு வளர்ந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை. ஏற்கெனவே உள்ள பட்டியல் இனத்தை சேர்ந்த தலைவர்கள் வலிமையானவர்களாக இருக்கின்றனர். அவர்கள் திராவிட கட்சியோடு கூட்டணியும் வைத்திருக்கிறார்கள். பட்டியல் இனத்தில் இருந்து தலைவரை தேர்வு செய்துள்ளதால் பாஜகவிற்கு பட்டியல் இன மக்களின் ஆதரவு கிடைத்து விடும் என்று எனக்கு தோன்றவில்லை. ஆனால் சில நேரங்களில் அது நடப்பதற்கு வாய்ப்புகளும் உள்ளன. ரஜினி நிர்வாகிகள் சந்திப்புக்கும் இதற்கும் தொடர்பு இருப்பதாகவும் கருதவில்லை” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, “பாஜகவில் தலைமை பொறுப்பு என்பது ஒரு பதவிதான். கூட்டு தலைமைதான் எப்போது இயங்குகிறது. அந்தவகையில் முருகன் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை அனைவரும் முழு மனதோடு வரவேற்கிறோம். பாஜக என்றாலே உயர்சாதி மக்களின் இயக்கம் என்று தமிழகத்தில் வைக்கப்பட்டிருந்த பொய்யுரைக்கு மாற்றாக முருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தமிழர்களுக்கு பெருமையாக அமைகிறது. முருகன் நன்கு படித்தவர். பாஜகவை அடிதட்டு மக்கள் மத்தியில் மிக எளிமையாக எடுத்து செல்வார். பாஜகவின் வரலாற்றில் இது திருப்புமுனையாக அமைந்துள்ளது”எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com