ஐபிஎல் அறிமுகம்: கோடீஸ்வர குடும்பத்தில் இருந்து ஒரு கிரிக்கெட்டர்!

ஐபிஎல் அறிமுகம்: கோடீஸ்வர குடும்பத்தில் இருந்து ஒரு கிரிக்கெட்டர்!

ஐபிஎல் அறிமுகம்: கோடீஸ்வர குடும்பத்தில் இருந்து ஒரு கிரிக்கெட்டர்!
Published on

கிரிக்கெட்டை பணக்காரர்கள் விளையாட்டு என்றுதான் சொல்வார்கள். திறமைதான் முக்கியம் என்றான பிறகு அதிரடி ஆட்டக்காரர்கள், கிரிக்கெட்டுக்குள் வரத் தொடங்கி விட்டார்கள். பிறகு இங்கு வந்த பின் கோடீஸ்வரர் ஆனவர்கள் அதிகம். ஆனால், இந்த ஆர்யமான் இதிலிருந்து விதிவிலக்கு! அவரது முழுப்பெயரையும் சொன்னால், உங்களுக்கு புரியும். அவர், ஆர்யமன் பிர்லா! ஆதித்யா பிர்லா குழுமத் தலைவரான குமார் மங்கலம் பிர்லாவின் இளைய மகன்!

மும்பையை சேர்ந்தவர் என்றாலும் ஆர்யமன் கிரிக்கெட் விளையடுவது மத்திய பிரதேச அணிக்கு. 23 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் வெறும் 5 போட்டியில் 602 ரன்கள் குவித்திருக்கிறார் இவர். அதில் இரண்டு சதமும் ஒரு இரட்டைச் சதமும் அடங்கும். அதோடு பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். இடது கை பேட்ஸ்மேனான, இந்த பிர்லா, அருமையான லெக்ஸ்பின்னரும் கூட. இந்த தகுதி போதாதா ஐபிஎல் ஏலத்துக்கு?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இவரை 30 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது. 

’இந்த ஏலம் நடக்கும்போது எனக்கு உடல்நிலை சரியில்லை. அதனால ஏலத்தை பார்க்கலை. யாரோதான் சொன்னாங்க, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி என்னை எடுத்திருக்கிறதா. சந்தோஷமா இருக்கு. இது எனக்கு கிடைச்சிருக்கிற சிறப்பான வாய்ப்பு. கண்டிப்பா இதைப் பயன்படுத்திக்குவேன்’ என்கிறார், இந்த கோடீஸ்வர கிரிக்கெட்டர்!

இவரது தனிப்பட்ட பயிற்சியாளர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரவீன் ஆம்ரே.
‘மும்பை சிவாஜி பார்க்ல என்னை வந்து பார்த்தார் ஆர்யமன். அவர் அம்மாவும்  வந்திருந்தாங்க. என்னோட கிரிக்கெட் பயிற்சி அகாடமியில சேரணும்னு சொன்னாங்க. முதல்ல மறுத்தேன். ஒரு தொழிலதிபரோட மகன் அப்படிங்கறதுக்காகவே மறுத்தேன். அப்புறம் அவன்கிட்ட திறமை இருக்கிறதை பார்த்த பிறகுதான் சேர்த்து பயிற்சி கொடுத்தேன். 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உம்ரிகர் டிராபி போட்டியில அதிக ரன் குவிச்ச வீரர் ஆர்யமன்தான். அதுல எனக்கு மகிழ்ச்சி. அவர், ஆல்ரவுண்டர். இப்போ ஐபிஎல் மூலமா கிரிக்கெட்டை கத்துக்க அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு’ என்கிறார் ஆம்ரே.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், நம்மூர் ரஹானே ஆகியோர் இவரது டீமில் இருக்கிறார்கள். 

இவர்களுடன் டிரெஸ்சிங் ரூமில் கிரிக்கெட் பற்றி பேசி, அதைக் கற்றுக்கொண்டு ஆட இருப்பதில் ஆர்யமனுக்கு மகிழ்ச்சி. அதன் மூலம், நல்ல கிரிக்கெட்டராக உருவாக முடியும் என்று நினைக்கிறார் இவர்.

‘ஆர்யனின் திறமை மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கு. கண்டிப்பாக இந்திய அணியில் ஒருநாள் அவர் இடம்பிடிப்பார். அந்த நாள் எனக்கு மகிழ்ச்சியான நாளா இருக்கும்’ என்கிறார் ஆம்ரே.

அதற்கான வாய்ப்பு தாராளமாகவே இருக்கிறது, இந்த கோடீஸ்வரருக்கு!


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com