சினிமாவில் ட்ரெண்ட் ஆகும் அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள்

சினிமாவில் ட்ரெண்ட் ஆகும் அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள்

சினிமாவில் ட்ரெண்ட் ஆகும் அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள்
Published on

அரசியல்வாதிகளின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து திரைப்படம் எடுக்கும் மோகம் இந்தியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்திய அரசியல் தலைவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் ‘காந்தி’. இதற்கு உலக அளவில் பெரும் வரவேற்பு கிடைத்தது. ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கிய இந்தத் திரைப்படம் 1982 ஆண்டு வெளியானது. இப்படத்திற்கான மூலக் கதையை ஏ.கே.செட்டியார் வடிவமைத்த ‘மகாத்மா காந்தி’ டாக்குமென்ட்ரியில் இருந்து அவர் பெற்றார் எனக் கூறப்பட்டது. வாழ்நாள் முழுக்க அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய காந்தியின் வாழ்க்கையை ஒரு வெளிநாட்டுக்காரரே திரைப்படமாக எடுத்திருந்தது ஒரு வரலாற்று முரண். 

தமிழில் நேரடியாக அரசியல் கதையை திரைக்கு மாற்றிக் கொடுத்த படம் ‘கப்பலோட்டிய தமிழன்’ . வ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாற்றை பேசிய இப்படத்தை பி.ஆர்.பந்துலு இயக்கி இருந்தார். ம.பொ.சிவஞானம் எழுதிய ‘கப்பலோட்டியத் தமிழன்’வரலாற்று நூலை அடைப்படையாகக் கொண்டு உருவாகியிருந்தது. நேரடியாக அரசியல் தலைவர் ஒருவரின் வாழ்க்கை திரைக்காவியமானது இப்படத்தில்தான். 1961ல் வெளியான இப்படம் பல படங்களுக்கு முன்னோடியாக நின்றது.

மாடர்ன் சினிமாவில் அரசியல் தலைவர் வரலாற்றை முன் வைத்த திரைப்படம் ‘இருவர்’. திராவிட இயக்க அரசியலை மையமாகக் கொண்டு அப்படம் உருவாகி இருந்தது. எம்.ஜி.ஆர். மற்றும் திமுக தலைவர் கருணாநிதி அதன் மைய பாத்திரங்களாக சித்தரிக்கப்பட்டிருந்தனர். மோகன்லாலின் ஆனந்தன் கேரக்டரும் தமிழ்க்கவிஞனாக பிரகாஷ் ராஜின் தமிழ்ச்செல்வன் கேரக்டரும் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தன.‘ஆயிரத்தில் நான் ஒருவன்..நீங்கள் ஆணையிட்டால் படைத்தலைவர்’என்ற பாடல் அப்படியே எம்ஜிஆரை நினைவுபடுத்தியது. 

1997 ஆம் ஆண்டு திரைக்கு வந்தத் திரைப்படம் அவ்வளவாக வெற்றிபெறவில்லை. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் என்பதால் தரத்தின் அடிப்படையில் மட்டுமே அது கவனத்தை ஈர்த்தது. வசூல் ரீதியாக அதற்கு மக்கள் வரவேற்பு அளிக்கவில்லை. சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பிரகாஷ் ராஜ் பெற்றார். சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவுக்கு ஒரு தேசிய விருது கிடைத்தது. ஆனாலும் அடுத்த ஒரு அரசியல் சம்பந்தமான பாத்திரத்தை வைத்து மணிரத்னம் இயக்கிய திரைப்படம் ‘ஆயுத எழுத்து’. அதில் அவர் ஆந்திர உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பெரும் புரட்சியைக் கட்டமைத்த ஜார்ஜ் ரெட்டியின் வாழ்க்கையை பேசி இருந்தார். சூர்யாவின் மூலம் அந்தப் பாத்திரம் ஞாபகப்படுத்தப்பட்டது. இந்தளவில் பார்த்தால் அரசியல் தலைவர்களின் வாழ்க்கையை திரைக்காவியமாக மாடர்ன் சினிமாவிற்குள் கொண்டு வந்தவர் மணிரத்னம்.

இதேபோல் பெரியாரின் வாழ்வை முன் வைத்து ‘பெரியார்’திரைப்படம் வெளியானது. அப்போது மணியம்மையின் பார்த்திரத்தில் குஷ்பு அமர்த்தப்பட்டதற்கு பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதனை ஞான ராஜசேகரன் இயக்கி இருந்தார். அடுத்து காமராஜ். தமிழக அரசியலில் அசைக்க முடியாத தலைவராக உருவெடுத்திருந்தவர். இவரது ஆட்சியே இன்றளவு தமிழகத்தின் மிகச் சிறப்பான ஆட்சியாக அளவீடு காட்டப்படுகிறது. அந்தளவுக்கு அரசியல் செல்வாக்கு உள்ள இந்தத் தலைவரின் வாழ்க்கை வரலாறு வெளியான போது பெரிய அளவுக்கு வரவேற்புக் கிடைக்கவில்லை. இதனை அ. பாலகிருஷ்ணன் இயக்கி இருந்தார். 

இதனை அடுத்து மீண்டும் இப்போது இவரே எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்கி வருகிறார். தமிழ் சினிமாவிலும் தமிழக அரசியலும் ஒரு காந்தமாக இருந்தவர் எம்ஜிஆர். ஆகவே அதன் வடிவம், அதன் தன்மை குறித்து ஒரு ஈர்ப்பு உள்ளது. எம்ஜிஆரின் நூற்றாண்டை கொண்டாடும் நோக்கில் இப்படத்தின் படப்பிடிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க உள்ளதாக ‘முல்லை வனம்’ படத்தின் இயக்குநர் ரவி ரத்தினம் கூறியிருந்தார். அதற்காக முறைப்படி தலைப்புக்கூட பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்திருந்தார். அவர் அறிவிப்பின் படி மே மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்தப் படத்தின் வேலைகள் எந்தளவில் உள்ளன என்பது குறித்த விவரங்களில் ஒரு தெளிவும் இல்லை. 

இந்திய அளவில் மிக முக்கியமான தலைவராக அடையாளம் காணப்பட்ட அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக வெளியானது. ஜாப்பார் பட்டேல் இயக்கிய இத்திரைப்படத்தில் அம்பேத்கராக மம்முட்டி நடித்திருந்தார்.1998ல் தயாரான இப்படத்தை 2000ம் ஆண்டு ஆங்கிலத்திலும் வெளியானது. இதனை தமிழில் மொழி மாற்றி வெளியிட தமிழக அரசு 10 லட்சம் நிதி அளித்து உதவியது. ஆனால் பல்வேறு காரணங்களால் இது 2010ல் தான் தமிழில் வெளிவந்தது. அரசியல் வட்டத்தில் விவாதம் மிக்க தலைவராக உள்ள அவரது படம் வெளியான போதும் மக்கள் அதற்கு அமோக ஆதரவை அளிக்கவில்லை. அதுவே கடந்தக் கால சினிமா உலக வரலாறு.

அவர் ஆரம்பித்து வைத்த ட்ரெண்ட் இன்று இந்திய சினிமாவை ஆட்டிப்படைக்க ஆரம்பித்திருக்கிறது. ஆந்திராவில் ஒய்எஸ்ஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘யாத்ரா’ தயாராகி வருகிறது. அதில் ஒய்எஸ்ஆர் வேடத்தில் மலையாள திரைத்துறையை சேர்ந்த மம்முட்டி நடித்து வருகிறார். அவரது மனைவி பாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். மஹி ராகவ் இயக்கும் இந்தத்திரைப்படத்திற்கு ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆந்திர மக்களின் நம்பிக்கை நாயகனாக வலம் வந்த ஒய்எஸ்ஆர் ரெட்டி முதல்வராக பொறுப்பில் இருந்தபோது திடீரென்று ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் மரணத்தை தழுவினார். அதற்குள் இருக்கும் மர்மம் என்ன? அவர் எப்படி மரணம் அடைந்தார் என்பது குறித்த புதிர் இன்னும் மக்கள் மத்தியில் நீங்காமல் நிலைத்திருக்கிறது. அதற்கு இந்தப் படம் ஒரு முடிவை வழங்கலாம் என அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 

இதே ஆந்திர அரசியலை மையமாகக் கொண்டு இப்போது இன்னொரு புயல் கிளம்பி இருக்கிறது. ஆந்திராவின் அடையாளமாக கருதப்படும் என்.டி.ராமாரவின் வாழ்க்கையை வைத்து ஒரு திரைப்படம் தயாராகி வருகிறது. இதை தேஜா இயக்குகிறார். இதில் என்.டி.ராமராவின் வேடத்தில் மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். இதில் வித்யாபாலன் நடிக்க இருக்கிறார். இந்தப் படம் முழுக்க முழுக்க என்.டி.ராமராவின் வாழ்க்கையை பேச இருக்கிறது. இன்றும் ஆந்திர மக்கள் மத்தியில் ‘ஐகான்’ ஆக உள்ள அவரது திரைப்படத்தை அம்மக்கள் கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள் என்றே பேசப்படுகிறது. 

இந்தப் படத்தில் இன்னொரு சிறப்பு சேர இருப்பதாக தெரிய வந்துள்ளது. என்.டி.ராமராவின் திரை வாழ்வோடு சம்பந்தப்பட்டிருந்தவர் தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா. ஆகவே என்.டி.ராமராவின் வாழ்வை பேசும் போது கூடவே இவர்களின் கேரக்டர்களும் சேர்ந்துள்ளது. ஒரே படத்தில் இரு மாநில முதல்வர்கள் வாழ்வு இணைய இருப்பதால் இப்படத்திற்கு மாநிலம் தாண்டிய மரியாதை கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் கேரக்டருக்கு காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தான் தொடங்கியுள்ளது. எந்தளவுக்கு அவர் தன் வேடத்தை நிறைவாக செய்வார் என்பது படம் வெளியான பின்பே தெரிய வரும். 

பாலிவுட் பக்கம் இப்போது தயாராகி வரும் திரைப்படம் ‘தி ஆக்சிடெண்ட்டல் ப்ரைம் மினிஸ்டர்’. இந்தப் படம் முன்னாள் பிரதமர் மன்மோகன் வாழ்க்கையை காட்சிப்படுத்த இருக்கிறது. காங்கிரஸ் அமோக வெற்றி அடைந்த நேரத்தில் பிரதமராக சோனிகா காந்தி அமர்த்தப்படுவார் என பேச்சுக்கள் வெளியாகின. ராஜீவ் கொலைக்குப் பிறகு சோர்ந்து கிடந்த காங்கிரஸை அவர்தான் எடுத்து நிறுத்தினார். ஆனால் பிரதான எதிர்க்கட்சியான பாஜக உட்பட பலர் அந்நிய தேசத்து பிரஜையான சோனியா பிரதமராகக் கூடாது என்ற கோஷத்தை முன் வைக்க, இறுதி நேரத்தில் களத்தில் அறிமுகமானவர் மன்மோகன் சிங்.

அதன் அடையாளமாகவே ஆக்சிடென்ட் பிரைம் மினிஸ்டர் தலைப்பு படத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலக்கதை சஞ்ஜயா பாரு எழுதிய புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் சோனியா காந்தி கேரக்டரில் ஜெர்மன் நடிகையான சூசன் பெர்னெர்ட் நடிக்க இருக்கிறார். இவர் பிறப்பால் ஜெர்மனியராக இருந்தாலும் அகில் மிஷ்ரா என்ற இந்தியரை மணந்தவர். பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் நடித்து வருபவர். அச்சு அசல் சோனியாவின் முக ஜாடையை பெற்ற இவர் அதற்கு தகுதியான நடிகையாக பார்க்கப்படுகிறார். அனுபம் கெர், மன்மோகன் சிங்காக நடிக்கிறார். பெங்காலி, மராத்தி, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தை விஜய் கட்டே இயக்குகிறார். 

2ஜி ஊழல் புகார்களினால் ஆட்சியை இழந்தவர் மன்மோகன். ஆகவே அப்படத்தில் அவர் காலத்தில் நிலவிய பல ஊழல் புகார்கள் குறித்தும் பேசப்படலாம் என கூறப்படுகிறது. அதனால் அப்படம் வெளியீடு குறித்த ஆர்வம் மிகுந்துள்ளது. இப்படம் டிசம்பர் 21 அன்று திரைக்கு வர உள்ளதாக படக்குழு குறிப்பிட்டுள்ளது. 

ஒருசில ஆண்டுகள் முன்பு சோனியாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து ஒரு படம் வெளியாக உள்ளதாக தகவல் பரவியது. அதன்படி ஒரு நடிகையும் அதற்கு தேர்வாகி இருந்தார். அப்பாத்திரத்திற்கு தேர்வானவர் ஒரு கவர்ச்சி நடிகை என்பதால் பல சர்ச்சைகள் எழுந்தன. ஆனால் அதன்பிறகு அப்படம் என்ன ஆனது என்பது குறித்து தெரியவில்லை. 

ஆக, ஒரு சில ஆண்டுகளாகவே சினிமாவில் அரசியல் தலைவர்களின் வாழ்க்கையை பின்புலமாகக் கொண்ட ‘பயோபிக்’ கலாச்சாரம் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்தப்பட்டியலில் மேலும் பல தலைவர்கள் விரைவில் இணையலாம். அதற்கு தகுந்த மாதிரி அரசியல் வட்டாரத்தில் அனல் அதிகரிக்கும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com