எகிற வைக்கும் எதிர்பார்ப்புகள்- முதல்முறையாக கேப்டன்களாக களமிறங்கும் 4 வீரர்கள் #IPL2022

எகிற வைக்கும் எதிர்பார்ப்புகள்- முதல்முறையாக கேப்டன்களாக களமிறங்கும் 4 வீரர்கள் #IPL2022
எகிற வைக்கும் எதிர்பார்ப்புகள்- முதல்முறையாக கேப்டன்களாக களமிறங்கும் 4 வீரர்கள் #IPL2022

15-வது ஐபிஎல் சீசனில் முதல்முறையாக ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா, மயங்க் அகர்வால், டூ பிளெசிஸ் ஆகிய 4 வீரர்கள், கேப்டன்களாக களமிறங்க உள்ளனர்.

2022-ம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் டி20 போட்டியின் 15-வது சீசன் நாளை முதல் துவங்க உள்ளது. இந்த வருடம், அகமதாபாத், லக்னோ ஆகிய 2 புதிய அணிகள் சேர்த்து மொத்தம் 10 அணிகள் இந்த ஐபிஎல் போட்டியில் களமிறங்கவுள்ளன. இந்த 10 அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 சூப்பர் லீக் போட்டிகளில் பங்கேற்க உள்ளன.

இதனால் போட்டியின் சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாதநிலையில், இந்த ஐபிஎல் போட்டியில், முதல்முறையாக ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா, மயங்க் அகர்வால், டூ பிளெசிஸ் ஆகிய 4 வீரர்கள், கேப்டன்களாக களமிறங்க உள்ளனர். இந்த 4 கேப்டன்களும் அனுபமிக்க வீரர்களாக இருந்தபோதிலும், ஐபிஎல் போட்டியில் கேப்டனாக அறிமுகமாவது இதுவே முதல்முறை என்பதால், நிச்சயம் மிகப்பெரிய சவால்களை சந்தித்து, தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த 4 அறிமுக கேப்டன்கள் பற்றி சிறு தொகுப்பைக் காணலாம்.

ரவீந்திர ஜடேஜா (சென்னை சூப்பர் கிங்ஸ்)

‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் துவங்கிய கடந்த 2008-ம் ஆண்டு முதல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வந்தார். அவருக்கு காயம் ஏற்பட்டபோது, அந்த அணியின் தற்காலிக கேப்டனாக சில போட்டிகளில் மட்டும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் மற்றும் துணைக் கேப்டனாக இருந்த சுரேஷ் ரெய்னா கேப்டனாக இருந்தார்.

இந்நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய அங்கமான ஜடேஜா, தற்போது கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். அடுத்த ஆண்டும் தோனி வீரராக களமிறங்குவார் என்று அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். இதனால், வரும் இரண்டு ஐபிஎல் போட்டிகளில், ஜடேஜா அணியை வழிநடத்த தோனி உதவினாலும், நிறைய சவால்கள் காத்திருக்கவே செய்கின்றன.

ஏலத்திற்கு முன்னதாக 16 கோடி ரூபாய்க்கு சென்னை அணியால் ஜடேஜா தக்கவைக்கப்பட்டுள்ளார். அனுபவம் நிறைந்த முன்னாள் வீரர்கள் டூ பிளெசிஸ், சுரேஷ் ரெய்னா, காயம் காரணமாக விலகிய தீபக் சாஹர் ஆகியோர் இல்லாதநிலையில், புதிதாக எடுக்கப்பட்ட வீரர்களை, திறமையாக கையாண்டு அணியை வெற்றிபாதையில் வழிநடத்தி செல்ல வேண்டிய கட்டாயத்தில் ஜடேஜா உள்ளார். எனினும், ஆல்ரவுண்டராக உள்ள ஜடேஜா, பேட்டிங் மற்றும் பவுலிங்கில் இந்திய அணியில் சர்வதேச அளவில் சாதித்து வருவதால், அந்த அனுபவம் மற்றும் நுட்பங்கள் கை கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

டூ பிளெசிஸ் (பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்)

சுமார் ஒன்பது ஆண்டுகளாக பெங்களூரு அணிக்கு கேப்டனாக இருந்த விராட் கோலி, ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வென்றதில்லை. இதனால் விராட் கோலி பதவி விலக, சென்னை அணியின் ஆஸ்தான துவக்க வீரராக இருந்த டூ பிளெசிஸை, 7 கோடி ரூபாய்க்கு கடும் போட்டிகளுக்கிடையே ஏலத்தில் எடுத்து, கேப்டனாக நியமித்தது பெங்களூரு அணி.

ஏற்கனவே தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் என்ற அனுபவமும், தோனியின் தலைமையின் கீழ் நீண்ட காலமாக இருந்த அனுபமும், டூ பிளெசிஸிக்கு கை கொடுக்கும் என்றே கூறலாம். அத்துடன், நீண்ட காலமாக பெங்களூரு அணியின் கேப்டனாக இதுவரை இருந்த விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல் போன்ற சீனியர் வீரர், ஹர்ஷல் படேல், ஹசரங்கா ஆகியோர் உள்ளதால், மற்ற அணிகளை எளிதில் டூ பிளெசிஸால் சமாளிக்க முடியும் என்று நம்புகிறது பெங்களூரு அணி நிர்வாகம்.

தோனியின் கூடவே ஐபிஎல் போட்டிகளில் சில ஆண்டுகளாக விளையாடி வந்தநிலையில், போட்டிகளில் தோனியின் மூளை எப்படி செயல்படும் என்பதால், தனக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். 37 வயதான டூ பிளசிஸ் ஐபிஎல் தொடரில் இதுவரை 100 போட்டிகளில் விளையாடி 2935 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த சீசனில் சென்னை அணிக்காக 633 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

ஹர்திக் பாண்ட்யா (குஜராத் டைட்டன்ஸ்)

இந்திய அணி மற்றும் ஐபிஎல் போட்டிகளில் அனுபமிக்க ஆல் ரவுண்டராக வலம் வருபவர் ஹர்திக் பாண்ட்யா. ஆனால் இதுவரை ஐபிஎல் தொடரில் எந்த அணிக்கும் கேப்டனாக இருந்ததில்லை. காயம் காரணமாக பவுலிங் செய்யாமல், பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்தியதாலே, இந்திய அணியில் பல மாதங்களாக ஆடும் லெவனில் சேர்க்கப்படாமல் தவிர்க்கப்பட்டுவந்தநிலையில், முதல் முறையாக களமிறங்கியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியில், கேப்டனாக அறிமுகமாகிறார் ஹர்திக் பாண்ட்யா.

இந்த ஐபிஎல் போட்டியில் தனது ஆல் ரவுண்டர் திறமையை நிரூபித்தால் மட்டுமே, இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவிற்கு இடம் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. 28 வயது சீனியர் வீரரான இவரை, குஜராத் டைட்டன்ஸ் அணி, கடந்த மாதம் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் 15 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

மேலும், ஷுப்மன் கில் (ரூ. 8 கோடி), ராகுல் திவாதியா (ரூ. 9 கோடி), மற்றும் லாக்கி பெர்குசன் (ரூ. 10 கோடி) போன்ற திறமையான வீரர்களும் இந்த அணியில் உள்ளதால், ஹர்திக் பாண்ட்யாவிற்கு மற்ற அணிகளை சமாளிப்பதில், இந்த வீரர்கள் உதவியாகவே இருப்பார்கள் எனக் கருதப்படுகிறது. புதிய கேப்டன், புதிய அணி என்பதால், அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவுக்கு கூடுதல் பணிகள் காணப்படுகிறது.

மயங்க் அகர்வால் (பஞ்சாப் கிங்ஸ்)

கடந்த 2018-ம் ஆண்டு முதல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக இருந்து வருகிறார் மயங்க் அகர்வால். துணை கேப்டனாகவும், கடந்த சில சீசனில் சில போட்டிகளில் கேப்டனாகவும் அணியை வழிநடத்திய அனுபவம் அவருக்கு உள்ளதை அடுத்து, தற்போது நிரந்தர கேப்டனாக நியமித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம். 31 வயதான இவர், ரூ. 12 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார்.

கே.எல்.ராகுல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு சென்ற நிலையில், மயங்க் அகர்வால் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். மூத்த வீரர் ஷிகர் தவான் அணியில் இருந்தும் மயங்க் அகர்வால் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதுகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் போது, அவர் கூறியதாவது, “ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ், அணி பட்டத்தை வெல்லும் திறமையான வீரர்களை கொண்ட அணியாக உருவெடுத்து இருப்பதாக நம்புகிறேன். இனி நெருக்கடிக்கு மத்தியில் வீரர்கள் தங்களது முழு திறமை, திட்டமிடலை சரியாக வெளிப்படுத்துவதை பொறுத்து எல்லாம் அமையும்” என்று தெரிவித்திருந்தார்.

பயிற்சியாளராக கும்ப்ளே உள்ளார். மேலும், ஷாருக்கான், ஒடியன் ஸ்மித், ஜானி பேர்ஸ்டோ உள்ளிட்ட வீரர்கள் அணியில் உள்ளனர். ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாத அணிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஒன்று. திறமையான வீரர்கள் இருந்தும், அவர்கள் திறமை வீணடிக்கப்படுவதாக, சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மும்பை வான்கடே மைதானத்தில் நாளை துவங்க உள்ள முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரன்னரான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com