பெண்ணுரிமைக்காக அந்தக் காலத்திலே அடித்து ஆடிய கவி! - பாரதி நினைவு நூற்றாண்டு பகிர்வு

பெண்ணுரிமைக்காக அந்தக் காலத்திலே அடித்து ஆடிய கவி! - பாரதி நினைவு நூற்றாண்டு பகிர்வு
பெண்ணுரிமைக்காக அந்தக் காலத்திலே அடித்து ஆடிய கவி! - பாரதி நினைவு நூற்றாண்டு பகிர்வு

பெண் விடுதலையை மூச்சாக கொண்டவன்; எழுத்தாயுதத்தால் பெண்ணுரிமை வரைந்தவன். ஆணாதிக்க சமூகத்தை எழுத்தாணியால் அறைந்தவன்; பெண்கல்வியும், பொருளாதார சுதந்திரமுமே பெண்விடுதலைக்கான ஊற்றென முழங்கியவன்; பெண்ணடிமைத்தனத்தில் நாறிக்கிடந்த சமூகத்தின் மாணிக்க கல் பாரதி. பாரதியின் நினைவு நூற்றாண்டில் அவர் வலியுறுத்திய பெண்ணுரிமையை மீண்டும் நினைவுகூர்வோம்.

'பாதகம் செய்பவரைக் கண்டால் - நாம் பயங் கொள்ளலாகாது பாப்பா மோதி மிதித்து விடு பாப்பா - அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா' - பாரதியின் முக்கியமான பாடல் வரிகள் இவை. ஒரு பெண் தற்காப்பு ஆயுதத்தை வைத்துக்கொள்வதற்கு இணையானவை இந்த வரிகள். கனல் கக்கும் தன் பாடல்கள் மூலம் பெண்களுக்கு உத்வேகம் அளித்தவன் பாரதி.

"விசாலாட்சி! விசாலாட்சி! நான் இரண்டு நிமிஷங்களுக்கு மேல்
உயிருடன் இருக்க மாட்டேன். என் பிராணன் போகு முன்னர்
உன்னிடம் சில வார்த்தைகள் சொல்லிவிட்டுப் போகிறேன்.
அதை உன் பிராணன் உள்ள வரை மறந்து போகாதே!
முதலாவது, நீ விவாகம் செய்துகொள். விதவா விவாகம்
செய்யத்தக்கது. ஆண்களும் பெண்களும் ஒருங்கே
யமனுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறார்கள். ஆதலால், ஆண்களுக்குப்
பெண்கள் அடிமைகளாய், ஆண்களுக்குப் பெண்கள் அஞ்சி
ஜீவனுள்ள வரை வருந்தி வருந்தி மடிய வேண்டிய அவசியமில்லை.
ஆதலால், நீ ஆண்மக்கள் எழுதி வைத்திருக்கும் நீசத்தனமான சுயநல
சாஸ்திரத்தைக் கிழித்துக் கரியடுப்பிலே போட்டுவிட்டு, தைரியத்துடன்
சென்னைப் பட்டணத்துக்குப் போய் அங்குக் கைம்பெண் விவாகத்துக்கு
உதவி செய்யும் சபையாரைக் கண்டுபிடித்து, அவர்கள் மூலமாக
நல்ல மாப்பிள்ளையைத் தேடி வாழ்க்கைப்படு'' பாரதியின் 'சந்திரிகையின் கதை' யில் இடம்பெறும் வசனம் இது.

''ஆண்மக்கள் எழுதி வைத்திருக்கும் நீசத்தனமான சுயநல சாஸ்திரத்தைக் கிழித்துக் கரியடுப்பிலே'' என பொது சமூகத்தை அலறவிடுகிறார் பாரதி. இதே வசனத்தை இன்று சொன்னாலும் கூட சிலர் சண்டைக்கு வரும் சூழலில், பெண்ணடிமை ஊறிப்போன அந்தக் காலத்திலே அடித்து ஆடுகிறார். பாரதியை சுதந்திர போராட்டதுக்காக எழுத்து வேள்வியை நடத்தியவர் என மட்டும் சுருக்கிவிட முடியாது. பெண்ணுரிமைகளுக்காக பேசிய கவிஞன் பாரதி. அதிலேயே தீர்க்கமாக இருந்தவர். 'பெண்ணைச் சுற்றியிருக்கும் கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பத்தை உடைத்து பற' என்பதைத்தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம்தான் அவர்களின் வாழ்வை மேம்படுத்தும்; யாரையும் சார்ந்து வாழ்வதற்கான தேவை ஏற்படாது என்பதை கதைகளின் வழியே பேசியவர் பாரதி. பெண்களுக்கும் தந்தையர் வழிச்சொத்தில் சமபங்கும், உயர்கல்வி பயிலும் உரிமையும், அரசு அலுவலகப் பணிகளை ஏற்கும் உரிமையும் கொடுக்க வேண்டும் என்று விடாப்பிடியாக வலியுறுத்தியவர்.

விருப்பமில்லாத விவாகமும், குழந்தை திருமணமும் கூடாது என்பதை மட்டும் சொல்லாமல், விவாகத்திற்குப்பின் விரும்பினால் கணவனைவிட்டு விலகவும் அல்லது விவாகமே செய்யாமல், சுயமாகத் தொழில் செய்து கௌரவமாக வாழவும் பெண்களுக்கு உரிமை தர வேண்டும் என குரல்கொடுத்த பாரதியின் நினைவு நூற்றாண்டை மற்ற அனைவரையும் தாண்டி பெண்சக்தியே முதல் வணக்கம் செலுத்த வேண்டும்.

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக்குள்ளே சிலமூடர் - நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்.

கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்தி
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம்
பேதமை யற்றிடும் காணீர்

'பெண்கள் அறிவை வளர்த்தால் இந்த வையகம் பேதைமை அற்றிடும் காணீர்' இன்றளவும் கிராமங்களில் பெண்கல்விக்கான முக்கியத்துவம் பெரிய அளவில் கொடுக்கப்படுவதில்லை என்பதன் மூலம் பாரதியின் அன்றைய பதிவுகளுக்கான தேவை இன்றளவும் நீடிப்பதை உணர முடிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com