கோவாக்சின் தடுப்பூசி விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்திய பிரேசில்: பின்னணி என்ன?

கோவாக்சின் தடுப்பூசி விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்திய பிரேசில்: பின்னணி என்ன?
கோவாக்சின் தடுப்பூசி விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்திய பிரேசில்: பின்னணி என்ன?

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சலுடன் இணைந்து, பாரத் பயோடெக் உருவாக்கிய இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி, விரைவில் உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து ஒப்புதல் பெற உள்ளது. ஜூலை மாதத்தில், இந்த ஒப்புதல் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், பிரேசிலில் கோவாக்சின் கொள்முதல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும், ஒன்றொக்கொன்று தொடர்புடையதா, எனில் அது என்ன என்பது பற்றி, இங்கு விரிவாக காணலாம்.

இதற்காக கடந்த ஜூன் 23ம் தேதி, கோவாக்சினை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம், உலக சுகாதார நிறுவன குழுவை சந்தித்தது. இந்த சந்திப்பு, சான்றுகளை சமர்ப்பிக்கும் முன்பான சந்திப்பாக அமைந்தது. 

காரணம், கோவாக்சினின் பாரத் பயாடெக் நிறுவனம் மட்டுமே தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் தரவுகளை சமர்ப்பிக்காமல் இருந்தனர். கோவாக்சினுக்கான தரவுகள் - ஆவணங்களில் 90 % தரவுகள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாக சொல்லப்பட்டது. தற்பொழுது, மீதமுள்ள 10 % விரைவில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாகவும், அவை சமர்ப்பிக்கப்படால், அடுத்தடுத்த தினங்கள் / வாரத்தில் அனுமதி கிடைத்துவிடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அனுமதி கிடைக்கும்பட்சத்தில், இந்தியாவில் கோவாக்சின் விநியோகம் வேகமெடுக்கும்.

உலக சுகாதார நிறுவனத்தின் இந்த அனுமதி, ஜூலை - செப்டம்பர் 2021 க்குள் கிடைத்துவிடுமென, பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த மே மாதத்திலேயே நம்பிக்கை தெரிவித்தது. இதற்கான பணிகள் தற்போது மும்மரமாக நடந்துவருவதாகவும், விரைவில் கோவாக்சினுக்கு இந்த அனுமதி கிடைக்குமென்றும் நிதி ஆயோக்கின் உறுப்பினர், மருத்துவர் வி.கே.பால் சில தினங்களுக்கு முன் கூறியிருந்தார்.

கோவாக்சின் ஒப்பந்த செய்திகள் வெளியாகிவரும் இதேநேரத்தில், 2 கோடி கோவாக்சின் டோஸ்களை பாரத் பயாடெக்கிடமிருந்து வாங்குவதாக பிரேசில் அரசு போட்டிருந்த ஒப்பந்தம் தற்போது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சர் மார்சிலா கூறியுள்ளார். இது, கோவாக்சின் மீதான நம்பிக்கையின்மையை காட்டுவதாக விமர்சனம் எழுந்தது. குறிப்பாக, உலக சுகாதார நிறுவனத்திடம் அனுமதி பெறாமல் இருப்பதுகூட பிரேசிலின் முடிவுக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என சர்ச்சைகள் எழுந்தது. ஆனால் நிதர்சனத்தில், இப்பிரச்னைக்கு அடித்தளமாக இருந்தது, பிரேசிலின் உள்நாட்டு சர்ச்சைதான்.

பிரேசிலில், ஸ்புட்னிக் வி தடுப்பூசி கொள்முதலைவிடவும், கோவாக்சின் தடுப்பூசிக்கான கொள்முதல் மிகவும் அதிகமாக இருந்துள்ளது. ஆகவே அந்நாட்டு எதிர்க்கட்சிகள், ‘அதிக தொகை கொடுத்து, கோவாக்சின் இறக்குமதி செய்ய, பிரேசில் அதிபரின் ஊழல் முறைகேடுகள்தான் பின்னணி’ என அந்நாட்டு மக்கள் மன்றத்தில் குரல் எழுப்பியது. குறிப்பாக “பிரேசில் அரசுக்கும் – பாரத் பயோடெக் நிறுவனத்துக்கும் இடைத்தரகராக செயல்படும், பிரேசிலின் பிரெகிசா மெடிகா மென்டோஸ் நிறுவனம், இந்த கொள்முதலின் பின்னணியில், லாபம் ஈட்டியுள்ளது” என்றார்கள் பிரேசிலின் எதிர்க்கட்சியினர்.

விவகாரம் பூதாகரமானதை தொடர்ந்து, அங்கு கொள்முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்தார்.

இவ்விமர்சனங்களுக்கு, பாரத் பயோடெக் இன்று விளக்கமளித்தது. அதில், “பிரேசிலுக்கான எங்கள் தடுப்பூசி விநியோகத்தில், முறைகேடு எதுவும் நடக்கவில்லை. அந்நாட்டு சுகாதார அமைச்சருடனான எங்களின் முதல் சந்திப்பு, நவம்பர் 2020 ல் நடந்தது. பின்னர் எட்டு மாத நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகுதான் ஒப்பந்தமே போடப்பட்டது.

விலையை பொறுத்தவரை, இந்தியாவுக்கு மட்டுமே குறைந்த விலையை நிர்ணயித்துள்ளோம். பிற நாடுகளுக்கு, சந்தை விலை அடிப்படையில்தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்தவகையில், பிற நாடுகளில், 15 – 20 டாலர் வரை ஒரு டோஸ் கோவாக்சின் விற்பனை செய்யப்படுகிறது. பிரேசிலில், இது 15 டாலராக தரப்படுமென ஒப்பந்தமிட்டிருந்தோம்.

உலகளாவிய தடுப்பூசி ஒப்பந்த அடிப்படையில், நாங்கள் செயல்பட்டுவருகிறோம் என்பதால் பிரேசிலிடம் இருந்து, நேற்றைய தினம் வரை (ஜூன் 29) முன்பணம் எதுவும் நாங்கள் இதுவரை பெறவில்லை. ஒப்பந்தம் மட்டுமே போடப்பட்டிருந்தது.

கோவாக்சின், பிரேசில் – இந்தியா – பிலிப்பைன்ஸ் – ஈரான் – மெக்சிகோ உட்பட 16 நாடுகளில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி பெற்றுள்ளது. இதில், பிரேசிலிடம் அனுமதி பெற்றது, ஜூன் 4, 2021ல்தான்” எனக்கூறப்பட்டுள்ளது.

பிரேசிலில், ஊழல் விவகாரமாக இது முன்மொழியப்பட்டிருப்பதால், அங்கு நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 324 மில்லியன் டாலருக்கு, பிரேசிலின் ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஆக, இந்த விவகாரத்தில், கோவாக்சின் மீதான நம்பிக்கையின்மை தேவையில்லாத பார்வையாகவே இருக்கிறது. இன்று உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா திரிபுகளான ஆல்பா மற்றும் டெல்டா வகைகளைகூட கோவாக்சின் திறம்பட எதிர்க்கிறது என அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்திருப்பதே, அதன்மீதான நம்பகத்தன்மைக்கு மிகச்சிறந்த சான்றாக பார்க்கப்படுகிறது. விரைவில், கோவாக்சின் உலக சுகாதார நிறுவனத்திடமிருந்தும், அனுமதியை பெறும் என்பதால், நம்பகத்தன்மை மீதான கேள்விகளுக்கான வேளை, இது அல்ல.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com