சம்மர் Vacation போறீங்களா? அப்போ இந்த 5 இடங்களை கண்டிப்பா மிஸ் பண்ணாதீங்க!

கோடை வெயிலின் உக்கிரத்தில் இருந்து தப்பிக்க Vacation போறீங்களா? உங்களுக்கான சில சஜஷன்ஸ், இங்கே...
munnar
munnarFile Photo

தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதில் ‘இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட 3 டிகிரி வரை அதிகமாக இருக்கும்’ என்ற வானிலை மையத்தின் அறிவிப்பு வேறுவந்ததால், மக்களை கதிகலங்கத்தான் போயிருக்கிறார்கள். இந்த கோடை வெயிலின் உக்கிரத்தில் இருந்து தப்பிக்க, உங்களில் பலரும் குளிரான பகுதிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு வரக்கூடும். அப்படி இந்த வெயில் காலத்தை நீங்கள் குளுகுளுவென கழிக்க, சில வாவ் இடங்கள், இங்கே:

1. மூணாறு

வாட்டி வதைக்கும் வெயில் மற்றும் கோடையிலிருந்து தப்பிக்க, ஏற்ற இடம் மூணாறு! தென்னிந்தியாவின் காஷ்மீர் என அழைக்கப்படும் மூணாறை முழுவதும் சுற்றிப் பார்க்க குறைந்தது மூன்று நாட்களாவது தேவை.

மூணாறு
மூணாறு

இரவிகுளம் தேசியப் பூங்கா, மாட்டுப்பட்டி டேம், நியமக்கடா எஸ்டேட், எக்கோ பாயிண்ட், யானைச் சவாரி, வொண்டர் வேலி அட்வெஞ்சர் தீம் பார்க், ரோஸ் கார்டன், டாட்டா டீ மியூஸியம், ராக் கேவ் ஆகியவை மூணாறில் தவறவிடக்கூடாத இடங்கள்.

2. ஊட்டி

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி, சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இயற்கை எழில் நிறைந்தும், எண்ணற்ற சுற்றுலா தலங்களையும் உள்ளடக்கிய ஊட்டி, தமிழக மக்களால் அதிகம் விரும்பப்படும் இடங்களில்  ஒன்றாக உள்ளது. கொளுத்தும்  வெயிலில் இருந்து குளு குளு சீசனை அனுபவிக்கவும், இதமான காலநிலையை தேடியும் ஊட்டிக்கு தாராளமாக சுற்றுலா செல்லலாம். தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம், சிம்ஸ்பூங்கா, நேரு பூங்கா, பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், ஊட்டி படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கலாம்.

ஊட்டி
ஊட்டி

கோடை சீசனையொட்டி அடுத்த மாதம் மலர் கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் ஊட்டியில் நடைபெற உள்ளன. ஊட்டி, குன்னூரில் சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு, முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சென்று யானை சவாரி, வாகன சவாரி செய்யலாம். வளர்ப்பு யானைகள் முகாமுக்கு சென்று, வளர்ப்பு யானைகளை பார்வையிட்டு அதனுடன் செல்ஃபி எடுத்து மகிழலாம். கோடை சீசன் தொடங்கியதையொட்டி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்படுகிறது. ஊட்டிக்கு சென்றால் தவறவிடக்கூடாத பயணம் அது. ரயிலில் செல்லும் போது, இயற்கை காடுகளின் அழகு, அங்கு வாழும் வனவிலங்குகள், நீர்வீழ்ச்சிகளை பார்த்தபடியே பயணிக்கும் அனுபவம் நம்மை குளுகுளுவென மாற்றிவிடும்!

3. கூர்க்

மாசுபடாத இயற்கையை அப்படியே அனுபவிக்க ஏற்ற பசுமை வழியும் மலைப்பகுதி கூர்க். இது கர்நாடகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. பசுமை மாறாக் காடுகள், பொங்கி வழியும் நீர்வீழ்ச்சிகள், ஓடைகள், ஆறுகள் என பல அழகை போர்த்தியிருக்கும் காபி, டீ எஸ்டேட்கள் நிச்சயம் உங்கள் மனம் மயக்கும். காவிரி உற்பத்தியாகுமிடமும் இதற்கு அருகில் தான் உள்ளது. அதை நிச்சயம் பாருங்கள்!

கூர்க்
கூர்க்

இரவு கேம்பிங், டிரெக்கிங், ராப்டிங் என சாகச பொழுதுபோக்குகளும் விளையாட்டுகளும் உண்டு. அப்பே அருவி, இருப்பு அருவி, நாம்ட்ரோலிங் நியிங்மாபா பெளத்த மடம், கோல்டன் டெம்பிள் ஆகியவை அருகிலுள்ள சுற்றுலா இடங்கள். ஆண்டு முழுவதும் கண்டுகளிக்கக்கூடிய இடம் இது.

4. கொடைக்கானல்:

சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு பெரிதாக அறிமுகம் தேவையில்லை. ‘மலைகளின் இளவரசி’யாக இன்றளவும் இயற்கை ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறாள் கொடைக்கானலில். எத்தனை முறை சென்றாலும் ஒவ்வொரு முறையும் புதிய அனுபவம் தரும் இடம். அதுதான் கொடைக்கானலின் அடையாளம்.

கொடைக்கானல் ஏரி, பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், பியர் ஷோலா நீர்வீழ்ச்சி, தூண் பாறைகள், குணா குகைகள், சில்வர் நீர்வீழ்ச்சி, மதி கெட்டான் சோலை, தொப்பித் தூக்கிப் பாறைகள், குறிஞ்சி ஆண்டவர் கோயில், செட்டியார் பூங்கா என சொக்கவைக்கும் இடங்கள் இங்கு எக்கச்சக்கம்.

கொடைக்கானல்
கொடைக்கானல்

காடுகளால் சூழப்பட்ட பேரிஜம் ஏரி கொடைக்கானலில் இருந்து 21 கி.மீ. தள்ளி உள்ளது. ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய இயற்கை நன்னீர் ஏரியான இது, அவசியம் காண வேண்டிய இடம்.  அதேபோல், உங்கள் வாழ்கையில் கண்டிராத ஆச்சரியத்தை கோக்கர்ஸ் நடையின்போது பார்ப்பீர்கள். தழுவிச்செல்லும் மேகக்கூட்டங்களுக்கு நடுவே நடந்து செல்கையில் கீழே உள்ள சமவெளிகள், அவ்வுளவு ரம்மியமாக காட்சி தரும். மேலும், கொடைக்கானல் சோலார் ஆய்வகத்தின் மூலம் நட்சத்திரம் சூழ்ந்த இரவு நேர வானத்தை டெலஸ்கோப் வழியாக நீங்கள் பார்த்து ரசிக்கலாம். கோடைக்காலத்தில் இதமாகவும் பொலிவாகவும் வீற்றிருக்கும் கொடைக்கானல், ஒரு ரம்மியமான இடத்திற்கு சுற்றுலா சென்று வந்த திருப்தியை நிச்சயம் அளிக்கும்

5. லடாக்

பயணப் பிரியர்களின் கனவு தேசமாக உள்ள இடம்தான் லடாக். அதேபோன்று தென் மாநிலங்களில் கோடை வெயில் உக்கிரமாகும் போது மக்கள் வடமாநிலங்களை நோக்கி சுற்றுலாவுக்கு செல்லக்கூடிய ஒரு முக்கிய இடமாகவும் இது உள்ளது. வானுயர்ந்த மலைத் தொடர்களை கொண்ட பகுதியாக இருப்பதால், இங்கு எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.

லடாக்
லடாக்

மேலும் இங்கு நிறைய சாகச விளையாட்டுகள் உண்டு. போலவே திபெத்திய கலாச்சாரத்தை அனுபவிக்கலாம்; ஜான்ஸ்கர் பள்ளத்தாக்கு, பாங்காங் த்சோ ஏரி, சோ மோரிரி மற்றும் ஹெமிஸ் தேசியப் பூங்காவில் உங்களின் கோடை காலத்தை கழிக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com