கொரோனா கால மகத்துவர்: தினமும் 20 மணி நேர சிகிச்சை... மக்கள் மருத்துவரின் மொபைல் கிளினிக்!
கொரோனா காலத்தில் பெங்களூரு நகர மக்களின் உடல்நிலையை கவனிக்கும் பொறுப்பில் ஒரு மருத்துவர் சுழன்று கொண்டிருக்கிறார். தனது மொபைல் கிளினிக் மூலம், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் முதல் சாதாரண நோயாளிகள் வரை பலருக்கும் சிகிச்சை அளித்து வருகிறார்.
பெங்களூரைச் சேர்ந்த மருத்துவர் சுனில் குமார் ஹெப்பி. இவரது வாழ்க்கையின் ஒரு நாள், மற்ற மருத்துவர்களின் வாழ்க்கையை விட சற்று வித்தியாசமானது. தற்போது நிலவும் கொரோனா நிலைமையைப் பொருட்படுத்தாமல், டாக்டர் ஹெப்பி தனது மொபைல் கிளினிக்கில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக பெங்களூர் நகரைச் சுற்றி வருகிறார். கொரோனா பாதித்தவர்கள், பாதிக்காதவர்கள் என எல்லோருக்கும் சிகிச்சை அளிக்கும் அவர் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வேலை செய்கிறார்.
புருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே (பிபிஎம்பி) கோவிட் கிளினிக்கில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார் ஹெப்பி. அதனடிப்படையில் தனது இரவு ஷிஃப்டை (இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை) முடித்த பிறகு, இரண்டு மணி நேர இடைவெளி எடுத்துக்கொள்கிறார். அதன்பின் காலை 10 மணியளவில், பெங்களூரு நகரம் முழுவதும் பயணம் செய்ய தயாராக இருக்கிறார். தனியாக தங்கியிருக்கும் அல்லது மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத நோயாளிகளுக்கு - மூத்த குடிமக்கள் அல்லது லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களுக்கு உதவ நகர் முழுவதும் தனது மொபைல் கிளினிக்கில் செல்கிறார்.
11 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மொபைல் கிளினிக் சேவையைத் தொடங்கினார் ஹெப்பி. கொரோனா தொற்றுநோய் ஏற்படுத்துவதற்குமுன் வார இறுதி நாட்களில் மட்டும் மருத்துவ பராமரிப்பு தேவைப்படும் மக்களுக்கு உதவுவதற்காக இந்த மொபைல் கிளினிக் சேவையை நடத்திவந்தார். ஆனால், கொரோனா அதன்பின் போடப்பட்ட லாக் டவுனுக்கு பிறகு, அவரிடம் மருத்துவ உதவி கேட்டு வரும் அழைப்புகள் அதிகரிக்கத் தொடங்கியது. இதுவே மொபைல் கிளினிக் சேவையை அனைத்து நாட்களிலும் செயல்படும் அளவுக்கு வந்தது. கிளினிக்கின் வேலை நேரத்தை அதிகரித்த ஒரு மாதத்திற்குள், அவர் 250 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடிந்தது.
இவர் இந்த மொபைல் கிளினிக் ஆரம்பிக்க உத்வேகம் கொடுத்தது ஒரு சம்பவம்தான். அவரின் குடும்பத்தினர் மருத்துவ அவசர நிலைகளுக்கு வரும்போது சிரமங்களை எதிர்கொண்டனர். விஜயபுரா மாவட்டத்தில் உள்ள நமதாபுரத்தின் சிறிய குக்கிராமத்தில்தான் இவர்களின் குடும்பம் வசித்து வந்தது. இங்கு எந்த மருத்துவமனையும் மருத்துவ வசதிகளும் இல்லை. மருத்துவ வசதி வேண்டும் என்றால், 50 கிலோ மீட்டர் தாண்டி இருக்கும் ஆரம்ப சுகாதார மையத்துக்குச் செல்ல வேண்டும்.
"எனது பெற்றோர் அல்லது எனது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மருத்துவ சேவையைப் பெறுவதற்கு முன்பு பல கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டியிருந்தது. ஏனென்றால் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையம் கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அவசர காலகட்டங்களில் அங்கு செல்வது கடினமாக இருந்தது" எனப் பேசும் ஹெப்பிக்கு இது மட்டும் கிளினிக் தொடங்க ஊக்கம் தரவில்லை. 2010-இல் ஒருநாள் ஹெப்பி ஓசூர் - சென்னை நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது, சாலையில் ஒரு விபத்து ஏற்பட்டிருப்பதை கண்டார். அப்போது விபத்துக்குள்ளானவர்களுக்கு முதலுதவி அளித்து அவரே அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவர்களை கொண்டு சென்றார்.
இந்த விபத்து நடந்த ஒரு நாள் கழித்து பாதிக்கப்பட்டவரின் தாய் ஹெப்பியை அழைத்து, தனது ஒரே குழந்தையை காப்பாற்றியதற்கு நன்றி தெரிவித்தபோது, `வேறு எந்த மருத்துவர் அல்லது குடிமகனும் செய்ததைப் போலவே நான் எனது கடமையைச் செய்தேன்' என்று கூறியிருக்கிறார். இந்த தருணத்தில் தான் அவசர உதவிகளுக்காக இந்த மொபைல் கிளினிக் ஐடியா தோன்ற அதன்பின் அதை செயல்படுத்தி இருக்கிறார்.
இது தொடர்பாக 'தி பிரின்ட்' செய்தித் தளத்திடம் பேசிய அவர், ``கடந்த 13 ஆண்டுகளில், பெங்களூரு முழுவதும் எங்களிடம் 90,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று உள்ளனர். மருந்துகள், ஒரு குளுக்கோமீட்டர், ஆக்ஸிஜன் டேங்க், பிபி மானிட்டர், ஈ.சி.ஜி இயந்திரம் போன்ற உபகரணங்களை எப்போதும் என் காரில் கொண்டு செல்கிறேன்" என்று கூறும் அவர், டாக்டர் ஹெப்பியை நோயாளிகள் வாட்ஸ்அப் அல்லது பேஸ்புக் மூலம் அணுகுகிறார்கள்.