வாழையடி வாழையாய் வாழ... வாழையின் இந்த நன்மைகளையெல்லாம் தெரிஞ்சுகோங்க!

வாழையடி வாழையாய் வாழ... வாழையின் இந்த நன்மைகளையெல்லாம் தெரிஞ்சுகோங்க!
வாழையடி வாழையாய் வாழ... வாழையின் இந்த நன்மைகளையெல்லாம் தெரிஞ்சுகோங்க!

வாழையடி வாழையாய் வாழ் என்று நம் ஊரில் பழமொழியொன்று உள்ளது. எதுக்கு இந்த பழமொழியை சொல்கிறோம் என்று உங்களுக்குத் தோன்றலாம். விஷயம் இருக்கிறது.

இன்று நாம் நாகரீகம் என்ற பெயரில் பல நல்ல விஷயங்களை மறந்து வருகிறோம். சொல்லப்போனால் நமது கலாசாரம், நாகரீகம் என்ற பெயரில் நசுங்கி வருகிறது. அதில் ஒன்று தான் வாழை இலை உணவு. நகர்புறங்களில் இருக்கும் உணவு மையங்களில் வாழை இலை என்ற ஒரு கலாசாரம் அழிந்து வருகிறது. உணவு மையங்களில் முக்கிய பிரதானமாக இருப்பது எவர்சில்வர் பிளேட்டுகளும் பிளாஸ்டிக் பிளேட்டுகளும், அலுமினிய பொட்டலங்களும் தான். நிச்சயமாக இது செலவு குறைப்பதற்காக வழிமுறையாக இருந்தாலும், இதன் மூலம் நாம் பலநோய்களை இலவசமாகப் பெருகிறோம் என்பது தான் உண்மை.

கிராமப்புரங்களில் விருந்தாளிகள் வருகிறார்கள் என்று தெரிந்ததும் வாழை இலைகள் தான் அவர்களின் விருந்தோம்பலில் முக்கிய ஒன்றாக இருக்கும். வாழை இலையை விரித்து அதில் நமக்கு பிடித்த உணவை சூடாக பரிமாறும் பொழுது உணவின் மணமும் வாழைஇலையின் மணமும் ... அடடா.... நினைக்கும் பொழுதே நாவில் நீர் ஊறுகிறது. சரி சாப்பிட்டு முடித்தாயிற்று என்றால், நாம் சாப்பிட்ட இலையானது மாடு போன்ற வேறொரு உயிரிணத்திற்கு உணவாகவும் பயன்படுகிறது. ஆக ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

நீண்ட தூர பிரயாணத்தில் வீடுகளிலிருந்து வாழையிலையில் உணவை கட்டி வழிதடத்திற்கு எடுத்துச்சென்ற காலங்களும் உண்டு. அவ்வாறு கட்டி கொண்டு செல்லும் உணவானது, நீண்ட நேரத்திற்கு கெடாமல் இருப்பதுடன், உணவின் ருசியும் அதிகரிக்கிறது. இதை தவிர, வாழை இலையில் மடித்து தரும் பூக்கள் கூட நீண்ட நேரத்திற்கு தன்நிலை மாறாமல், மணத்துடன் இருக்கும், வாழை இலையில் மருத்துவ குணம் அதிகம். ஆகவே தோல் நோயாளிகளுக்கு, உடலில் தீக்காயம் பட்டவர்களுக்கு வாழை இலையைக்கொண்டு முதலுதவி சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

வாழை இலையின் நன்மைகள்:

மந்தம், அழல் எனப்படும் பித்தமும் தணியும். இளநரையை தடுக்கும். வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்), உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும்.

சரி வாழை இலை தான் மருத்துவ குணம் என்று வைத்துக்கொண்டால் , வாழைத்தண்டு, வாழைப்பூ, மற்றும் வாழைப்பழத்தின் மருத்துவ குணத்தின் நன்மைகளும் அலாதி தான். இதன் நன்மைகளையும் சுறுக்கமாக பார்த்துவிடலாம்

வாழைத்தண்டு:

வாழைத்தண்டில் அதிக நார் சத்து உள்ளதால், தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும். வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. கோடை காலத்தில் இதை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொண்டால், நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவற்றை தவிர்க்கலாம். மேலும், இதன் ஜூஸானது சிறுநீரக கற்கள் விரைவில் கரைக்கவும், சர்க்கரை மற்றும் கொழுப்பை உடனடியாக ரத்தத்தில் கலப்பதையும் தடுக்கும்.

வாழைப்பூ:

வயிறு சம்பந்தமான எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. வாரத்துக்கு மூன்று முறை இதை அருந்திவர, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மூலக்கடுப்பு, சீதபேதி, மலச்சிக்கல், வாய்ப்புண், செரியாமை, இரத்த மூலம் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும். பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகளை சரி செய்வதற்கு வாழைப்பூ மிகவும் பயன்படுகிறது. வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். அஜீரணம் கோளாறுகள் சரியாகும்.

வாழைப்பழம்:

இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. தொடர்ந்து பழுத்த வாழைப்பழம் சாப்பிட்டுவருவது ரூமட்டாய்டு ஆர்த்தரைடீஸ், மன அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வரும் வாய்ப்புகளைக் குறைக்கிறது.

இன்றைய நாட்களில் பெரியவர்களுக்கும் மட்டும் அல்லாது சிறுவர்களுக்கும் இதய நோய் வருவதை காணமுடிகிறது இதை தவிர்க்க... நம்மால் முடிந்த அளவு வீட்டிற்கு ஒரு வாழை வளர்த்து, வாழையடி வாழையாய் வாழலாம். மேலும் உணவு மையங்களில் வாழை இலையின் நன்மையை அறிவுருத்துவோம்.

இத்தகைய உபயோகமான வாழைமரத்தின் அருமை தெரிந்து தான் நம் முன்னோர்கள் நல்ல நாள்களிலும் விஷேஷ தினங்களிலும் வாழை மரத்தை வீட்டு வாசல்களில் அலங்காரமாக கட்டும் பழக்கத்தை கையாண்டு வருகின்றனர்.

ஜெயஸ்ரீ அனந்த்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com