‘அந்த வயதில் நடந்த சம்பவம் என் இல்லறத்தையே பாதித்துவிட்டது’ - மனம் திறந்த இளைஞர்

‘அந்த வயதில் நடந்த சம்பவம் என் இல்லறத்தையே பாதித்துவிட்டது’ - மனம் திறந்த இளைஞர்

‘அந்த வயதில் நடந்த சம்பவம் என் இல்லறத்தையே பாதித்துவிட்டது’ - மனம் திறந்த இளைஞர்
Published on

மேற்குவங்க மாநிலம் மால்டா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் டெல்லியில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். சிறுவனாக இருந்த போது பாலியல் ரீதியாக தனக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமை குறித்து 13 வருடங்களுக்கு பின்னர் அந்த இளைஞர் மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. 

தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து அந்த இளைஞர் விரிவாக பேசியுள்ளார். “அப்பொழுது எனக்கு 15 வயது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட அந்த இரவுகளை பற்றி பேச எனக்கு 13 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. என்னுடைய 28 வயதில், ஒரு வழியாக குற்றவுணர்வில் இருந்து விடுதலை ஆகிவிட்டேன். நான் குற்றம் எதுவும் செய்யவில்லை என்பது இப்பொழுது எனக்கு தெரியும். அதில் நான் பங்கெடுக்கவும் இல்லை, ஊக்குவிக்கவும் இல்லை.

பத்தாம் வகுப்பு முடித்த பின்னர், மதிப்புமிக்க பள்ளி ஒன்றில் சேர்வதற்காக மால்டாவில் இருந்து அலிகாருக்கு சென்றேன். என்னுடைய உயர்கல்விக்கு அதுபோன்ற பள்ளிகளில் படிப்பது உதவியாக இருக்கும் என்று எனது தந்தை நினைத்தார். நுழைவுத் தேர்வுக்கு தயாராவதற்காக அலிகாரில் உள்ள தனியார் விடுதியில் என்னுடைய தந்தை சேர்த்தார். என்னுடைய அறையில் இருந்தவர் 29 வயதான ஆராய்ச்சி மாணவர்(பி.ஹெச்டி). என்னை அவர் நல்ல முறையில் வரவேற்றார். அவர் மட்டும்தான் என் மீது நல்ல கவனம் எடுத்துக் கொண்டார். அதனை பார்த்த என்னுடைய தந்தை அவரை நம்பி படிக்க விட்டுவிட்டு சென்றார். அடுத்த இரண்டு மாதங்கள் நான் கற்பனை செய்து பார்க்காத அளவிற்கு என் வாழ்க்கையை மாற்றிவிட்டது.

ஒருநாள் இரவு என்னுடைய உடலில் ஏதோ நடக்கிறது என்று உணர்ந்து எழுந்தேன். எழுந்து பார்த்தால், என்னுடைய ரூம்மேட் பாலியல் ரீதியாக துன்புறுத்திக் கொண்டிருந்தார் என்பதை கண்டுகொண்டேன். அது பாலியல் துன்புறுத்தல் தான் என்று கூட எனக்கு அப்பொழுது தெரியாது. அவர் என்ன செய்கிறார் என்பது தெரியாமலே நான் அனுமதித்துவிட்டேன். அப்பொழுது எனக்கு தெரிந்தது எல்லாம், நடந்து கொண்டிருந்தது சரியல்ல என்பது மட்டும் தான். சுமார் இரண்டு மாதங்கள், ஒவ்வொரு இரவும் அவர் என்னை பாலியல் துன்புறுத்தல் செய்வார். முதல் சில நாட்கள் போனதும், நானே என்னை திட்டிக் கொள்வேன். இதுகுறித்து வேறு யாரிடமும் நான் புகார் அளிக்கவில்லை. அதன் பிறகு என்னால் சொல்ல முடியாமல் போனது. 

என்னுடைய குடும்பம் தொலைவில் மால்டாவில் இருந்தது. இருப்பினும் என்னுடைய தந்தையிடம் இதுகுறித்து ஏன் சொல்லவில்லை என்று இதுவரை எனக்கு புரியவில்லை.

என்னுடைய ஆறுதலுக்காக மத ரீதியாக புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். பிரார்த்தனைகளையும் செய்தேன். அது எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்தது. ஆனால், சில நேரங்களில் அது மத நம்பிக்கைகளில் அதி தீவிரமான  நிலைக்கும் கொண்டு சென்றது. பின்னர், நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றபின்னர் அந்த தனியார் விடுதியில் இருந்து வெளியேறி பல்கலைக் கழக ஹாஸ்டலுக்கு உடனே சென்றுவிட்டேன். என்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய அந்த நபர் என்னை வெளியேற விடாமல் கடுமையாக தடுத்தார். அவருடன் நான் சண்டையிட்டேன். அன்றிலிருந்து நான் அவரை சந்திக்கவில்லை.

அந்த நேரங்களில் என்னுடைய பாலியல் நிலை குறித்தே எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. இளைஞன் ஆன பின்னர் பல நாட்கள் யோசித்து திருமணம் செய்து கொள்வது தான் இந்த எண்ணங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் என்று முடிவு செய்தேன். ஒரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டேன். பாலியல் குறித்து எனக்கு இருந்த எதிர்மறை எண்ணங்கள், என்னுடைய இல்லற வாழ்க்கையை பாதித்தது. என்னுடைய மனைவியுடன் சகஜமான உறவை வைத்துக் கொள்ள எனக்கு நீண்ட நாட்கள் ஆனது. எனக்குள் என்ன நடந்து கொண்டிருந்தது என்று என்னுடைய மனைவியிடம் சொல்ல முடியவில்லை. என்னுடைய மனைவிதான் என்னை சரிசெய்தார். நீண்ட நாட்கள் காத்திருந்து சகஜமான நிலைக்கு என்னை கொண்டு வந்தார். 

ஒரு வழக்கறிஞராக பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போஸ்கோ) சட்டம் 2012 பற்றி கற்றுக் கொண்ட போது குழந்தைகள் நலன்கள் குறித்து அறிமுகமானது.  போஸ்கோ வழக்குகளுக்காக வாதாடும் ஒரு வழக்கறிஞர் நண்பர், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது குறித்து சொன்னதை தெரிந்து கொள்ளும் வரை எனக்கு நடந்ததை புரிந்து கொள்ளாமல் இருந்தேன். நான் குற்றம் எதுவும் செய்யவில்லை என்பதை அது எனக்கு உணர்த்தியது. முதன்முறையாக, உயிர் பிழைத்து வந்தவன் போல் நான் உணர்ந்தேன். எனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து இரண்டு வழக்கறிஞர் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டேன். அந்தத் தருணம் எனக்கு எப்பொழுதும் ஞாபகத்தில் இருக்கும். பின்னர் என்னுடைய அலுவலகத்திற்கு சென்று அழுதேன். 

தற்போது, பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு சட்ட ரீதியாக உதவுவதற்கு நான் விரும்புகிறேன். அதனால், எனக்கு நேர்ந்ததை வெளிப்படையாக சொல்ல விரும்பினேன். இது என்னுடைய நிலைமையில் இருக்கும் அனைவரும் வெளிப்படையாக பேச வைக்கும்” இவ்வாறு அந்த இளைஞர் பேசியிருந்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com