உப்புமா ஆக 'மாறிய' மாட்டிறைச்சி.. ஏன் இப்படி? - கலாய்க்கப்படும் 'ஷாங்க் சி' தமிழ் டப்பிங்!

உப்புமா ஆக 'மாறிய' மாட்டிறைச்சி.. ஏன் இப்படி? - கலாய்க்கப்படும் 'ஷாங்க் சி' தமிழ் டப்பிங்!
உப்புமா ஆக 'மாறிய' மாட்டிறைச்சி.. ஏன் இப்படி? - கலாய்க்கப்படும் 'ஷாங்க் சி' தமிழ் டப்பிங்!

'ஷாங்க்-சி' ஹாலிவுட் படத்தின் தமிழ் டப்பிங் பதிப்பில் மாட்டிறைச்சி உணவு என்று வரும் வசனத்தை தமிழில் 'உப்புமா' என்று மாற்றப்பட்டதன் காரணத்தை முன்வைத்து நெட்டிசன்கள் கலாய்ப்பையும் விமர்சனத்தையும் முன்வைத்துள்ளனர்.

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் 25-வது படமாக சமீபத்தில் வெளிவந்தது `ஷாங்க்-சி அண்ட் தி லெஜண்ட் ஆஃப் தி டென் ரிங்க்ஸ்'. வெளிவந்த சில நாட்களிலேயே 250 மில்லியன் டாலர் மைல்கல்லைத் தாண்டி வசூல் சாதனை படைத்தது இந்தப் படம். இந்தியாவிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.

தற்போது ஓடிடியில் தமிழ், இந்தி உள்ளிட்ட டப்பிங் பதிப்புகளும் வெளியிட்டப்பட்டுள்ளன. இதில், உணவை குறிப்பிடும்போது மொழிபெயர்க்கப்பட்ட விதம்தான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

`ஷாங்க் சி' படத்தின் ஒரு காட்சியில் விமானத்தில் பறக்கும் நடிகர் சிமு லியுவிடம் விமானப் பணிப்பெண் சாப்பிட என்ன வேண்டும் என்று கேட்பார். அதற்கு படத்தின் ஆங்கிலப் பதிப்பில் மாட்டிறைச்சியை (Beef) ஆர்டர் செய்வார். ஆனால், இதுவே இந்தி பதிப்பில் அசைவத்தை சைவமாக மாற்றியிருப்பார்கள். அதில், மாட்டிறைச்சிக்கு பதிலாக வெஜ் பிரியாணி ஆர்டர் செய்யும் வகையில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு சப்-டைட்டில் இடப்பட்டுள்ளது. அதேபோல், தமிழில் மாட்டிறைச்சிக்குப் பதில் உப்புமா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை நெட்டிசன்கள் தற்போது ட்ரோல் செய்து வருகின்றனர். ரோஹித் என்ற ட்விட்டர் பயனர், ``ஷாங்க் சி படத்தின் இந்த காட்சியில் ஒரிஜினல் பதிப்பில் சொல்லப்பட்டிருக்கும் மாட்டிறைச்சி. இந்தி டப்பிங் பதிப்பில் வெஜ் பிரியாணியாக மாற்றப்பட்டுள்ளது. இது தமிழில் உப்புமாவாகவும், மலையாளத்தில் பிரட் ஆம்லெட் எனவும் மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் மாட்டிறைச்சி அரசியலுக்குள் மார்வெல் ஸ்டுடியோஸை வரவேற்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த பயனர்கள் மராத்தி வெர்சனுக்கு வடபாவ்வும், கேரளாவைச் சேர்ந்தவர்கள் பிரட் ஆம்லெட்டுக்கு பதிலாக ஓணம் பண்டிகையின்போது வைக்கப்படும் சைவ உணவையும், ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் கச்சோரி டிஷ்ஷையும் கேட்டு பதிவிட்டு ட்விட்டரில் அதகளம் செய்து வருகின்றனர். இதனால் `ஷாங்க் சி' படம் ட்ரெண்டிங் ஆகிவருகிறது.

ஒருபக்கம் இந்த சப்-டைட்டில் மொழிபெயர்ப்பு கலாய்க்கப்பட்டாலும், இன்னொரு பக்கம் மாட்டிறைச்சி அரசியலை ஒட்டி விமர்சிக்கப்பட்டும் வருவது கவனிக்கத்தக்கது.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com