ராஜராஜனின் புகழால் ராஜேந்திர சோழனின் பெருமைகள் மறைந்துபோனதா?..பிரமிக்கும் போர் சாதனைகள்!

ராஜராஜனின் புகழால் ராஜேந்திர சோழனின் பெருமைகள் மறைந்துபோனதா?..பிரமிக்கும் போர் சாதனைகள்!
ராஜராஜனின் புகழால் ராஜேந்திர சோழனின் பெருமைகள் மறைந்துபோனதா?..பிரமிக்கும் போர் சாதனைகள்!

சோழப் பேரரசின் தவிர்க்க முடியாத பெயர்! ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் ஒற்றை ஆளாக ஆண்ட சரித்திரப் பெயர்! ராஜேந்திர சோழன்..! பொன்னியின் செல்வனான ராஜராஜ சோழனின் மகன் தான் இவர். ஆனால் தந்தையை விட அதிக போர்களில் வென்று, அதிக நிலப்பரப்பை சோழப் பேரரசின் குடைக்கு கீழ் கொண்டுவந்த சிறப்புக்கு உரியவர். சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்று கூறப்படும் அளவுக்கு புகழ்பெற்றவர். ஆனால் தந்தையை விட சற்று குறைவாகவே தற்போது நினைவு கூறப்படுகிறார். கொண்டாடப்படுகிறார்.

விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய பிற்கால சோழப் பேரரசு ராஜேந்திர சோழன் காலத்தில்தான் அதன் பொற்காலத்தை அடைந்தது. இவர் ஆட்சி செய்த பகுதிகள் தற்போதைய தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகம், கேரளம், தெலுங்கானா, சத்தீஸ்கர், ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளும், தென் கிழக்கு ஆசியா நாடுகளான இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா, கம்போடியா, இந்தோனேசியா, மியான்மர், வங்கதேசம் ஆகியவை ஆகும். முதன்முதலாக கடல்கடந்து அயல்நாட்டிற்கு பெரும்படையை திரட்டிச் சென்று அந்நாட்டை வென்ற முதல் அரசனான ராஜேந்திர சோழனைப் பற்றி அவரது பிறந்த தினமான ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரம் (ஜூலை 26) ஒட்டி நினைவு கூர்வோம்.

வென்ற போர்கள்:

1. சாளுக்கிய படையெடுப்பு:

கி.பி 1012 ஆம் ஆண்டு சாளுக்கிய அரசன் சத்யாச்சிரயனுக்கு எதிரான போரில் ராஜேந்திர சோழன் துங்கபத்திரை ஆற்றைக் கடந்து சாளுக்கிய நாட்டின் தலைநகர் வரை படையெடுத்துச் சென்று வெற்றிபெற்றார்.

2. ஈழத்தின் மீதான படையெடுப்பு:

கி.பி. 1018ல் நடைபெற்ற ஈழப் படையெடுப்பில் ராஜேந்திர சோழன் பெரும் வெற்றி பெற்று ஈழத்தின் முக்கிய இடங்களை கைப்பற்றி சிங்கள பட்டத்து அரசன் ஐந்தாம் மகிந்தா, அரசி, இளவரசி ஆகியோரைச் சிறைப்படுத்திச் சோழ நாட்டிற்குக் கொண்டுவந்தான். சிங்கள அரசன் ஐந்தாம் மஹிந்தா 12 ஆண்டு காலச் சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலேயே இறந்து போனான்.

3. பாண்டியர்கள் மற்றும் சேரர்களுக்கு எதிரான படையெடுப்பு

பாண்டிய மற்றும் சேரர்களின் நிலப்பரப்புகள் ராஜராஜ சோழன் காலத்திலேயே சோழப் பேரரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்த போதிலும், அங்கு பாண்டிய மற்றும் சேர அரச குடும்பத்தினர் அவ்வப்போது கலகம் செய்து வந்தனர். இதை முழுவதுமாக நிறுத்த கி.பி 1018இல் ராஜேந்திர சோழன் இந்த போரை மேற்கொண்டான். இப்போரில் ராஜேந்திரன் பாண்டியர்களுடைய ஒளிபொருந்திய மாசில்லாத முத்துக்களைக் கவர்ந்தான் என்றும் கடுமையான மலைப்பகுதிகளைக் கடந்து சேர மன்னர்களை அழித்தான் என்றும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உறுதி செய்கின்றன.

4. சாளுக்கியர் படையெடுப்பு - 2

மேலைச் சாளுக்கிய மன்னனாக இரண்டாம் ஜெயசிம்மன் பொறுப்பேற்றதும், முந்தைய மன்னன் சத்யாச்சிரயன் இழந்த பகுதிகளை மீண்டும் தன்வசப்படுத்தும் முயற்சியில் இறங்கினான். கீழை சாளுக்கிய தேசமான வேங்கியில் அரசன் விமலாதித்தன் மரணத்திற்கு பின்னர் அவரது மகன்கள் ஏழாம் விஜயாதித்தன் - ராஜராஜ நரேந்திரன் இருவருக்கு இடையே அரியணைப் போர் நிகழ்ந்தது. இப்போரில் ஜெயசிம்மன் ஏழாம் விஜயாதித்தனை ஆதரிக்க, ராஜேந்திர சோழன் தனது தங்கையின் மகனான ராஜராஜ நரேந்திரனுக்கு ஆதரவாக களமிறங்கினான். இதில் ஜெயசிம்மனை துங்கபத்திரை ஆற்றின் கரைக்கு அப்பால் விரட்டி, தனது மகளான அம்மங்கா தேவியை ராஜராஜ நரேந்திரனுக்கு மணமுடித்து கொடுத்து கி.பி. 1022இல் அவனை வேங்கி பகுதியின் அரசனாக அறிவித்தான்.

இருப்பினும் ஜெயசிம்மன் கி.பி. 1031 ஆம் ஆண்டு மீண்டும் வேங்கி மீது படையெடுத்து ஏழாம் விஜயாதித்தனை அரசனாக அறிவித்தான். இதையடுத்து மீண்டும் ஒரு முறை ராஜேந்திரன் வேங்கி மீது படையெடுத்துக் கி.பி.1035இல் விஜயாதித்தனையும், ஜெயசிம்மனின் படைகளையும் துரத்திவிட்டு மீண்டும் தன் மருமகனான ராஜராஜ நரேந்திரனை வேங்கி மன்னனாக அறிவித்தான்.

5. கங்கை படையெடுப்பு:

கி.பி. 1019 ஆம் ஆண்டு ராஜேந்திர சோழன் கங்கை நோக்கிய தனது படையெடுப்பை துவங்கினான். சோழர் படைகள் வங்கதேசத்தின் பால வம்சத்தின் புகழ்பெற்ற மன்னனான மகிபாலனை எதிர்த்து பெரும் வெற்றிபெற்றது. இதையடுத்து ரனசுராவின் படைகளை வென்று, தர்மபாலாவின் நாட்டிற்குள் நுழைந்த சோழப்படைகள், அம்மன்னனையும் வென்று கங்கைக் கரையை அடைந்தன. இதையடுத்து தோல்வியுற்ற மன்னர்கள் மூலமாகவே கங்கை நதியின் நீரைச் சோழநாட்டுக்கு ராஜேந்திரன் கொண்டு வந்தான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. இதனாலேயே ராஜேந்திரன் “கங்கை கொண்ட சோழன்” என்ற பட்டப்பெயரை பெற்றான்.

இராஜேந்திரனின் படைகள் இப்படையெடுப்பில் வென்ற போதிலும், நிரந்தரமான ஆட்சிக்குட்பட்ட நாடுகளாக இராஜேந்திரன் இப்பகுதிகளை சோழநாடுடன் இணைத்துக் கொள்ளவில்லை. சோழர்களின் பலத்தை வட இந்திய மன்னர்களிடம் நிரூபித்துக் காட்டிவிட்டு வரும் முயற்சியாக இந்த கங்கை நோக்கிய படையெடுப்பு பார்க்கப்படுகிறது

6. கடல் கடந்த கடாரம் நோக்கிய படையெடுப்பு:

கி.பி. 1025இல் சோழர்களின் கப்பற்படை சங்கராம விஜயோத்துங்கவர்மன் ஆண்ட ஸ்ரீவிஜயத்தை (தற்போதைய இந்தோனிசியா, மலேசியா - சுருக்கமாக கடாரம்) நோக்கிய போரைத் தொடங்கியது. இரு அரசுகளுக்கும் நெடுநாள் நட்புறவு இருந்த நிலையில், இந்த போர் ஏன் நிகழ்ந்தது என்று உறுதியான தகவல் இன்னும் கிடைக்கவில்லை. இப்போரில் சோழர்படை வலிமையான ஸ்ரீவிஜயத்தின் படையை வீழ்த்திய போதிலும், மீண்டும் சங்கராம விஜயோத்துங்கவர்மன் அரசனாக முடிசூடப்பட்டான். ஆனால் சோழப் பேரரசுக்கு குறிப்பிட்ட அளவு திறை செலுத்த வேண்டும் என்ற கட்டுபாடுடன் இந்த நியமனம் நடைபெற்றதாக கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது. கடாரம் என்று அறியப்பட்ட இப்பகுதியை வென்றதால் ராஜேந்திரனுக்கு “கடாரம் கொண்டான்” என்ற பட்டப்பெயர் வழங்கப்பட்டது.

இத்தனை நிலப்பரப்புகளை வென்ற, இத்தனை அரசர்களை வீழ்த்திய முதலாம் ராஜேந்திர சோழனுக்கு நாளை (ஆடி திருவாதிரை) கொண்டாடப்பட உள்ளது. அவர் நிர்மாணித்த சோழ பேரரசின் புதிய தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தில் விழாவும் நடைபெற உள்ளது! அது சரி., தஞ்சையில் இருந்து ஏன் தலைநகரை கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார்?

நாளை பார்ப்போம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com