'எடியூரப்பா சந்தித்த அதே சோதனை!' - பதவியேற்ற சில நாள்களிலேயே ஆட்டம் காணும் பசவராஜ் பொம்மை
பதவியேற்ற ஒரு மாதம் முடியும் முன்பாகவே சொந்த கட்சியினரிடம் இருந்து சிக்கல்களை எதிர்கொள்ள தொடங்கியிருக்கிறார் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை. இந்த நெருக்கடிகள் என்னென்ன, அதனை சமாளித்து மீதமுள்ள ஆட்சிக்காலத்தை வெற்றிகரமாக பசவராஜ் முடிப்பாரா என்பதை சற்றே விரிவாக பார்க்கலாம்.
நான்கு முறை கர்நாடக முதல்வர், கர்நாடக அரசியலின் மிகப்பெரிய ஆளுமை என வர்ணிக்கப்பட்டு வந்த எடியூரப்பா சில வாரங்கள் முன்பு நிறைய சோதனைகளை எதிர்கொண்டு வந்தார். கர்நாடகாவுக்கே உரித்தான உள்கட்சி அரசியலால் முதல்வர் பதவியை தன்னிடம் ஜூனியராக இருந்த பசவராஜ் பொம்மையிடம் பறிகொடுத்தார். பசவராஜ் பொம்மை 1988-1989-ல் கர்நாடக முதல்வராக இருந்த எஸ்.ஆர்.பொம்மையின் மகன். தந்தை வகித்த பதவிக்கு தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை நினைத்து பசவராஜ் பொம்மையால் சந்தோஷத்தில் இருக்க முடியவில்லை. மேகதாது விவகாரம், மோடி, அமித் ஷா உடன் சந்திப்பு என சுற்றிக்கொண்டிருந்தாலும், அவரின் அமைச்சரவை விவகாரம் அத்தனை சுமூகமாக இல்லை என்கிறது கர்நாடகா வட்டாரம்.
சில வாரங்களாக எடியூரப்பா என்ன துன்பத்தை அனுபவித்தாரோ, அதே நெருக்கடியை இப்போது பசவராஜ் பொம்மையும் சந்திக்க தொடங்கியிருக்கிறார். அமைச்சரவையில் இடம் கிடைக்காத பாஜக எம்எல்ஏக்கள் பசவராஜுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். அப்பாச்சு ரஞ்சன், எஸ்.ஏ.ராமதாஸ், சதீஷ் ரெட்டி, டி. மகாலிங்கப்பா, ரேணுகாச்சார்யா, நரசிம்ம நாயகம், நேஹாரு ஓலேகர், சந்திரசேகர் பாட்டீல் ரெவூர், சுபாஷ் குட்டேடர் என இதற்கு முன்பு பசவராஜ் பொம்மைக்கு ஆதரவாக செயல்பட்டவர்களும், இதற்கு முன் அமைச்சர்களாக இருந்து பதவி நீக்கப்பட்ட சி.பி.யோகேஸ்வரா, ரமேஷ் ஜார்கிஹோலி, ஆர்.சங்கர் மற்றும் ஸ்ரீமந்த் பாட்டில் போன்றவர்களும் முதல்வரை வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
அப்பாச்சு ரஞ்சனின் ஆதரவாளர்கள் பல நாள்களாகவே தங்கள் தலைவருக்கு அமைச்சர் பதவி கேட்டு போராட்டம் நடத்திவரும் நிலையில், ஆகஸ்ட் 10 அன்று, பெங்களூருவில் உள்ள பசவராஜ் பொம்மையின் அரசு இல்லத்தை அதிரடியாக முற்றுகையிட்டு மறியல் செய்தனர். இதற்கு ஒருநாள் முன்னதாக அரசு நிகழ்ச்சிக்காக மைசூரு சென்றிருந்த முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்திக்கவோ, முதல்வராக பதவியேற்றதுக்கு வாழ்த்தவோ இல்லை, பாஜகவின் மூத்த தலைவரும், மைசூரு எம்எல்ஏவுமான எஸ்.ஏ.ராமதாஸ்.
இதனிடையே, மற்றொரு மூத்த தலைவரான சி.பி.யோகேஸ்வரா தனக்கு அமைச்சர் பதவி பறிபோனதில் இருந்து டெல்லியில் இருந்துகொண்டு கட்சி உயர் தலைமையை சந்திக்கப்போவதாக போர்க்கொடி தூக்கியிருக்கிறார். எடியூரப்பா அரசாங்கத்தின் முக்கிய தூணாக இருந்த ரமேஷ் ஜார்க்கிஹோலி அனைத்து அதிருப்தி எம்எல்ஏக்களையும் சந்தித்து பேசத் தொடங்கியிருக்கிறார். இப்படி பசவராஜ் சந்திக்க ஆரம்பித்திருக்கும் இந்தப் பிரச்னைகள் எல்லாம் எடியூரப்பாவின் அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த ஏழு அமைச்சர்கள் தற்போதைய அமைச்சரவை இல்லை என்ற அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே தொடர்ந்து வருகிறது.
ஷங்கர், ஸ்ரீமந்த் போன்றோர்கள் இதில் முக்கியம். இவர்கள்தான் 2019-ல் காங்கிரஸ் - மஜத கூட்டணியை உடைத்து எடியூரப்பா ஆட்சி அமைக்க உதவியர்கள். இவர்கள் ஒருபுறம் என்றால், மறுபுறம் அமைச்சரவையில் இடம் பெற்றவர்களில் பலர் தங்கள் இலாகாக்களில் அதிருப்தி அடைந்துள்ளனர். பசவராஜ் தலைமையில் அமைச்சரவையை விரிவுபடுத்தி ஒரு வாரமே ஆகியிருக்கும். அதற்குள் 29 புதிய அமைச்சர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்கள் தொடர்பாக சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர். சுற்றுச்சூழல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஆனந்த், தனக்கு இந்தப் பதவியில் மகிழ்ச்சி இல்லை என்று வெளிப்படையாக மீடியாக்களிடம் கூறினார்.
இதேபோல், நகராட்சி நிர்வாகம் மற்றும் சிறுதொழில் துறை அமைச்சர் நாகராஜ், பெங்களூரு மேம்பாட்டுத் துறை வேண்டும் என்றுள்ளார். இந்தத் துறையை தற்போது கவனித்து வருபவர் பசவராஜ் பொம்மை. அமைச்சரவை நியமனங்களில் எடியூரப்பா போல் பசவராஜ் பொம்மை செயல்படவில்லை. 2 அல்லது 3 ஆண்டுகளில் கட்சியில் இணைந்தவர்களை விடுத்து, பாஜகவின் விசுவாசிகளுக்கே அதிக வாய்ப்பு வழங்கி இருக்கிறார். இதற்கு உதாரணம், கர்நாடக பாஜகவின் தீவிர விசுவாசிகளான மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராகவும், ஆர்.அசோகா வருவாய் துறை அமைச்சராகவும், பி.ஸ்ரீராமுலு போக்குவரத்து துறை அமைச்சராகவும், கோவிந்த கர்ஜோல் நீர்ப்பாசன துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் நியமனங்கள் மூலம் எடியூரப்பா 2019-ல் ஆட்சி அமைக்க உதவியவர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கியதில் அதிருப்தி அடைந்த கட்சித் தலைவர்களை திருப்தி அடைய வைத்துள்ளதுடன், பாஜகவின் தீவிர விசுவாசிகளின் நம்பிக்கையை மீட்டெடுத்திருக்கிறார் பசவராஜ் பொம்மை. மைசூர் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் என்.பிரகாஷ் இந்த நடவடிக்கையை சுட்டிக்காட்டி,“ தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் சமாளிக்கும் திறன் பசவராஜுக்கு இருக்கிறது" என்றுள்ளார்.
பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு முன்னாள் அமைச்சரோ, “ எந்தவித அழுத்தத்திற்கும் அடிபணிய வேண்டாம் என்று கட்சியின் டெல்லி தலைமை முதல்வரை கேட்டுக்கொண்டுள்ளது. அதுமட்டுமில்லை, எடியூரப்பாவை போலவே பசவராஜ் பொம்மையும் பெரிய ராஜதந்திரிதான். அவர் மென்மையாகப் பேசுவது போல் தோன்றலாம். ஆனால் அதிருப்தி தலைவர்களை எவ்வாறு கையாள்வது என்பது அவருக்குத் தெரியும். மீதமுள்ள பதவிக்காலத்தை முடித்தால் போதும் என அவர் நினைக்கவில்லை. மாறாக அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை தக்கவைக்க தேவையானதை செய்யத் தொடங்கியுள்ளார்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
அதற்கேற்ப, “ கட்சியில் சில சிறிய பிரச்னைகள் உள்ளன. அவற்றைத் தீர்ப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனது தலைமையிலான இந்த அரசு ஒரு நெருக்கடி தருணத்தில் அமைக்கப்பட்டது என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். என்றாலும் அதிருப்தியில் உள்ள அனைத்து தலைவர்களிடமும் நான் பேசுவேன்" என்றுள்ள பசவராஜ் பொம்மை, அதன் முதல் படியாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஆனந்த்தை சந்தித்து அவரை சமாதானப்படுத்தினார். இதனால் தனது ராஜினாமா அறிவிப்பை வாபஸ் பெற்றார். என்றாலும் மற்ற அதிருப்தி தலைவர்களின் கிளர்ச்சி நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. இதனை தீர்க்காத பட்சத்தில் எடியூரப்பா போல பசவராஜ் பொம்மையின் எதிர்கால திட்டங்களுக்கு அது பெரும் தடையாக மாறும் என்பதில் ஐயமில்லை என்கிறார்கள் கர்நாடக அரசியலை உற்றுக்கவனித்து வருபவர்கள்.