பக்ரீத் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது? இறை தூதர் இப்ராஹிம் நபியின் கனவில் தோன்றிய இறைவன் சொன்னதென்ன?

இறை தூதர் இப்ராஹிம் நபிகளின் தியாகத்தை நினைவு கூறும் ஒரு திருநாளாக துல்ஹஜ் மாதம் 10ம் நாள் பக்ரீத் பண்டிகையானது கொண்டாடப்படுகிறது.
பள்ளிவாசல்
பள்ளிவாசல்Sathish Photography

ஹஜ் பெருநாள் அல்லது தியாகத்திருநாள் என்றழைக்கப்பட்டும் பக்ரீத் பண்டிகையானது உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கியமாக பண்டிகை. இதை ஹஜ் திருநாள் என்றும் கூறுவர். இந்நாளில் அவர்கள் புத்தாடை அணிந்துக்கொண்டு மசூதிகளில் சிறப்புத் தொழுகைகளில் ஈடுபடுவர். இறை தூதர் இப்ராகிம் நபிகளின் தியாகத்தை நினைவு கூறும் ஒரு திருநாளாக துல்ஹஜ் மாதம் 10ம் நாள் பக்ரீத் பண்டிகையானது கொண்டாடப்படுகிறது.

பக்ரீத் பண்டிகை தோன்றியது எப்படி என்பதை பார்க்கலாம்.

இஸ்லாமியர்களால் நம்பப்படும் இப்ராஹிம் என்ற இறை தூதர் 4000 ஆண்டுகளுக்கு முன்பு ஈராகில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

பள்ளிவாசல்
பள்ளிவாசல்Sathish

இறை தூதர் இப்ராஹிம் நபிக்கு, சாரா மற்றும் ஹாஜிரா என, இரண்டு மனைவியர் இருந்தனர். இப்ராஹிம்-க்கு, 85 வயது ஆனபோது, ஹாஜிரா மூலம் ஒரு பிள்ளை பிறந்தது. அவர் பெயர், இஸ்மாயில் நபி. சில ஆண்டுகள் கழித்து, சாரா மூலமாக ஒரு பிள்ளை பிறந்தது. அவர் பெயர் இஸ்ஹாக் நபி. ஒருமுறை, இப்ராஹிம் நபி (அலை)யுடைய கனவில், இறைவன் தோன்றி, 'உம்முடைய மகன், இஸ்மாயிலை, என் பெயரால் அறுத்து, பலி இடு' என்று கட்டளையிட்டான். இறைத் துாதருக்கு வரும் கனவுகள் வெறும் கனவுகள் அல்ல; அவை கடவுளின் கடிதங்கள். இறைவனின் கட்டளையை நிறைவேற்ற, இப்ராஹிம் நபி (அலை), தன் கனவைப் பற்றி, மகன் இஸ்மாயிலிடம் கூறுகிறார். அதற்கு அந்த பிள்ளை, 'தங்களுக்கு அல்லாஹ் என்ன கட்டளையிட்டாரோ, அதை நிறைவேற்றுங்கள். நான் நிச்சயமாக பொறுமையோடு இருப்பேன்' என, கூறினார். என்ன ஒரு நம்பிக்கை பாருங்கள்!பிறகு, இப்ராஹிம் நபி (அலை) தன் மகன் இஸ்மாயிலை அழைத்துக் கொண்டு, மினா எனும் மலையடிவாரத்திற்குச் சென்றார். பிள்ளைப் பாசம் தடுக்காமல் இருக்க, தன் கண்களை, துணியால் கட்டி மகன் கழுத்தில் கூரிய கத்தியை வைத்து ''அல்லாஹ் மிகப் பெரியவன்'' எனக் கூறி வெட்ட தயாரான சமயம் அவருக்கு இறைச்செய்தி வருகிறது.

பள்ளிவாசல்
பள்ளிவாசல்Sathish

அப்போது இறைவன், இஸ்மாயிலுக்கு பதில் ஒரு ஆட்டை பலியிட ஆணையிட்டுள்ளார். 'எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே... அனைத்தின் மீது ஆற்றல் கொண்டவன் அவனே... அவனை தவிர வணக்கத்துக்கு உரியவன் வேறில்லை. நீயே என் அதிபதி...' என்று தன்னை சோதித்த இறைவனுக்கு, நன்றி செலுத்தினார். இதன் நினைவாகவே, இறுதி நபி முஹம்மத் (ஸல்). 'இந்நாளில் நீங்கள் அனைவரும் அந்த தியாகத்தை நினைவில் கொள்ள, உங்களில் வசதியுள்ளவர், ஓர் ஆட்டை குர்பானி கொடுத்து, அதன் கறியை, ஏழைகளுக்கு கொடுத்து கொண்டாடுங்கள்...' என்று சொன்னார்.

அந்த தன்னலமற்ற தியாகங்களை நினைவு கூரும் நாளாக, இன்றைய தியாகத் திருநாள் மலரட்டும். இறைவனுடைய படைப்பிலேயே, மிகச் சிறந்த படைப்பு மனிதன் தான். அவனால், படைக்கப்பட்ட இன்னொரு மனிதனை, நாம் பரிகாசம் செய்வது, இறைவனையே பரிகாசம் செய்வது போலாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com